DreamLand

Wednesday, April 19, 2023

நியூசிலாந்து பயணம்! - 1st day

 25-Dec-2022: நியூசிலாந்து மற்றும் குயின்ஸ்லாந்து செல்ல மூட்டை முடிச்சுகள் அனைத்தையும் கட்டி தயாரான பிறகு உறவினர் சௌந்தர் அவர்கள் எங்களை விமான நிலையத்தில் டிராப் செய்ய வந்தார். நியூசிலாந்தில் செலவழிப்பதற்கு Forex Card வாங்கிக் கொண்டு சென்றிருந்தோம். இருந்தாலும் ஒரு 200 டாலர்கள் கையில் கேஷ் ஆக வைத்துக் கொள்ளலாம் என்று, பணத்தை மாற்றிக்கொள்ள விமான நிலையத்தில் இருக்கும் கரன்சி எக்ஸ்சேஞ்ச் ஆபீசுக்கு சென்றோம். ஆனால் அங்கு எக்ஸ்சேஞ்ச் ரேட் மிகவும் அதிகமாக இருந்தது; அதாவது 200 ஆஸ்திரேலியா டாலர்கள் கொடுக்கும் பொழுது வெறும் 175 நியூசிலாந்து டாலர்கள் மட்டுமே கிடைத்தது.  ஆனால் இதுவே பாரக்ஸ் கார்டு மூலம் ஒரு ஆஸ்திரேலியா டாலருக்கு ஒரு நியூசிலாந்து டாலர் என்ற அளவில் கிடைத்தது.

விமானம் செக்கின் செக்யூரிட்டி செக்கிங் மற்றும் குடியேற்ற செக்கிங் அனைத்தையும் முடித்து எங்களது விமானத்திற்கான நுழைவாயில் காத்திருப்பு அறையை அடைந்தோம். காத்திருப்பு அறையில் இருந்தபோது நாங்கள் கட்டி எடுத்துக்கொண்டு சென்றிருந்த பிரியாணியையும் நன்றாக சாப்பிட்டுவிட்டு விமானம் போர்டிங் அழைப்பு வருவதற்காக காத்துக் கொண்டிருந்தோம்.



4:40 மணி விமானத்திற்கான அழைப்பு எங்களுக்கு 4 மணிக்கு வந்தது அனைவரும் ஆர்வமுடன் விமானம் ஏற தயாரானோம். சிறுவர்கள் உடன் இருந்தால் விமானம் போர்டிங் செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டதால் நாங்கள் முதலாகவே சென்று விமானம் ஏறி விட்டோம். முதலில் ஏறிய கார்த்திக் அவனுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்ததும் முன்னிருந்த தொடுதிரையில் என்ன என்ன வசதிகள் உள்ளன, எந்த கார்ட்டூன் திரைப்படங்கள் உள்ளன, எவ்வாறு மற்ற இருக்கையில் உள்ள பயணிகளுடன் அந்த தொடுதிரையின் வழியாகவே தொடர்பு கொள்வது என்று அனைத்தையும் ஆராய்ந்து கண்டுபிடித்து முடித்தார்.

அதுமட்டுமின்றி நமக்கு வேண்டிய உணவை நாம் தொடுகிறேன் வழியாகவே ஆர்டர் செய்ய வசதி இருந்தது. நாங்கள் இதற்கு முன்பு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த போது கூட மேலே பொத்தானை அழுத்தி, விமான பணிப்பெண் ஒருவரை இருக்கைக்கு வர வைத்து அவரிடம் தான் என்ன உணவு இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டு எங்களுக்கு இந்த உணவை வழங்குங்கள் என்று ஆர்டர் செய்ய முடியும். ஆனால் ஏர் நியூசிலாந்து விமானத்தில் எங்களுக்கு முன்பிருந்த தொடுதிரையின் வழியாக விமானத்தில் உள்ள உணவு, குடிநீர், குளிர்பானங்கள், மது வகைகள் என்று அனைத்தையும் கண்டறிந்து நமக்கு தேவையான உணவை நாமே தேர்வு செய்து ஆர்டர் செய்ய முடியும்.

விமானத்தில் வழங்கப்பட்ட உணவை உண்டு முடித்த பின்பு சிறிது நேரம் ஒவ்வொருவரும் திரைப்படம் பார்த்தோம். ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகருக்கும் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கும் இடையிலான பயண நேரம் வெறும் மூன்றரை மணி நேரங்கள் என்பதால், எங்களுக்கு முழு திரைப்படம் பார்க்க கூட நேரம் போதவில்லை அதற்குள்ளாக விமானம் இரவு 10 மணியளவில் ஆக்லாந்து நகரை வந்தடைந்திருந்தது.



