DreamLand

Tuesday, April 18, 2023

நியூசிலாந்து பயணம்! - The Planning

மகனுக்கு ஆறு வாரங்கள் பள்ளிக்கூடம் ஆண்டு இறுதி விடுமுறை, எனக்கும் மனைவிக்கும், கிருத்துமஸ் மற்றும் ஆங்கில புதுவருடத்தை ஒட்டி இரண்டு வாரங்கள் அலுவலக அடைப்பு!

அதனால் இரண்டு வாரங்கள் நியூசிலாந்து சுற்றுலா சென்று விடுமுறையை கழிப்பதென்றும், அதனைத் தொடர்ந்து இரண்டு வாரங்கள், பிரிஸ்பேன் நகருக்கு அருகே இருக்கும் டூவூம்பாவில் வசிக்கும் தங்கையின் வீட்டிற்கு சென்று, தங்கையின் வீட்டிலிருந்து அலுவலக பணியை தொடர்வது என்றும் முடிவுசெய்து, நான்கு மாதங்களுக்கு முன்பே பயணத்திட்டம் இறுதி செய்யப்பட்டது!

கணிப்பொறி பணியும், கொரோனா பிணியும், கொண்டுசேர்த்த நன்மை! மெல்போர்ன் மாநகரம், டூவூம்பா சிறுநகரம், புன்செய் புளியம்பட்டி சிற்றூர், என எங்கிருந்து வேண்டுமானாலும் அலுவலக பணியைத் தொடரலாம்! தேவையானவை இரண்டு: இணைய இணைப்பு, அலுவலக மேலாளரின் அரவணைப்பு!

பயணம் ஒரு இனிமையான அனுபவமென்றால், பயணத்தை திட்டமிடுதல், ஒரு சவாலான அனுபவம்! விமான இருக்கைகள், சுற்றுலாத் தளங்கள், சாகச விளையாட்டுகள், எந்த நேரத்தில் எங்கு செல்லவேண்டும், எப்படி செல்லவேண்டும், எதைச் செய்யவேண்டும், எந்த இடங்களைத் தவிர்க்கவேண்டும், பிள்ளையை எப்படி இரண்டு வாரங்கள் ஈடுபாட்டுடன் வைத்துக்கொள்வது, அனைவரும் எப்படி இரண்டு வாரங்கள் உடல்சோர்வு, மனச்சோர்வு இன்றி சுற்றுலாவை கழிப்பது, யாருக்கேனும் உடல்நிலை சரியில்லாவிட்டால், மாற்றுத்திட்டம் என்ன? என்று அனைத்தையும் திட்டமிடுதல் சவாலென்றால், திட்டவரைவை மனைவியிடம் சமர்ப்பித்து ஒப்புதல் வாங்குவது அதைவிட மிகப்பெரிய சவால்!

கிருத்துமஸ் நாளன்று ஆஸ்திரேலியாவில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கையில் குறைவு என்பதால் அன்றைய நாள் புறப்படுவது என்றும், சனவரி 8ம் நாள், நியூசிலாந்தில் இருந்து டூவூம்பா செல்வதென்றும், இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சனவரி-21ம் நாள், டூவூம்பாவில் இருந்து புறப்பட்டு மெல்போர்ன் வந்தடைவது என்றும் முடிவு செய்திருந்தோம்.

இதனிடையே, நியுசிலாந்தில் எந்த நகரங்களுக்கு செல்வது, அங்கு எத்தனை நாட்களை கழிப்பது என்று அலசியபோது, அங்கு வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு தீவுகள் இருப்பதும், வடக்கு தீவில் எரிமலை, வெந்நீர் ஊற்றுகள் போல புவிவெப்ப செயல்பாடுகள்(Geothermal activities) அதிகம் இருப்பது, தெற்கு தீவில் எழில் கொஞ்சும் மலைகளும், ஏரிகளும், சாகச விளையாட்டுகள் நிறைந்திருப்பதும் தெரியவந்தது. இரண்டில் எங்கு அதிக நேரத்தை செலவிடுவது என்ற குழப்பத்தில், இரண்டு நிலப்பரப்பிலும் சரியாக ஒரு வாரம் செலவிடுவது என்று முடிவானது.

