DreamLand

Wednesday, July 17, 2019

புள்ளியில்லாத கோலம் !!

புள்ளியில்லாத கோலம் !!

அதிகாலை வேளை,
ஞாயிறு புலராத காலை,
சூரிய ஒளி காணாத சோலை,
பல ராகமழை பாடுவது குயிலோ,
மழை வருமோவென ஆடுவது மயிலோ,
சிறு ஆறு மருவி 
ஆனதொரு பெருமருவி,
அருவியினது ஓசைகூட
இனியதான இசையானதோ!

இவை நாடாத மனமே,
நீ தேடுவது எதனை ?
எது இராது கூடுவது உனது வேதனை ?

நெடுமுடியுடையாளது வாசனை வீசாததோ,
தேனுடை மொழி பேசி கேளாததோ,
கொடியிடையுடைய கோதை பாராததோ,
அவளது விரலிடை படாததோ ?

கூறுகளான எனது மனமே கூறுவது கேளடி...

சோதனைகளாலேயான எனது வேதனை போதுமடி,

நீயெனது கடகியாகி உடனுறையாத  காலமே வீணாகுதடி,

மனமோ சாதகமானதொரு முடிவறிய நாடுதடி,

பாதகமானதொரு முடிவு நீ எறிய எனது வாழுதலே முடியுமடி!


~

Wednesday, July 10, 2019

Part 6 - பயணச் சீட்டு... 08-Jan-2019


அவரிடம் சென்று விவரம் கூறினேன். கோடாரியை தவறவிட்ட விறகு வெட்டியிடம், தங்கம், வெள்ளி மற்றும் இரும்பு என மூன்று கோடாலிகளை காட்டிய தேவதையை போல, அவர் என்னிடம் மூன்று மடிக்கணினிகளை காண்பித்து, 'இவற்றில் உங்களுடையது உள்ளதா' என்றார்.

இராமாயண காதையில் 'கண்டேன் சீதையை' என்று அனுமன் உரைத்ததைப் போல, நான் அங்கே கண்டேன் எனது கணினியை. அதற்காக அவர் மற்ற இரண்டு கணினியையும் என்னுடன் எடுத்துச் செல்லவெல்லாம் சொல்லவில்லை.

மாறாக, 'உங்கள் கடவுச் சொல்லை பயன்படுத்தி, கணினியின் உள்நுழைந்து காட்டிவிட்டு, நீங்கள் பெற்று செல்லலாம்' என்றார்.

நான் மடிக்கணினியை திறந்து, எனது கடவுச்சொல்லை தட்டச்சு செய்து, உள்நுழைய முயற்சித்தேன். கடவுச்சொல் தவறு என்று வந்தது.

அவசரத்தில் தட்டச்சில் கூட தவறு செய்கிறோம் என்றெண்ணி, மீண்டும் முயற்சித்தேன். இம்முறையும் தவறு என்று வந்தது.

'சார், நீங்க தமிழா ?' என்று தமிழிலேயே வினவினார் அந்த அதிகாரி. ஏனென்றால், அவருடைய பதிவேட்டில் பதிவதற்காக, என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை கேட்டு பெற்றிருந்தார்.

'ஆமாம் சார்! நீங்களும் தமிழா?'

'ஆமாம் சார்! நீங்கள் தவறான கடவுச்சொல் பயன்படுத்தி, கணினி பூட்டப்பட்டுவிட்டால், நான் கணினியை மேலதிதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டியிருக்கும். பிறகு நீங்கள் தக்க சான்றுகளை சமர்ப்பித்துதான் கணினியை பெறமுடியும்.'

இது என்னடா தமிழனுக்கு வந்த சோதனை என்றெண்ணியவாறே மீண்டும் முயற்சிக்க, அது மீண்டும் தோல்வியில் முடிந்தது.

'சார், உங்க இஷ்ட தெய்வத்தை கும்பிட்டுவிட்டு, நல்ல யோசனை பண்ணி, முயற்சி பண்ணுங்க' என்றார்.

'இஷ்ட தெய்வமெல்லாம் இருந்தா, நான் ஏன் சார் கஷ்டப்பட்டு ஓடிட்டு இருக்கேன். ஆனா உங்க ரெண்டாவது கருத்தை நான் ஆமோதிக்கிறேன்' என்று கூறிவிட்டு, கண்களை மூடிக்கொண்டு நான்குமுறை ஆழமாக சுவாசித்தேன்.

நினைவுக்கு வந்தது. இதுவரை நான் முயற்சித்துக் கொண்டிருந்தது, என்னுடைய விண்டோஸ் கடவுச்சொல்லே அல்ல...அது ஒற்றை அடையாள(Single Sign on) கடவுச்சொல். இம்முறை வெற்றி. கணினியை பெற்றுக்கொண்டு, பதிவேட்டில் கையொப்பமிட்டேன்.

அத்துடன் முடியவில்லை. என்னுடைய 300 டாலர்கள், இடதுபுற கடைக்கோடியில் உள்ளது.

'சார், இங்கிருந்து வாயில் எண் 44கு ஏதாவது குறுக்குவழி இருக்கின்றதா?' என்றேன்.

