DreamLand

Thursday, May 04, 2023

நியூசிலாந்து பயணம்! - Day 4

28-Dec-2023:  முன்பே குறிப்பிட்டது போல முன்பதிவு செய்யப்பட்ட சுற்றுலா தளங்கள் எதற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால் காலையில் தாமதமாக எழுந்து, காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு, வீட்டை காலி செய்து, எங்கள் மூட்டை முடிச்சுகள் அனைத்தையும் கட்டி காரில் ஏற்றி , வைத்துவிட்டு வீட்டு உரிமையாளருக்கும் ஒரு பை பை சொல்லி விட்டு கிளம்பினோம்.







இன்று ரங்கிடாட்டோ  தீவுகளுக்கு தான் செல்ல முடியவில்லை அந்த தீவினை தொலைவில் இருந்தாவது படம் பிடித்துக் கொள்ளலாம் என்று செயின்ட் ஹெலியஸ்(St Heliers) கடற்கரையில் நின்று தொலைவில் தெரியும் ரங்கிடாட்டோ தீவின் முன்பு நின்று படம் பிடித்தோம்.








ஆக்லாந்து நகரத்தில் இருந்து ஹேமில்டன்(Hamilton) செல்லும் வழியில் இருக்கும் ஆக்லாந்து தாவரவியல் பூங்கா(Botanical Garden) சென்றடைந்தோம். மதியத்திற்காக நாங்கள் சமைத்து எடுத்து வைத்திருந்த உணவை அங்கு புல்வெளியில் வைத்துவிட்டு, பூங்காவை சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோம். புல்வெளியில் அமர்ந்து மதிய உணவை உண்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். 

அதன் பின் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்து,  மாலை 4 மணிக்கு, ஹேமல்டன் நகரில் நாங்கள் முன்பே புக் செய்திருந்த வீட்டினை அடைந்தோம். வீட்டின் உரிமையாளர் டிபி எங்களை மிகவும் கனிவுடன் வரவேற்றார். அதை வீடு என்று சொல்வதை விட ஒரு சிறு அறை என்று சொல்ல வேண்டும் ஏனென்றால் ஒரே ஒரு அறையில் கட்டில் மெத்தை ஒரு புறமிட்டு அதன் மறுபுறத்தில் சமையல் கட்டு அமைத்திருந்தனர். அவர் அந்த அறையை சுற்றிக் காண்பித்ததோடு அந்த அறையில் இருந்த டாய்லெட்டின் சிறப்பு அம்சங்களை எங்களுக்கு விவரித்துக் கூறினார். 

அந்த டாய்லெட்டுக்கு தண்ணீர் ஒரு மோட்டார் மூலம் பம்ப் செய்யப்படுவதாகவும், அந்த டாய்லெட்டில் டிஷ்யூ பேப்பர் தவிர வேறு எதையும் போடக்கூடாது என்றும், அவ்வாறு போட்டால் டாய்லெட் அடைத்துக்கொள்ளும், மோட்டார் பம்ப் வேலை செய்யாது. நாங்கள் பிளம்பரை கூப்பிட்டு தான் சரி செய்ய வேண்டும், சரி செய்வதற்கான செலவீனம் எங்களிடமிருந்தே பெற்றுக் கொள்ளப்படும் என்றும் விவரித்துக் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் உணவு சமைக்கும்பொழுது அதிகமாக எண்ணெய் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதிகமாக மசாலா பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அப்படி பயன்படுத்தினால் அது வீடு முழுவதும் ஒரு துர்நாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அதனால் எங்களுக்கு அடுத்து அங்கு தங்க வருபவர்களுக்கு மீண்டும் சுத்தம் செய்து கொடுப்பது சிரமம் ஆகிவிடும் என்றும் கூறினார். அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லை என்று சரி என்று ஒப்புக்கொண்டோம்.

மறுநாள் இரண்டு இடங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து இருந்ததால் இரவு சீக்கிரம் உறங்கி விடலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனாலும் இரவு ஆவதற்கு இன்னும் வெகு நேரம் இருந்ததால் நகரில் இருக்கும் ஏரியை சுற்றிப் பார்த்து விட்டு வரலாம் என்று மூவரும் கிளம்பினோம்.










பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி எதுவும் ஹேமில்டன் நகரில் இருக்கவில்லை; ஆனாலும் ஏரியின் அருகில் சிறுவர் விளையாட்டு திடல் அமைந்திருந்தது அங்கு நிறைய இந்திய சிறுவர்கள் வேறு விளையாடிக் கொண்டிருந்தனர். கார்த்திக்கும் அந்த விளையாட்டு திடலில் சிறிது நேரம் விளையாடினான். அதன் பின்னர் மூவரும் வீட்டினை அடைந்து இரவு உணவு அருந்திவிட்டு, கார்த்திக்கிட்டு பேராசிட்டமால் கொடுத்துவிட்டு உறங்கச் சென்றோம். 

ஆனால் கோமதியோ 15 நிமிடங்களுக்கு ஒரு முறை கார்த்திக்கை எழுப்பி விட்டு எலுமிச்சை சாறு குடி, அரிசி கஞ்சி, குடி திரவ உணவுகள் ஏதாவது குடித்தே ஆக வேண்டும்; வேறு ஏதாவது பழச்சாறு குடி என்று படுத்தி எடுத்துக் கொண்டிருந்தார். உறக்கம் வேறு வந்து கொண்டிருந்ததாலும் சற்று உடல் சோர்வடைந்து இருந்ததாலும் எனக்கு எதுவும் வேண்டாம் என்று அழுது கொண்டிருந்தான். 

நான் எப்பொழுதும் படுத்ததும் உறங்கிவிடும் பழக்கம் உடையவன்; ஆதலால் நன்றாக உறங்கி விட்டேன். சிறிது நேரம் கழித்து இவர்களின் சத்தத்தை கேட்டு நான் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தேன். கட்டிலின் கீழே படுத்துக் கொண்டிருந்த நான் கோமதியை அங்கே படுக்குமாறு சொல்லிவிட்டு கார்த்திக்கின் அருகினில் சென்று அவனை சற்று அரவணைத்துக் கொண்டு உறங்க வைத்தேன்; அவன் சிறிது நேரத்திற்கெல்லாம் நன்றாக உறங்கி விட்டான்; இரவில் அதன் பின்பு அவன் எழுந்திருக்கவே இல்லை காலையில் எழும்பொழுது அவன் காய்ச்சல் நன்றாக குணமாகி இருந்தது.

0 Comments:

Post a Comment

<< Home