வெளிநாடு சுற்றுலா செல்வது என்று முடிவான பிறகு முதலில் செய்ய வேண்டிய இரண்டு காரியங்கள்: வீசா வாங்குவது மற்றும் விமானத்தில் இருக்கைகள் முன்பதிவு செய்வது. மற்ற நாடுகளைப் போலவே நியூசிலாந்து நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ள எந்த விசா வாங்குவது என்று தேடிய போது ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு நியூசிலாந்தில் இ-விசா வழங்கப்படுகிறது என்கிற விவரம் அறிந்து அந்த இ-விசாவினை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உடனடியாக கிடைக்கப் பெற்றோம்.

விமானத்திற்கு இருக்கைகள் முன்பதிவு செய்ய ஜட் ஸ்டார், வெர்ஜின் ஏர்லைன்ஸ் போன்ற விமானங்களை நான் பார்த்துக் கொண்டிருக்க மகனோ, ஏர் நியூசிலாந்து விமான சேவையை ஒரு முறை பார்க்கச் சொன்னார். அப்பொழுது வரை ஏர் நியூசிலாந்து என்கிற விமான சேவை இருப்பது கூட எனக்கு தெரிந்திருக்கவில்லை. 

அந்த விமானத்திற்கான இணையதளத்தில் தேடியபோது மற்ற விமான சேவைகளை விட, ஏர் நியூசிலாந்து விலை குறைவாகவும், பயண நேரம் எங்களுக்கு மிகவும் வசதியாகவும் அமைந்தது. நியூசிலாந்து பயணத்தை முடித்துவிட்டு தங்கையின் ஊரான டூவூம்பா செல்ல திட்டம் இருந்ததால், மெல்போன் வந்து விட்டு மீண்டும் டூவூம்பா செல்வதென்றால் ஒரு விமானத்திற்கான செலவு அதிகம் பிடிக்கும் என்பதாலும் நாங்கள் நியூசிலாந்து பயணத்தை முடித்த பிறகு நேராக பிரிஸ்பேன் சென்றடைவது என்று முடிவு செய்து பிரிஸ்பேன் நகருக்கு புக் செய்தோம்.

Melbourne -> Auckland -> Queenstown -> Brisbane -> Melbourne

பிரிஸ்பின் நகரில் இருந்து மேல் போன் திரும்பி வருவதற்கு மட்டும் ஜெட்ஸ் ஸ்டார் விமானத்தில் புக் செய்தோம்.  ஏனென்றால் ஏர் நியூசிலாந்து விமானங்கள் ஆஸ்திரேலியா நாட்டிற்கு உள்ளாக மட்டும் பயணிக்க விமான சேவைகளை வழங்குவதில்லை.

விமானத்தில் டிக்கெட் புக் செய்வது வெறும் முதல் பணி மட்டுமே. ஆனால் டிக்கெட் புக் செய்த பிறகு நியூசிலாந்து செல்வதற்கான ஆர்வம் மற்றும் ஜுரம் எங்களை பற்றி கொண்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளுக்குமான சுற்றுலா தளங்கள், சாகச விளையாட்டுக்கள்,  ஊர் சுற்றிப் பார்க்க நாமே டிரைவ் செய்து கொள்ளும் கார் மற்றும் தங்குமிடம்  ஆகியவற்றுக்கான திட்டமிடுதல் மற்றும் புக்கிங் அனைத்தும் செய்து முடித்தோம். அனைத்தையும் முடித்த பிறகு 25 டிசம்பர் 2022 நாளை நோக்கி மிகவும் ஆர்வமுடன் காத்திருந்தோம்; அந்த நாளும் வந்தது.

0 Comments:

Post a Comment

<< Home