'இல்லை சார்! நீங்கள் வந்தவழியேதான் திரும்பி செல்லவேண்டும். ஒரே ஓட்டமாக ஓடிவிடுங்கள்', என்றார்.

'ஓடினேன்.. ஓடினேன்..இடதுபுற கடைக்கோடி வரை ஓடினேன்'

எனது விமானத்தின் வாயில் அடைக்கப் படுவதற்கு இன்னும் ஒரு நிமிடம் மட்டுமே மீதமிருந்தது. எனது பயணசீட்டை காண்பித்து, வருகையை பதிவுசெய்து, விமானத்தில் ஏறினேன்.

அந்த ஜெர்மானிய பெண்ணின் பயணச்சீட்டு மட்டும் என் காலடியில் வந்து விழாமல் போயிருந்தால், என்னால் இவ்வளவு வேகமாக ஓட முடியும் என்பது எனக்கு தெரியாமலே போயிருக்கும் என்றெண்ணியவாறே விமானத்தின் கடைக்கோடியில் இருந்த எனது இருக்கை எண் 29ஐ நோக்கி நகர்ந்தேன்.

நடுவில் நின்றிருந்த விமானப் பணிப்பெண் கேட்டார், 'You must have had a very good day sir; You are coming very relaxed'.

முற்றும்.

Tuesday, July 09, 2019

Part 5 - பயணச் சீட்டு... 08-Jan-2019


நான் உடனடியாக விமானத்தினுள் இருந்த பணிப்பெண்ணிடம் விவரம் தெரிவித்தேன். அவர் 'தாங்கள் விரைந்து சென்று பாதுகாப்பு சோதனை செய்யும் அதிகாரியிடம் வினவிவிட்டு வாருங்கள். ஆனால் விமானம் கிளம்புவதற்கு 10 நிமிடம் முன்பாக விமானத்தின் வாயில் மூடப்படும். அதற்கு முன்பாக வரவில்லையென்றால், தாங்கள் விமானத்தை தவற விடுவீர்கள்', என்றார். எனக்கு 10 நிமிட அவகாசம் இருந்தது... விமானத்தை தவறவிடாமல் இருப்பதற்கு

வாயிலில் இருந்த அதிகரியிடமும் விவரம் தெரிவித்தேன். அவர் எனது பயணசீட்டை கேட்டார், நான் எனது கைபேசியிலிருந்த மின்னணு பயணச்சீட்டை அவரிடம் காண்பித்தேன். அவர் விமானத்தில் ஏறியவர்களின் பட்டியலில் இருந்து என்னை நீக்கினார். ஆம், நான் தாமதமாக வந்தால் என்னை தவிர்த்துவிட்டு செல்ல விமானம் தயாரானது.

நான் எனது பையினை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தேன். என் வாழ்நாளில் அதுபோலதொரு ஓட்டம் ஓடியதில்லை. ஓட்டம் மூட்டினை பாதிக்குமென்று படித்ததால், மிதவேக ஓட்டத்தை கூட நிறுத்திவிட்டு, நடைப்பயிற்சி மட்டுமே செய்வதை வழக்கப்படுத்தியிருந்தேன். ஆனால் இன்று ஓடாவிட்டால், விமானத்தை தவற விட்டுவிடுவேன். 300 ஆஸ்திரேலிய டாலர்கள் தண்டம் அழ வேண்டியிருக்கும்.

அதைவிட கொடிய எண்ணங்களெல்லாம் மனதில் வந்து சென்றது. ஒருவேளை மடிக்கணினியை தொலைக்க நேரிட்டால், 3000 டாலர்களாவது தண்டம் அழ வேண்டியிருக்கும். நான் நான்கு டாலர் காபி குடிப்பதற்கே நான்கு முறை யோசிப்பவனாயிற்றே! மடிக்கணினி கிடைக்கவேண்டும், மூச்சிரைக்க ஓடினேன். சற்று களைத்த நேரத்தில் வேகமாக நடந்தேன். 3300 டாலர்கள் மனக்கண்முன் வந்து போனது... மீண்டும் ஓடினேன்.

ஒருவழியாக பாதுகாப்பு சோதனை நடக்கும் தளத்தினை அடைந்தேன். அங்கிருந்த ஒரு அதிகாரியிடம் வினவினால், அவர் மற்றொருவரை கைகாட்டினார். அந்த மற்றொருவர், 'நான் இப்பொழுதுதான், மூன்று மடிக்கணினிகளை தொலைந்த பொருட்களை பாதுகாக்கும் அறைக்கு அனுப்பி வைத்தேன். நீங்கள் அங்கே சென்று வினவுங்கள்', என்றார்.

'அந்த அறை எங்கே இருக்கிறது ?'

'வாயில் எண் 50கு எதிரில்' .

'வாயில் எண் 50 எங்கே இருக்கிறது?'

'கீழ்தளத்தில் வலது புறமாக'.

இது என்னடா வம்பாகிவிட்டது?

'சார் நான் செல்லவேண்டிய விமானத்தின் வாயில் 44, இடதுபுற கடைக்கோடியில் உள்ளது. தாங்கள் உங்கள் பணியாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கணினிகளை இங்கே எடுத்துவர சொல்ல முடியுமா?'.

