DreamLand

Wednesday, April 19, 2023

நியூசிலாந்து பயணம்! - Day 2

26-Dec-2022:  ஆக்லாந்து சுற்றுப்பயணத்தின் முதல் நாளாக, ரங்கிடாட்டோ தீவுகளுக்கு சென்று அதன் மலை உச்சி வரை ஏறி விட்டு இறங்குவது என்று முடிவு செய்து அந்த தீவுக்கு செல்லும் பெரிக்கு டிக்கெட் வாங்க சென்றோம். ஆனால் அன்றைய நாளுக்கான டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்து விட்டதாகவும், வேண்டுமானால் நாளை அல்லது நாளை மறுநாளுக்கு இப்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறினர். அடுத்த நாள் ரெயின்போஸ் எண்டு என்று அழைக்கப்படும் சாகச விளையாட்டு திடலுக்கு முன்பதிவு செய்திருந்ததால், நாங்கள் அதற்கு மறுநாள் ரங்கிடாட்டோ தீவுகளுக்கு செல்ல டிக்கெட் புக் செய்தோம். 

அதற்குப் பிறகு எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டே காலார நடந்து ஆக்லாந்து நகரின் கடற்கரையை சிறிது சுற்றிப் பார்த்தோம். அப்பொழுது மிக வேகமாக மழை பொழிய ஆரம்பித்தது. மழையில் நனைவதில் இருந்து எங்களை காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த நியூசிலாந்து மேரி டைம் மியூசியம் சென்றடைந்தோம்.

மியூசியம் உள்ளே உணவு அருந்துவதற்கு என்று இருந்த இடத்தில் இருந்து கடலின் மேல் மழை பொழிவதை ரசித்துக்கொண்டே, வீட்டிலிருந்து சமைத்து எடுத்து வந்த உணவை வயிறார உண்டோம். எங்கள் பயணத்திட்டத்திலேயே இல்லாத நியூசிலாந்து மேரீட் டைம் மியூசியம் மிகவும் சிறப்பாக இருந்ததால் அதை மட்டுமே நாங்கள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சுற்றிப் பார்த்தோம். 

பழங்கால முதல் தற்காலம் வரை பலவித கப்பல்களின் மாதிரிகள் அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி நியூசிலாந்து நாட்டினர் பாய்மரக்கப்பல் செலுத்தும் போட்டிகளில் தங்க மெடல் வாங்கியதைப் பற்றிய நிகழ்வுகளும் அவர்கள் பயன்படுத்திய பாய்மரக் கப்பல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 




நான் பணியில் இருக்கும் Oracle நிறுவனமும் இந்த பாய்மரக்கப்பல் செலுத்தும் போட்டியில் பங்கு பெற்ற பரிசில் பெற்ற நிகழ்வுகளை குறிப்பிட்டு இருந்தனர். நான்கு மணி அளவில் மியூசியம் சுத்தி பார்ப்பதை முடித்துவிட்டு வெளியில் வந்து அப்படியே காலாற நடந்து ஸ்கை டவர் என்று அழைக்கப்படும் உயரமான கட்டிடத்தை அடைந்தோம்.

கட்டிடத்தின் உச்சிக்குச் செல்ல முன்பே முன்பதிவு செய்து வைத்திருந்ததால் எங்கள் டிக்கெட்டுகளை காண்பித்து உச்சிக்கு செல்வதற்கான லிப்ட்டை அடைந்தோம். கார்த்திக் சற்று பயத்துடனே லிப்டில் ஏறினான். நாங்கள் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டே உச்சியை அடையுமாறு லிப்டை வடிவமைத்திருந்தனர். அது அச்சத்தை மேலும் கூட்டுவதாக அமைந்திருந்தது.



கட்டிடத்தின் உச்சியில் கண்ணாடியால் ஆன தளம் ஓரிடத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. சுற்றுலா வாசிகள் சிலர் அதன்மேல் நடந்தும் இன்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர் ஆனால் எங்களுக்கோ திடீரென கண்ணாடி உடைந்து நாங்கள் கீழே விழுந்து விட்டால் என்ன ஆவது என்றும் மிகவும் அச்சமாக இருந்தது. அதனால் அங்கிருந்த உதவியாளரிடம் அந்த கண்ணாடி தளத்தைப் பற்றி கேட்டபோது, அவர் அருகே இருந்த குறிப்புகளை சுட்டிக்காட்டினார். அந்த குறிப்பை நாங்கள் படித்த போது அந்த கண்ணாடி தளம் கான்கிரீட் தளத்தைப் போன்றே உறுதியானது என்றும் அது உடைந்து நீங்கள் கீழே விழுந்து விட மாட்டீர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை படித்த பிறகு சற்றே தெம்புடன் நாங்கள் அந்த கண்ணாடி தளத்தின் மேல் நடக்க தயாரானோம். ஆனாலும் கார்த்திக் மிகவும் அச்சத்துடன் அந்த கண்ணாடி தளத்தின் மேல் நடக்க வரவே இல்லை சிறிது நேரம் கழித்து நாங்கள் அங்கு நின்றும், குதித்தும் காட்டிய பிறகு ஒரு வழியாக அவனும் கண்ணாடி தளத்திற்கு வந்து எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.



