DreamLand

Wednesday, October 28, 2020

தீபாவளி...கத்திப்பாரா...திமுக

Nov-2002: கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்து நான்கு மாதங்கள் முடிந்திருந்த காலம். அதுவரையிலும் தீபாவளியை பெரிதாக கொண்டாடியது கிடையாது. காசு இருப்பவர்களுக்குத்தானே பண்டிகை எல்லாம்; தீபாவளிக்கு புதுத்துணி கிடைத்தால், அதுவே எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. 


நல்லவேளை பள்ளிகளில் யுனிபார்ம் வைத்தார்கள்; யுனிபார்மை கண்டுபிடித்தவர்கள் வாழ்க! இல்லையென்றால், மற்றவர்க்கு நிகராக கலர் ஆடை உடுத்துவதெல்லாம் பொருளாதாரத்திற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துபவை. தீபாவளி முடித்து பள்ளிக்கு செல்லும் அந்த ஒரு நாளன்று பள்ளிகளில், கலர் ஆடை அணிந்து வரலாம்; அதாவது தீபாவளிக்கு எடுத்த துணியை மாணவர்கள் அணிந்து வருவது வழக்கம். ஆனால் நான் பல வருடங்கள் யூனிபார்மில்தான் பள்ளிக்கு சென்றேன். எங்க வீட்ல பொங்கல்தான் கொண்டாடுவோம், அதனால தீபாவளிக்கு துணி எடுக்கலை என்று சொல்லுவதை பழக்கமாக்கிக் கொண்டேன்.


சிவகாசியில் குழந்தைகள் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதால், குழந்தை தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்த, மாணவர்கள் பட்டாசு வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று பள்ளியில் 9 அல்லது 10ம் வகுப்பு படிக்கும்போது, ஆசிரியர் அறிவுறுத்தியபடியால், பட்டாசு வாங்குவதை தவிர்த்தே வந்திருந்தேன். இதிலும் ஒரு வசதிதானே, தீபாவளியை கொண்டாட வேண்டியதில்லை.


ஆனால் கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்து நான்கு மாதங்கள்; மாதம் தோறும் நிலையான வருமானம். நெடுங்காலமாக எங்கள் வீட்டில் நிகழாத நிகழ்வு, அந்த நிலையான வருமானம். அன்று நான் வாங்கியது 7500 ரூபாய்தான்; ஆனால் பொருளாதார மந்த நிலையால், IT வேலைவாய்ப்பு குறைந்திருந்த காலத்தில், இன்ஜினியரிங் முடித்தபிறகு நண்பர்கள் பலர் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தபோதும், சிலர் மேற்படிப்பு படிக்க சேர்ந்திருந்த போதும், எனக்கு ஒரு IT கம்பெனியில் வேலை கிடைத்து, மாதம் 7500 ரூபாய் வாங்கியது எனக்கு அப்போதைக்கு நிறைவாகவே இருந்தது.


அந்த நிறைவுடன் தீபாவளி விடுமுறையைக் கொண்டாட சென்னையில் இருந்து புளியம்பட்டி சென்று, தீபாவளிக்கு புதுத்துணி எல்லாம் வாங்கி அணிந்து, நண்பர்களுடன் நேரம் செலவழித்துவிட்டு, திரும்ப சென்னை வர ரயிலில் டிக்கெட் கிடைக்காமல், முதன் முறையாக, புளியம்பட்டியில் இருந்து சென்னைக்கு பேருந்தில் பயணித்தேன்.


அப்போது Mettur Super Service என்ற ஒரு பேருந்து சர்வீஸ், மேட்டுப்பாளையத்தில் இருந்து, சென்னை நோக்கி செல்லும். எங்கள் ஊருக்கு இரண்டு டிக்கெட் ஒதுக்கீடு செய்திருந்தார்கள். அதில் ஒரு டிக்கெட் எனக்கு கிடைத்தது; பேருந்திற்காக காத்திருக்கும்போதுதான் தெரிந்தது, அந்த இன்னொரு டிக்கெட் என்னுடைய நண்பன் ஒருவன்தான் எடுத்திருந்தான். இருவரும் அரட்டையுடன் அந்த பயணத்தை ஆரம்பித்தோம்.