'நான் பாதுகாக்கும் அறைக்குத்தான் தொடர்புகொள்ள முடியும். ஆனால் அவர் இங்கிருந்து அகன்று ஒரு நிமிடம் கூட ஆகவில்லை. நீங்கள் விரைந்து சென்றால் அவரை வழியிலேயே மடக்கிவிடலாம்'.

நாட்டம் எல்லாம் 3300 டாலர்கள் நட்டத்தை தவிர்ப்பதிலேயே இருந்ததால், வாட்டத்தை மறந்து மீண்டும் ஓட்டம் பிடித்தேன். வலதுபுறம் நோக்கி வேகமாக ஓடினேன்.

எனது கணினி அங்கே இருக்க வேண்டுமே! பொதுவாக பொருட்களை தவறவிட்டால், அவை கேட்பாரற்று அங்கேயே கிடைக்கும், இல்லையேல் காவல்துறையிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கும். இந்த ஊரில் மற்றவர் பொருட்களை எடுத்துச் செல்பவர்கள் மிக மிக குறைவு. ஆகையால் நம்பிக்கை இருந்தது.

வாயில் எண் 54 கண்ணில் பட்டது...50 எங்கே என்று தேடினேன். விரைவாக ஓடியதில், 50ஐ தாண்டி ஓடி வந்திருந்தேன். அவசரத்தில் அண்டாவிற்குள் கூடகை நுழையாது அல்லவா?

மீண்டும் திரும்பி வாயில் எண் 50ஐ நெருங்கினேன். ஒரு இந்தியர் மூன்று மடிக்கணினிகளுடன் பாதுகாப்பு அறைக்குள் சென்று கொண்டிருந்தார்.

தொடரும்...

Part 4 - பயணச் சீட்டு... 08-Jan-2019


சற்றுநேரம் காத்திருந்த பிறகு, விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வந்தது...முதலில் வணிக வகுப்பினர் மற்றும் தொடர் பயணியரை அழைத்தனர். சிறிதுநேரம் கழித்து பொது பிரிவினருக்கான அழைப்பு வந்தது. அன்று சிட்னியில் மழை பெய்துகொண்டிருந்த படியால், அனைத்து பயணியரையும் விமானத்தின் முன்வாசல் வழியாகவே வர அறிவிப்பு வந்தது. முதலில் இருக்கை எண் 20 முதல் 30 வரை உள்ள பயணியர், பிறகு 10 முதல் 19 வரை உள்ள பயணியர்.

முன்புறம் அமர்ந்திருக்கும் பயணியரின் கால்களை இடறிவிடுவதை தவிர்க்கவும், பயணியர் தமது பைகளை தமக்கான அலமாரியில் வைத்து இருக்கையில் அமரும்வரை, பின்வரும் பயணிகள் காத்திருக்க வேண்டியதை குறைக்கவும், அவ்வாறான ஏற்பாடு.

எனது இருக்கை எண் 29 என்பதால் பொதுப்பிரிவில் முதலிலேயே அழைப்பு வந்தது. நான் எனது பையினை அதன் கைப்பிடி பற்றி இழுத்துக்கொண்டே நடந்தேன். எனது பயணசீட்டை சரிபார்த்த பிறகு, விமானத்தின் முன்புற வாயிலை காற்று பாலத்தின்(airbridge :) ) வழியே அடைந்தேன். காற்றுப்பாலத்தில் இருந்து விமானத்தினுள் எனது பையினை இழுத்துக்கொண்டே செல்ல முடிந்தது. விமானத்தினுள் நுழையும்போது, ஒரு பணியாளர் மீண்டும் எனது பயணச்சீட்டை பரிசோதித்தார்.

பிறகு என் இருக்கை நோக்கி எனது பையினை அதன் கைப்பிடி பற்றி இழுத்துக்கொண்டே நடந்தேன். வணிக வகுப்பின் இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த பயணியின் காலில் எனது பையின் சக்கரங்கள் இடறியது. விமானத்தின் இரு புறங்களுக்கு இடையேயான இடைவெளி மிகவும் குறைவு என்பதால், எனது பையினை தூக்கிக்கொண்டு சென்றுவிடுவது சிறந்தது என்றெண்ணிய நான் அதை தூக்கினேன்.

'ஐயோ! என்ன இது? எனது பையின் பளு சற்று குறைந்து இருக்கிறதே!'. பாதுகாப்பு சோதனை முடிந்து இதுவரை எனது பையினை அதன் கைப்பிடி பற்றி இழுத்துக்கொண்டே வந்துள்ளேன். அதனால்தான் அதன் பளு குறைந்துள்ளது என்பதை நான் உணரவேயில்லை.

அப்படியானால் பாதுகாப்பு சோதனை முடிந்து எனது மடிக்கணினியை எடுத்து வைத்தேனா? இல்லையா? அவசரம் அவசரமாக இடதுபுற இருக்கைக்குள் ஒதுங்கி, எனது பையினை பரிசோதித்தேன். அங்கே எனது மடிக்கணினி இருக்கவில்லை!

தொடரும்...