அதேபோல கட்டிடத்தின் உச்சியில் இருந்து விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் நீங்கள் மேலிருந்து கீழே வழுக்கி கொண்டு செல்வது போல அமைக்கப்பட்டிருந்தது. அதற்கென நாம் உட்காரும் தளம் வேறு அங்கே வழுக்கி கொண்டு செல்வது போலவே சற்று உங்களையும் ஆட்டி வைக்கின்றது.  ஆனால் நாங்கள் டிக்கெட் புக்கிங் சென்று சேரும் நேரத்தில் அன்றைய நாளுக்கான விர்ச்சுவல் ரியாலிட்டி ஸ்லைடு புக்கிங் முடிந்து விட்டதாக கூறினர். ஆனால் நான் கார்த்திக்கை அருகே நிற்க வைத்து முகத்தை மிகவும் பாவமாக வைத்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தேன். அதனைப் பார்த்த அந்தப் பெண்மணியும் சற்றே மனம் இளகி எங்களுக்கு ஒரு டிக்கெட் கொடுத்தார். நான் காத்திக்கையும் கோமதியையும் அந்த விளையாட்டை விளையாட செல்லுமாறு அனுப்பி வைத்தேன். 

Sky Slideன் அதிநவீன தொழில்நுட்பமானது உங்களை 100 கிலோமீட்டர் மெய் நிகர்(Virtual Reality) வேகத்தில் கட்டிடத்தின் உச்சியில் இருந்து ஒரு கண்ணாடி ஸ்லைடின் வழியாக கீழ் தளம் வரை அழைத்துக் கொண்டு செல்லும். நீங்கள் ஸ்லைடில் செல்லும் போது ஆக்லாந்து நகரத்தின் அழகை  திரில்லிங் உடன் கண்டு செல்லலாம்.  நீங்கள் VR ஸ்லைடில் செல்லும் பொழுது நீங்கள் அமர்ந்திருக்கும் தளம் அதற்கேற்றவாறு மேலும் கீழும் பக்கவாட்டிலும் உங்களை ஆட்டி வைப்பதால் நீங்கள் உண்மையாகவே அங்கே வழுக்கிக் கொண்டு செல்வது போல உணர்வீர்கள். கோமதிக்கும் கார்த்திக்கிற்கும் இது ஒரு திரில்லிங்கான அனுபவமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 



கட்டிடத்தின் உச்சியிலிருந்து ஆக்லாண்டு நகரம் மிகவும் அழகாக காட்சியளித்தது. சாகச விளையாட்டு விரும்பிகள் சிலர் ஸ்கை ஜம்ப் என்று அழைக்கப்படும் இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு கட்டிடத்தின் உச்சியில் இருந்து குதிக்கும் விளையாட்டுகளை மேற்கொண்டிருந்தனர். AJ Hacket என்று அழைக்கப்படும் நிறுவனம் இந்த சாகச விளையாட்டினை அங்கே நிறுவி, விளையாட்டு விரும்பிகள் உற்சாகமாகவும் பாதுகாப்பாகவும் குதிப்பதற்கான பணியை மேற்கொண்டிருந்தது.

மாலை 6:30 மணிக்கு Sky Tower விட்டு வெளியே வந்தோம். அடுத்த நாள் ரெயின்போஸ் எண்டு சாகச விளையாட்டு திடலுக்கு புக் செய்திருந்ததால், இன்று சென்று நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி நாங்கள் வீட்டினை அடைந்தோம். இரவு மிதமான உணவு சமைத்து உண்டு விட்டு உறங்கச் சென்றோம். அப்பொழுது தான் தெரிந்தது கார்த்திக்கு லேசாக காய்ச்சல் அடித்தது.

0 Comments:

Post a Comment

<< Home