2002ம் ஆண்டு நான்கு வழி புறச்சாலைகள் எல்லாம் வந்திராத காலம்; மாலை 6 மணிக்கு தொடங்கிய பயணம் அனைத்து சிறு நகரங்களின் வழியே பயணித்து, காலை 8 மணிக்கு கத்திப்பாரா ஜன்சனுக்கு சற்று முன்பாக போக்குவரத்து நெரிசலில் நின்றுவிட்டது. அப்போது மதுரவாயல் பைபாசும் வந்திராத காலம், கோயம்பேடு செல்லும் வாகனங்கள், சென்னை நகரத்தினுள்ளே பயணித்து கோயம்பேடு அடைய வேண்டும். அதனால் நகரத்திற்குள் ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல் ஏற்படும் காலம்.


ஓட்டுனரும் சற்றே கடுப்பில் அமர்ந்திருந்தார். கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு பிறகு, பொறுமை இழந்து, அவரிடம் சென்று, 'அண்ணே, நான் வேளச்சேரி போகணும். இங்க இறங்கினா போக முடியுமா?' என்று கேட்க. 'அட தம்பி! நீ முன்னாடியே கேட்டிருக்கலாம்ல?', என்று கேட்டுவிட்டு வேளச்சேரி செல்ல வழி காட்டிவிட்டு இறக்கி விட்டார்.


ஆனால் இன்று கோயம்பேடு செல்லும் பேருந்துகள், பெருங்களத்தூர் நெரிசலைத் தாண்டியதும்,மதுரவாயில் பைபாஸ் வழியாக விரைவாக சென்றடைகின்றன; நகரத்திற்குள் வரும் தனியார் வாகனங்களும் கத்திப்பாரா flyover காரணமாக ஜங்சனில் மாட்டுவது இல்லை. இந்த இரண்டும் சாத்தியமானது, கலைஞர் தலைமையிலான திமுக அரசினால்தான். எனக்கு தாமதமாகத்தான் புரிந்தது. அனைவருக்கும் புரியும் காலம் விரைவில் வரும். அந்த காலம் வந்த பின்னர் பெருங்களத்தூர் நெரிசலும் குறைக்கப்படும் என்ற நம்பிக்கையுடன்...


Reservation for Government schools

 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்தது. உண்மையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறுதான் இதுதொடர்பாக உருவாக்கப்பட்ட கமிஷன் பரிந்துரைத்திருந்தது. ஆனால் அதிமுக அரசுதான் இதை 7.5 சதவீதமாக குறைத்து விட்டது.


==> இந்த இட ஒதுக்கீடே தவறானது...இதில் 10% என்ன 7.5% என்ன? பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது இருக்கவே கூடாது. ஒருவரின் பொருளாதார நிலை மாறிக்கொண்டே இருக்கக் கூடியது; மற்றும் பொருளாதாரத்தை குறைத்துக் காட்டி சான்றிதழ் பெறுவது என்பதும் நம் நாட்டில் எளிதானது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது, அடிப்படையில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடே ஆகும்.


மருத்துவ படிப்பை பொறுத்தவரை, neet தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருப்பதாலும், NEET தேர்வுகளுக்கு கோச்சிங் அவசியம் என்பதாலும், பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையில் இருப்பவர்களும், அரசு பள்ளியில் enroll செய்துவிட்டு, தனியார் கோச்சிங் சென்டர் மூலமாக NEET கோச்சிங்கும் பெற்றுக்கொண்டு, அரசு பள்ளியின் இட ஒதுக்கீட்டையும் பெற முயற்சி செய்வர்.


அதனால் இந்த இட ஒதுக்கீட்டை கொண்டுவரவும் கூடாது...NEET தேர்வு முற்றிலும் தடை செய்யப்படவும் வேண்டும்...சாதிவாரி இட ஒதுக்கீட்டிற்கு எந்த பங்கமும் நேராமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.