Part 3 - பயணச் சீட்டு... 08-Jan-2019


சிட்னி விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை நடக்கும் தளத்திலிருந்து, ஒரு தளம் கீழாக விமானம் ஏறுவற்கான வாயில்கள் அமைக்கப் பட்டிருந்தன. கீழ்தளம் செல்ல படிக்கட்டுகளும், தானியங்கி படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டிருந்தன. இரண்டு நாட்கள் பயணமுடிவில் நான் எப்போதும் சோர்வாக இருப்பதால், தானியங்கி படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கினேன். கூடவே எனது பையினை அதன் கைப்பிடி பற்றி இழுத்துக்கொண்டே நடந்தேன்.

கீழ்தளத்தில் வலது புறமாக சில சிறிய விமான நிறுவனத்தை சேர்ந்த விமானங்களுக்கான வாயில்களையும், இடதுபுறமாக விர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த விமானங்களுக்கான வாயில்களையும் காணலாம். குவாண்டாஸ் நிறுவனத்தின் விமானங்களுக்கு முற்றிலும் தனியாக வேறு இடத்தில் வாயில்கள் அமைந்திருந்தன.

நான் எப்போதுமே விர்ஜின் ஏர்லைன்ஸ் விமானங்கள்தான். இடதுபுறம் திரும்பியதும் MoVida @ THE AIRPORT என்ற பெயருடன் ஒரு பார் கண்ணில் பட்டது. காபி மற்றும் மது இரண்டும் விற்கப்படும் பார். நான் இந்தியாவிலேயே 10 ரூபாய் புரூ காபி வேண்டுமானால், வாங்கி பருகுவேனே ஒழிய, காபிடே, ஸ்டார்பக்ஸ் போன்ற உயர்தர கடைகளுக்கு சென்று காபி பருகுவதெல்லாம் அரிதிலும் அரிது. மூன்று காரணங்கள்; 1. அங்கேயுள்ள காபி வகைகள் எனக்கு புரிவதில்லை 2. அதையும் மீறி எதையாவது வாங்கி பருகலாம் என்றால் அதன் சுவை சிறிதும் பிடிப்பதில்லை 3.அதைவிட உயர்தர கடைகளில் காபி விலை மிகவும் அதிகம்.

அதே கதைதான் ஆஸ்திரேலியாவிலும்; இங்கே கடைகளில் விற்கும் காபி வகைகள் எனக்கு புரிவதில்லை; இங்குவந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், லாட்டே, பிளாட் ஒயிட், மோக்கா போன்ற பெயர்கள்தான் தெரியுமே ஒழிய, அந்த பெயர்களுக்கு பின்னால் உள்ள செய்முறை எதுவும் நமக்கு சிறிதும் தெரியாது.

அதுமட்டுமின்றி ஒரு நாளைக்கு ஒரு காபிதான்...அதுவும் அதிகாலையி 5 மணியில் இருந்து 6 மணிக்குள் எனது மனைவியுடன் சேர்ந்து பருகும் காபிதான், ஒவ்வொரு நாளின் தொடக்கம் மற்றும் முக்கியமான அம்சம். திருமணமான புதிதில் இருந்து இன்றுவரை தொடர்ந்துவரும் பழக்கம். அலுவலகத்தில் கூட நண்பர்கள் கேலி செய்வதுண்டு, 'என்ன காலை நேர காதலா', என்று. அதற்கும் பதில் கூறிவிடுவேன், 'காதலுக்கு ஏது காலமும் நேரமும் என்று'.

அதைவிட முக்கிய காரணம் விலை...ஒரு காபியின் சராசரி விலை நான்கு ஆஸ்திரேலிய டாலர்கள்...இந்திய ரூபாயின் மதிப்பில் இருநூறு ரூபாய். நான்கு டாலர்கள் கொடுத்து காபி வாங்குவதற்கு பணம் இருந்தாலும் மனம் இருப்பதில்லை. ஆனால்  பிரியாணி வாங்கி உண்ண வேண்டுமென்றால் மட்டும் ஆகும் செலவை பற்றி யோசிப்பதே இல்லை.

ஆனால் அலுவலகரீதியான பயணத்தின் போது ஆகும் செலவிற்கு செலவு அறிக்கை சமர்ப்பித்து ரசீது கொடுத்தால், பணம் கொடுத்துவிடுவார்கள் என்பதால் நான்கு டாலர்களை பற்றி கவலை இல்லை. அந்த கடைக்கு சென்று 'ஒரு மோக்கா, அதிகச் சூட்டுடன்' என்றேன். மோக்கா எப்படி தயாரிக்கிறார்கள் என்பது தெரியாவிட்டாலும், சற்று இனிப்பாக இருக்கும். ஆஸ்திரேலியர்கள் காபியை மிதமான சூட்டில் வாங்கி முப்பது நிமிடம் வரை பருகுகின்றனர். ஆனால் எனக்கு அந்த மிதமான சூடு சற்றும் போதுமானதாக இருப்பதில்லை, அதனால் நான் அதிகச் சூட்டுடன் வாங்கினாலும் 5நிமிடத்தில் குடித்து முடித்துவிடுவேன்.

