நியூசிலாந்து பயணம்! - The beginning
பறவைகளே! உங்களுடன் போட்டியிட்டு
வெற்றிகொள்ள எங்களுக்கு சிறகுகள் இல்லை!
உங்கள்மீது பொறாமைகொண்டு முடங்கிவிட
நாங்கள் கிணற்றுத் தவளைகளும் இல்லை!
ஆறுகள் கடந்திட, உயரமான மலைகளை தாண்டிட,
கண்டங்களையும் கடல்களையும் கடந்திட,
சிறகுகள் இல்லாதது எங்களுக்கு ஒரு தடையும் இல்லை!
இருக்கையின் விலை அதிகம் என்றாலும்,
இறகுகள் விரித்துப் பறந்திட விமானம் உண்டு!
உங்களைப்போல இலவசமான நுழைவு இல்லையென்றாலும்,
நுழைவுக்கு விசா உண்டு!
அந்த விசாவிற்கும் விலை உண்டு!
ஆனாலும் பறவைகளே, உடலோடு ஒட்டிய சிறகுகளைத் தவிர
உடனேதும் எடுத்துச் செல்லாத தாங்கள்
என்றுமே அதிசயம்தான் எங்களுக்கு!
ஏனென்றால் ஆளுக்கு முப்பது கிலோ மூட்டையுடன்,
மேற்கொள்ளும் பயணம் என்றுமே அசதிதான் எங்களுக்கு!
செல்லும் வழியில், சென்று சேருமிடத்தில்,
தேடித் திரிந்து, கிடைத்ததை தின்று செரிக்கும் தாங்கள்,
என்றுமே அதிசயம்தான் எங்களுக்கு!
கிடைக்கும் உணவு நாவிற்கு பிடிக்குமோ,
இல்லை வயிறுதான் செரிக்குமோவென,
மின்சார உலையினைக்கூட எடுத்துச்செல்லும்
நாங்கள்கூட அதிசயம்தான் உங்களுக்கு!
பணயம் வைப்பது எதுவாகிடினும்,
பயணம் முடிப்பதுவொன்றே குறிக்கோளென்று,
பறவைகளுடன் போட்டியிட கிளம்பிவிட்டோம்,
நியூசிலாந்து நாட்டை நோக்கி!
0 Comments:
Post a Comment
<< Home