#ADMKFails

Thursday, October 15, 2020

Engineering Vs MSc Software Systems

உறவினர் ஒருவர் தனது மகளை, +2 முடித்தபிறகு கல்லூரியில் சேர்க்க சென்றிருந்தார். அவரிடம் நான் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் சேர்க்குமாறு பரிந்துரைத்திருந்தேன்.


எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால், இன்ஜினியரிங் கவுன்சிலிங் செல்லாமல், இப்போதே ஏதாவது கல்லூரியில் சேர்த்து விடலாம் என்று நினைத்து கோவையில் உள்ள ஒரு கல்லூரிக்கு கூட்டி சென்றிருக்கிறார். அவர் கல்லூரியில் இருந்தபோதுதான் எனக்கு தகவல் தெரிந்து அவரை அழைத்தேன்.


இப்போது இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என்று சொல்கிறார்கள்; அதனால் வேறு கோர்ஸ் சேர்த்துவிடுங்கள் என்று யாரோ கூறியதாலும், +2 மார்க் சற்று குறைந்ததாலும், கல்லூரியில் இப்போதே சேர்க்க வந்திருக்கிறேன் என்றார். சரி, என்ன கோர்ஸ் சேர்க்க போகிறீர்கள் என்றால் M Sc (Software systems) - 5 years integrated course என்றார்.


அவரிடம் கடைசி நேரத்தில் பேசி கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மற்றும் M Sc (Software systems) கோர்ஸ்களுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை, MSc ல் ஒரு வருடம் அதிகமாக ஆகும் என்பதை எடுத்துரைத்து, இன்ஜினியரிங் படிப்பதன் பலன்கள் எல்லாவற்றையும் விளக்கி சொல்லி, அவரை அதே கல்லூரியில், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் கோர்ஸில் சேருமாறு செய்தேன்.


அவர் மீண்டும் கவுன்சிலிங் சென்று, அதே கல்லூரியில் சேரும்போது, கலைஞர் கொண்டுவந்து முதல் தலைமுறை பட்டதாரிக்கான, கட்டண விலக்கு அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள் என்றார். மகிழ்ச்சி!


விவரமறியாமல் வாட்சப்பில் வருவதை எல்லாம் அறிவுரையாக அள்ளி தெளிக்காதீர்கள் தோழர்களே. இது குழந்தைகளின் எதிர்காலம். 


இப்படித்தான் எலக்ட்ரானிக்ஸ் படித்தால் சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வர்ட் இரண்டு துறைக்கும் பணிக்கு செல்லலாம், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தால் சாப்ட்வேர் மட்டும்தான் செல்ல முடியும் என்று கொஞ்சம் குழப்பி விட்டனர். இதனால் அதிக மார்க் இருந்தும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்காம, எலக்ட்ரானிக்ஸ் படிச்சிட்டு, சாப்ட்வேர் பீல்டுல வந்து கஷ்ட பட்டவங்க நிறைய பேர்.

Thursday, October 08, 2020

 தமிழ் நாட்டு தலைவர்களின் தபால் தலைகள்!


மற்ற தலைவர்களுக்கு, தமிழ் வளர்த்த அறிஞர்களுக்கு இல்லாத சிறப்பு, அறிஞர் அண்ணாவிற்கும், தந்தை பெரியாருக்கும் உண்டு. இவர்கள் இருவரின் தபால் தலையிலும், இவர்களின் பெயர் கையொப்பமாக தமிழில் இடம்பெற்றிருப்பது.


அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு, அவருக்கு தபால் தலை வெளியிட முடிவு செய்யப்பட்டு, அவரின் புகைப்படம் கேட்கப்பட்டபோது, கலைஞரால் வழங்கப்பட்ட புகைப்படம்...தமிழ் நாட்டின் தலைமகன் அறிஞர் அண்ணாவின் பெயரை தபால் தலையில் தமிழில் கொண்டு வரவேண்டும் என்ற முடிவுடன், அவருடைய கையெழுத்துடன் வழங்கப்பட புகைப்படம்.