மோக்கா காபியை ஒருகையில் பற்றிக்கொண்டு, மறுகையில் எனது பையினை அதன் கைப்பிடி பற்றி இழுத்துக்கொண்டே நடந்தேன். எனது விமானத்தின் வாயில் எண்ணிக்கை 44, அது இடது புறத்தின் கடைக்கோடியில் இருந்தது. நான் எப்பொழுதும் தொடர்வண்டி விமான நிலையம் போன்றவற்றிற்கு சற்றுநேரம் முன்பாகவே சென்றுவிடுவதால் மெதுவாக நடைபோட்டேன். 44ம் வாயிலை அடைவதற்குள் எனது காபி காலியாகியிருந்தது.

தொடரும்...

Sunday, July 07, 2019

Part 2: பயணச் சீட்டு... 08-Jan-2019


நம் நாட்டில் பாதுகாப்பு சோதனை என்றால் மேலிருந்து கீழ் வரை தடவி விடுவார்கள். அதனால்தான் நம்மூரில் பெண்களுக்கு தனி வரிசையும்...திரைமறைவு சோதனைகளும். ஆனால் தடவுதல் எல்லாம் இங்கே இல்லை...பாதுகாப்பு வாயிலின் வழியாக வந்தால்மட்டும் போதும். மேலும் பெண்களுக்கு தனி வரிசை எல்லாம் கிடையாது. அதனால்தான் அந்த பெண் என் கண்ணில் பட்டிருந்தார்.

கண்ணிமைக்கும் அரைநொடிப் பொழுதில் கவனித்தது...நேர்த்தியாக வெட்டப்பட்ட கூந்தல், இதமான முகப்பூச்சு, அளவான உதட்டுச் சாயம், வெள்ளை நிறத்தில் கச்சிதமான குட்டைப்பாவாடை உடை, உயரத்தை அதிகப்படுத்தி காட்ட ஹை ஹீல்ஸ் காலணிகள் என மிகவும் அழகாக தன்னை அலங்கரித்திருந்தார்.

ஆண்களானாலும் பெண்களானாலும், அலுவலகம் மட்டுமின்றி, எங்கேயும் தன்னை நேர்த்தியாக அலங்கரித்து, தன்னை இனிமையாக காட்சிப்படுத்துவதில், மேற்கத்திய நாட்டவருக்கு நிகர் மேற்கத்திய நாட்டவர் மட்டுமே. கல்லூரியில் படிக்கும் காலங்களில் சித்தப்பா சொல்வதுண்டு, சட்டையை டக் இன் செய் என்று. அலுவலகம் செல்லும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில், இன்றுவரை நான் அதை சட்டையே செய்தது கிடையாது. நாம் வளர்ந்த சூழல் அவ்வாறானது!

அந்த பாதுகாப்பு அதிகாரி, அந்த பெண்மணியை காலணிகளை கழற்றி தனியாக ஒரு தாம்பாளத்தில் வைத்து சோதனை இயந்திரத்தினுள் அனுப்பிவிட்டு வருமாறு கூறினார். அவரும் சற்று சிரமத்திற்கு பிறகு அவ்வாரே செய்துவிட்டு தான்மட்டும் சோதனை வாயிலின் வழியாக மறுபுறம் வந்தார். இந்தமுறை பீப் பீப் ஒலிக்கவில்லை.

எனது பையினை மீண்டும் சோதித்த அதிகாரி ஒன்றும் பிரச்சினை இல்லை என்று சொல்லிவிட, எனது உடமைகளை சேகரித்துக் கொண்டு, எனது பையினை அதன் கைப்பிடி பற்றி இழுத்துக்கொண்டே நடந்தேன். எனக்கு முன்பாக அந்த வெள்ளைக்கார பெண்மணி நடந்து கொண்டிருந்தார். பயணச்சீட்டை பிடித்திருந்த கையினை அவருடைய கைப்பையின் கைப்பிடிக்குள் நுழைத்து, கைப்பையை தூக்கிக்கொண்டும், மற்றொரு கையில் கழற்றப்பட்ட காலணிகளை தூக்கிக்கொண்டே, மற்றுமொரு பையை அதன் கைப்பிடி பற்றி இழுத்துக்கொண்டும் நடந்து கொண்டிருந்தார்.

20 அடி தொலைவில் ஒரு மேசை போடப்பட்டு, அதன் இருபுறமும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. தனது காலணிகளை அணிந்துகொள்ளும் பொருட்டு, அவர் தனது கைப்பையையும், பயனச்சீட்டையும், மேசைமீது வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தார். நானும் எனது உடமைகளை தத்தமது உறைவிடம் சேர்க்கும் பொருட்டு, மேசையின் மறுபுறத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

அந்தநேரம் எங்கோயிருந்து வந்த காற்று எனைப்பார்த்து வீசியது...கூடவே மேசைமீது வைக்கப் பட்டிருந்த அவரது பயணச்சீட்டை எனது காலடியில்கொண்டுவந்து சேர்த்தது! மற்றவர்களுக்கு உதவுவதில் நாம் எப்போதுமே முன்னோடியாதலால், நான் அந்த பயணச்சீட்டை எடுத்து அவரிடம் நீட்டினேன்.

அவர், 'டான்கே(Danke)' என்றார்.

ஓ! ஜெர்மானிய பெண்ணா என்று நினைத்தவாறே, 'பிட்டே(Bitte)', என்றேன். அலுவலக நிமித்தமாக ஜெர்மனியில் சில மாதங்கள் தங்கியிருந்த படியால், சில ஜெர்மன் வார்த்தைகள் எனக்கு பரிச்சயமாயிருந்தன.