விமானம் தரை இறங்கியதும் குடியேற்ற சோதனை முடித்து எல்லை பாதுகாப்பு சோதனையை அடைந்தோம். நியூசிலாந்து நாட்டின் பயோ செக்யூரிட்டி சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையானவை! ஆஸ்திரேலியாவை போலவே! உணவுப் பொருட்கள், தாவரங்கள், விலங்குகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், ஏரி குளம் ஆறுகள் போன்று நல்ல நீரில் பயன்படுத்திய காலணிகள் ஆகியவற்றை அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் கொடுக்கும் படிவத்தில் நாம் கொண்டு வந்திருக்கும் பொருட்களை பட்டியலிட வேண்டும். நாம் படிவத்தில் பட்டியலிட்ட பொருட்களை பயோ செக்யூரிட்டி அலுவலர்கள் கண்டறிந்து எடுத்து குப்பையில் வீசி விடுவார்கள். நாட்டிற்குள் அனுமதிக்கப்படாத பொருட்கள் எதையாவது நாம் எடுத்துக் கொண்டு வந்திருந்து, அதை அவர்களின் விண்ணப்பத்தில் நாம் பட்டியலிடாமல் விட்டுவிட்டால்,  அதை அவர்கள் கண்டறிந்து எடுத்தால், அபராதம் மற்றும்/அல்லது சிறை தண்டனை இரண்டும் கிடைக்கும். அதனால் நல்ல பிள்ளையாக கொண்டு வந்த பொருட்களை நாங்கள் பட்டியலிட்டு விட்டோம்; ஏனென்றால் நாங்கள் வீட்டில் உணவு சமைக்க தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துச் சென்றிருந்தோம்.

அனைத்து சோதனைகளும் முடித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் முன்பாகவே நியூசிலாந்தில் பயன்படுத்துவதற்காக தொலைபேசி சேவைக்கான சிம் கார்டை வாங்கினோம். சிம்கார்டை என்னுடைய செல்போனில் மாற்றிவிட்டு, நாங்கள் வடக்கு தீவில் பயன்படுத்துவதற்காக புக் செய்திருந்த பட்ஜெட் கார் ரெண்டல்(www.bargainrentalcars.co.nz) சர்வீஸ் அவர்களை தொடர்பு கொண்டோம். நாங்கள் தாமதமாக வந்து சேர்வதால் அவர்கள் ஃபிளையவே(flyaway) என்ற வேறு ஒரு நிறுவனத்துடன் இணைந்து எங்களுக்கு இரவு நேரங்களில் காரை வாடகைக்கு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். எங்களை ஏர்போர்ட்டில் இருந்து பிக்கப் செய்ய அந்த ஃப்ளையவை நிறுவனம் காத்துக் கொண்டிருந்தது.

 அந்த இரவு 11:30 மணி அளவில் எங்களுக்கு எந்த தொந்தரவும் இன்றி வாடகை கார் வழங்கிய அந்த நிறுவனத்தை பாராட்டியே ஆக வேண்டும். காரை எடுத்துக்கொண்டு நாங்கள் ஆக்லாந்து தங்குவதற்கு airbnb வழியாக புக் செய்திருந்த அப்பார்ட்மெண்ட்டை வந்தடைந்தோம். புதிய இடம் என்பதாலும் இரவு நேரம் என்பதாலும் அந்த தெருவை வந்தடைந்த பிறகும், அந்த வீட்டை கண்டுபிடிப்பதில் எங்களுக்கு சற்று சிரமம் இருந்தது. ஒரு 20 நிமிட தேடலுக்குப் பிறகு airbnb செயலியின் வழியாக போட்டோக்களை சரிபார்த்து இந்த வீடு தான் என்று முடிவு செய்து வீட்டினை சென்று அடைந்தோம். மிகவும் சிறிய இடத்தை அனைத்து வசதிகளையும் கொண்டு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த வீடு அது; எங்கள் மூன்று பேருக்கு தங்குவதற்கு மிகவும் கச்சிதமாக இருந்தது.  அனைவரும் ஒரு குளியலை போட்டுவிட்டு உறங்குவதற்கு தயாரானோம்.


0 Comments:

Post a Comment

<< Home