அவர் பதிலுக்கு சற்று நீளமாக ஜெர்மன் மொழியில் ஏதோ பேசினார் அல்லது கேட்டார்.

நான் பதிலுக்கு, 'Ein, Swei, Thri, Fia, Funf...அவ்வளவுதான் எனக்கு தெரிந்த ஜெர்மன். நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா?' என்று சிரித்துக்கொண்டே ஆங்கிலத்தில் வினவினேன்.

அவர் மீண்டும் ஜெர்மன் மொழியில்தான் பதில் கூறினார். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்; ஒன்று அவருக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரிந்திருக்கவில்லை.. இரண்டாவது காரணத்தை உங்களின் கற்பனைக்கும் முடிவுக்கும் விட்டுவிடுகிறேன்.

நான் புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தேன். அவர் ச்சூஸ் (Tschüss) சொல்லிவிட்டு நகர்ந்தார். நானும் எனது உடமைகளை எடுத்துக்கொண்டு, மன்னிக்கவும், எனது பையினை அதன் கைப்பிடி பற்றி இழுத்துக்கொண்டே நடந்தேன்.

தொடரும்...

பயணச் சீட்டு... 08-Jan-2019

பயணச் சீட்டு... 08-Jan-2019

பயணம் ஒவ்வொருவரது வாழ்விலும் எவ்வளவு தவிர்க்க முடியாத  அங்கமாகிவிடுகிறது. சுற்றுலாவுக்காக, குடும்பம் அல்லது உறவினர்களை சந்திக்க, அலுவலக நிமித்தமாக என எண்ணற்ற குறிக்கோள்களுடன் அல்லது குறிக்கோள்கள் ஏதுமற்ற தேடலுக்கான பயணங்கள். இனிமையானவை பல, இன்னல்கள் நிறைந்தவை சில, துயரங்களில் முடிவது சிற்சில! ஆனால் அந்த பயணங்கள் தரும் அனுபவங்களும் படிப்பினைகளும் நம் வாழ்நாளின் இறுதிவரை பயணித்து வருபவை!

எனது அப்பா தனது இளவயதில், 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோவை நகரத்திற்கு சென்று ஒரேநாளில் 20 ருபாய் செலவுசெய்துவிட்டு வந்ததை இன்றுவரை நினைவு கூர்ந்து வருகிறார். எனக்கோ பள்ளியில் படித்துவந்த வரையில், கோவையிலுள்ள சித்தப்பா வீடு, திருப்பூரிலுள்ள அத்தையரின் வீடு, கொடிவேரி அருகேயுள்ள சதுமுகையில் உள்ள பாட்டி வீடு  தவிர்த்து பயணப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலும் பத்தாம் வகுப்பு முடிக்கும்வரை தனியாக பயணம் செய்யவெல்லாம் அனுமதியே கிடையாது.

நான் மேற்கொண்ட முதல் தொலைதூர பயணம் என்பது, சென்னையை நோக்கிய பயணம்! பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருந்த மே மாதம், எனது அண்ணனின் திருமணத்திற்காக பெரியப்பா அனைவரையும் தொடர்வண்டியில் அழைத்து சென்றார். திருப்பூரில் இருந்து சென்னைக்கு 8 மணி நேரம் பிடிக்குமாம், அது இரவு நேரப்பயணம் என்பதால் படுக்கை வசதி கொண்ட தொடர்வண்டியில் முன்பதிவு செய்துள்ளாராம், இரவு முழுதும் உறங்கிக்கொண்டே செல்லலாமாம் என்று நண்பர்களிடம் பெருமை பீத்திவிட்டுச் சென்ற பயணம். குதூகலத்துடன் ஏறி அமர்ந்ததும் அப்பா கேட்டார், 'ஏண்டா, ரயிலில் இதுக்கு முன்னாடி போயிருக்கியா?'

அனைவர் முன்னிலையிலும் கேட்டுவிட்டதால் சற்றே அவமானமாக போய்விட்டது, அதனால்  கத்தவேண்டும் போலிருந்தது, 'நீ எங்கயாவது கூட்டிட்டு போயிருக்கியா?' என்று. ஆனால் எதிர்த்து பேசுவதெல்லாம் 'அப்பொழுது' வாடிக்கை இல்லையாதலால், 'இல்லை' என்ற ஒற்றை வார்த்தையில் என்னுடைய பதில் முடிந்தது.

ஆனால் இன்றோ வெளிநாட்டில்...அலுவலக நிமித்தமாக ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களுக்கும் பயணிப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. மாதம் ஒரு முறையாவது பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் பயணம் எனது மனைவிக்கு சிறிதும் பிடிப்பதில்லை...ஆம் அவரையும், மகனையும் விட்டுவிட்டு நான் தனியாக மேற்கொள்ளும் பயணம் அவருக்கு சிறிதும் பிடிப்பதில்லை.

இதோ நேற்று(07Jan2019) மெல்போர்னில் இருந்து சிட்னி நோக்கி அலுவலகரீதியாக வந்த வேலை முடிவடைந்து, இன்று(08Jan2019) மெல்போர்ன் திரும்புவதற்காக சிட்னி விமானநிலையம் வந்தடைந்தேன், எனது உடமைகளுடன். இங்கே நான் கொண்டுவந்திருக்கும் பையினை பற்றி கூறவேண்டும். ஒரேநாளில் முடியும் பயணம் என்றால் மடிக்கணினியை தோள்பையில் சுமந்து வருவது வழக்கம். இரண்டு நாள் பயணமாதலால், இரவு உடை, மறுநாளுக்கான உடைகளை எடுத்து வருவதோடு மட்டுமல்லாமல், திரும்பிவரும்போது என் வீட்டு தலைவருக்கான தின்பண்டங்களையும் வாங்கி வரவேண்டுமென்பதால் இரண்டு வழிகளில் பயன்படுத்தவல்ல ஒரு பையினை எடுத்து வந்திருந்தேன். அதாவது, சுமை குறைவாக இருந்தால் தோளில் சுமந்து செல்லலாம். சுமை அதிகமாக இருப்பின், சக்கரங்களின் துணையுடன் இழுத்துக்கொண்டு செல்லலாம்.

நமது வாழ்க்கையை எளிதாக்க, நமது நேரத்தை பயனற்ற வழியில் செலவிடுவதை குறைக்க எண்ணற்ற இயந்திரங்கள் கண்டுபிடிக்க பட்டிருந்தாலும், அவற்றில் இந்த சக்கரங்கள் முன்னோடியானவை என்பது என் தாழ்மையான கருத்து! இரண்டு நாள் பயணமுடிவில் எனது பையின் சுமை கூடியிருந்ததால் அதன் கைப்பிடி பற்றி இழுத்துக்கொண்டே நடந்தேன்.

பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் காத்திருக்கும் போதே, எனது மடிக்கணினியை வெளியே எடுத்து வைத்துக்கொண்டேன். பாதுகாப்பு சோதனையில் மடிக்கணினியை ஒரு தாம்பாளத்திலும், பணப்பை, அரைக்கச்சு(Belt) மற்றும் கைபேசி ஆகியவற்றை மற்றொரு தாம்பாளத்திலும் வைத்து, எனது பையினையும் சேர்த்து சோதனை இயந்திரத்தினுள் அனுப்பிவிட்டு, நானும் சோதனை வாயிலின் வழியாக மறுபுறம் சென்றேன்.

எனது உடமைகளை எடுப்பதற்காக காத்துக்கொண்டிருந்த வேளையில், எனது பையினை மீண்டும் பரிசோதிக்க வேண்டுமென அதிகாரி கூறிவிட, அங்கே பணியிலிருந்த மற்றோர் அதிகாரி எனது பையினை எடுத்துக்கொண்டு, பரிசோதனை இயந்திரத்தினுள் மீண்டும் அனுப்பும் பொருட்டு மறுபுறம் சென்றார். நான் தின்பண்டங்களைத்தானே எடுத்து வந்தேன், தீப்பற்றும் பொருள்கூட எதுவும் எடுத்து வரவில்லையே என்று சற்றே அச்சத்துடன் காத்திருந்த வேலையில் கவனித்தேன்,

எனக்கு அருகாமையில் உள்ள வரிசையில் ஒரு இளவயது வெள்ளைக்கார பெண்மணி, பாதுகாப்பு வாயிலில் நுழையும்போது, அந்த வாயில் பீப் பீப் என்று சத்தமிட்டது...

தொடரும்...

Monday, July 01, 2019

பயணக்குறிப்பு 27-ஜூன்-2019



இன்றைய பயணம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னிலிருந்து, டவுன்ஸ்வில் நகரத்தை நோக்கி. இடையில் பிரிஸ்பேன்  நகரத்தில் 1 மணி நேரம் காத்திருப்பு. மெல்போர்னிலிருந்து பிரிஸ்பேன் இரண்டு மணி நேரப்பயணம், பிரிஸ்பேனில் இருந்து டவுன்ஸ்வில் இரண்டு மணி நேரப்பயணம்.

காலை 4:45 மணிக்கு வீட்டிலிருந்து தொடங்கிய பயணம் மதியம் 12:30 குத்தான் முடிவுற்றது. காலை 6 மணிக்கு புறப்படவேண்டிய விமானத்தின் சக்கரம் பழுதடைந்ததால், புதிய சக்கரம் மாற்றிவிட்டு கிளம்ப 1.5 மணி நேரம் கூடுதலாக ஆகிவிட்டிருந்தது. கெட்டதிலும் ஒரு நன்மையாக, அதே விமானம் பிரிஸ்பேனில் இருந்து டவுன்ஸ்வில்லும் செல்வதால், இணைப்பு விமானத்தை தவறவிடுவோம் என்ற கவலை இல்லை.

எப்பொழுதும் தூங்கி வழிந்துகொண்டோ, கைபேசியை நோண்டிக்கொண்டோ செல்லும் நான் இம்முறை வழித்துணையாக புத்தகங்களை எடுத்து வந்திருந்தேன். தமிழ் புத்தகங்கள்! மெல்போர்ன் நகரில் விமானம் ஏறி அமர்ந்ததும் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க தொடங்கிவிட்டேன். விமானம் மேலெழும் நேரத்தில்தான் சக்கரத்தின் பழுது தெறியவந்ததால் அனைவரையும் விமானத்திலேயே அமரவைத்துவிட்டு, சக்கரத்தை மாற்றினார்கள். நான் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தேன்!

1 1/2 மணி நேரத்திற்கு பிறகு விமானம் கிளம்பியது. நான் அப்பவும் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தேன்! என்னருகில் ஒரு நடுத்தர வயதுடைய சீன பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் சற்று நேரத்திற்குள்ளாக உறங்கிவிட்டிருந்தார். நான் அப்பவும் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தேன்!

மீண்டும் ஒரு அரைமணிநேரம் கழிந்தபிறகு, இயற்கை அன்னையிடமிருந்து அழைப்பு வந்தது. என்னருகே அமர்ந்திருந்த சீன பெண்மணியையும், அவருக்கு அடுத்ததாக அமர்ந்திருந்த ஒருவரையும் எழுப்பிவிட்டு சென்றால், ஓய்வறைக்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது! விமானத்தில் ஏறியமர்ந்து 2 மணி நேரம் ஆகிவிட்டபடியால் இயற்கை அன்னை, அனைவரையும் ஒருசேர அழைத்திருக்கிறார் போலும்! சற்றுநேர காத்திருப்புக்கு பிறகு இயற்கை அன்னையின் அழைப்பை பூர்த்திசெய்துவிட்டு இருக்கைக்கு திரும்பினேன்.

சாளரத்தினோர இருக்கையில் சாதகங்களும் உண்டு பாதகங்களும் உண்டு. இரண்டுபேரைத் தாண்டித்தான் வெளியேறவும் முடியும், உள்நுழையவும் முடியும்! இயற்கை அன்னையின் அழைப்பை பூர்த்திசெய்ய சிறிது கூடுதல் நேரம் ஆகிவிட்டிருந்தபடியால் அந்த சீன பெண்மணி மீண்டும் உறங்கிவிட்டிருந்தார்! அவரை தொந்தரவு செய்து எழுப்பிவிட்டு என் இருக்கையில் வந்தமர்ந்தேன்.

இன்னும் ஒருமணி நேர பயணம் மீதமிருப்பதால், புத்தகத்தினுள் தொலைந்துவிடலாம் என்று எத்தனித்தேன்.

'மன்னிக்க வேண்டும். நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா ?' என்று ஆங்கிலத்தில் கேட்டார் அந்த சீன பெண்மணி.

'நிச்சயமாக'.

'இது இந்தி மொழியில் உள்ள புத்தகமா?'

'இல்லை, இந்த புத்தகத்தில் உள்ள மொழி தமிழ்'

'தமிழ் இந்தியாவில் பேசப்படுகிறதா? நான் அனைவரும் இந்தி பேசுபவர்கள் என்று எண்ணியிருந்தேன்!'

'பெரும்பான்மையான மக்களால், வட இந்தியாவில் பேசப்படும் மொழி மட்டுமே இந்தி. ஆனால் இந்தி மட்டுமே இந்தியாவின் மொழி அல்ல!'

'அப்படியா ? தமிழ்மொழி எத்துணை பேர் பேசுகிறார்கள்?'.

எனது மாநிலத்தில் மட்டும் 7 1/2 கோடி பேர் தமிழ் பேசுபவர்கள் உள்ளனர் என்று தொடங்கி...

இந்தியாவில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை, அலுவலக மொழிகளின் எண்ணிக்கை வழியே சென்று...

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பற்றிய விமானம் ஏறி...

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா மற்றும் இதர நாடுகளில் பல தலைமுறைகளாக வசித்துவரும் தமிழினூடே பயணித்து....

இந்தியாவில் இந்தி எவ்வாறு மற்ற மொழிகளை ஆக்கிரமிக்கின்றது, அதை தொடர்ந்து நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்ற தளத்தில் இறங்கினேன்.

மிகவும் ஆர்வமாக கேட்டுக்கொண்ட அவர், 'தமிழ் மொழியின் வயது என்ன? அது எப்போதிருந்து வழக்கத்தில் இருக்கிறது?' என்றார்.

'5000 ஆண்டுகள் இருக்கலாம் என்கிறார்கள்! அது சரியானதா என்று எனக்கு தெரியாது. ஆனால், உலகின் பழமையான மற்றும் இன்றும் பழக்கத்தில் உள்ள மொழிகள் என்று கூகுளில் தேடினால், உங்களின் மாண்டரின்(Chinese) மற்றும் எங்கள் தமிழ் இரண்டும் அதில் இடம் பெற்றிருக்கும்! அவசியம் நீங்கள் ஒருமுறை தேடி பாருங்கள்!' என்று கூறிவிட்டு முடிந்தது அந்த உரையாடல். இடையில் சீனாவை பற்றியும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வு பொருத்தம்(Coincidence):

நான் படித்துக்கொண்டிருந்த புத்தகம் ஆர்.முத்துகுமார் எழுதிய 'மொழிப்போர்' என்ற புத்தகம். இந்தி திணிப்பை எதிர்த்து திராவிடர்கள் செய்து கொண்டிருக்கும் போராட்டங்களை பற்றிய சுருக்கமான வரலாறு!