DreamLand

Monday, September 04, 2023

நியூசிலாந்து பயணம்! - Day 8

 01-Jan-2023:  வருடத்தின் முதல் நாளான இன்று நியூசிலாந்தின் தென் தீவில் உள்ள குயின்ஸ் டவுன் நகரை அடைவது எங்களது முதல் இலக்கு. குயின்ஸ்டன் செல்வதற்கு காலை 9:30 மணிக்கு, ஆக்லாந்து நகரத்தில் விமானம் ஏற வேண்டும். ஆக்லாந்து நகரம் நாங்கள் தங்கி இருக்கும் ஹேமில்டன் நகரத்திலிருந்து ஒன்றரை மணி நேர பயண தொலைவில் இருந்தது. அதற்கு முன்பாக எங்கள் வாடகை காரை அந்த நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். 

இது அனைத்தையும் கணக்கிட்டு காலை 6:30 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படுவது என்று முடிவாயிற்று. வீட்டின் உரிமையாளர் டெபி வீட்டின் சாவியை உள்புறம் மேசை மீது வைத்து விட்டு செல்லுமாறு கூறியிருந்தார். நாங்கள் எங்கள் பொருட்கள் அனைத்தையும் காரில் ஏற்றிவிட்டு அவசர அவசரமாக வீட்டை சற்று சுத்தப்படுத்திவிட்டு கிளம்பு ஆயத்தமானோம். 

ஆனால் கோமதிக்கோ வீட்டின் தூய்மை திருப்தியை தரவில்லை; அதனால் அவர் மேலும் குப்பைகளை அகற்றிக் கொண்டும், மேசையை துடைத்துக் கொண்டும் இருந்தார். நானும் ஆறு முப்பது மணி ஆகிவிட்டது,   மேலும் தாமதமானால், நாம் விமானத்தை தவற விட்டு விடுவோம் என்று அவரை சற்று விரட்டிக் கொண்டிருந்தேன்.  காரில் ஏறி அமர்ந்து கொண்டு அவரை விரைந்து வருமாறு சற்று சத்தமாகவே கூறினேன்.

நாங்கள் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் விமான நிலையத்திற்கு அருகில் வந்து சேர்ந்தோம். வாடகை காரனை திருப்பித் தரும் முன்பு பெட்ரோல் நிரப்ப வேண்டியிருந்ததால், அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று, பெட்ரோல் நிரப்பிவிட்டு, அந்தக் கடையில் இயற்கை உபாதைகளை கழித்துவிட்டு, வாடகை கார் கம்பெனியை சென்று அடைந்தோம். எந்த ஒரு பிரச்சனையும் இன்றி காரினை பத்திரமாக அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஷட்டில்(shuttle) வாகனத்தில் ஏறி விமான நிலையத்தை அடைந்தோம்.

 நாங்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த சற்று மிச்சம் மீது உணவுகளையும் உடன் ஏர்போர்ட்டில் கிடைத்த வேறு உணவுகளையும் சிறிது வாங்கிக் கொண்டு காலை சிற்றுண்டியை முடித்தோம். அதன்பின் விமானத்தில் ஏறுவதற்கு செக்கிங் செய்து கொண்டிருந்தபோது ஒரு நியூசிலாந்து எண்ணிலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, பேசியவர் நாங்கள் ஹேமில்டனில் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் டெபி. 

அவர் நாங்கள் வீட்டின் கழிவறையை பாழ்படுத்தி விட்டதாகவும் அது இப்போது ஃப்ளஷ் ஆகவில்லை என்றும் கூறினார். ஆனால் நானோ நாங்கள் இன்று காலை கூட பயன்படுத்திவிட்டுத்தான் வந்தோம் அது நன்றாகவே ஃப்ளஷ் ஆனது நன்றாக பணி செய்து கொண்டிருந்தது என்று கூறினோம். ஆனால் அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை. கழிவறை ஏதோ மிகவும் சத்தமிடுகிறது என்றும் நாங்கள் ஏதோ அந்த கழிவறையினுள் போடக்கூடாத பொருட்களை போட்டு விட்டதாகவும் குறை கூறினார். ஆனால் நான் ஒப்புக் கொள்ளவே இல்லை, நாங்கள் டிஷ்யூ பேப்பரை தவிர வேறு எதையும் அதன் நூல் போடவில்லை என்று உறுதியாக கூறினோம். 

ஆனால் அவரோ மீண்டும் மீண்டும் நீங்கள் கழிவறையை பாழ்படுத்தி விட்டீர்கள், நான் பிளம்பரை அழைத்து தான் அதை சரி செய்ய வேண்டும், அதற்கு ஆகும் செலவை நான் உங்களிடமிருந்து தான் எடுத்துக் கொள்வேன், இதை airbnb வழியாக வசூலித்துக் கொள்வேன் என்று கூறினார்.  நீங்கள் அவ்வாறு ஏதோ பாழ்படுத்தி விட்டதால்தான் இன்று காலை உங்கள் மனைவியிடம் விரைந்து வருமாறு சத்தமிட்டுக் கொண்டிருந்தீர்கள் என்று வேறு கூறினார். 

எனக்கு மிகவும் கடுப்பாகி விட்டது. நான் என் மனைவியிடம் சத்தமிடுவதற்கும் அவர் என்னிடம் சத்தமிடுவதற்கும் எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன; அதை உங்களுக்கு சொல்ல தேவையில்லை; ஆனால் நாங்கள் கழிவறையை பாழ்படுத்தவில்லை என்பதை மட்டும் நான் உறுதியாக கூறுகிறேன் என்றேன். வேறொரு தருணத்தில் அவ்வாறு அவர் பேசி இருந்தால் கூட நான் கண்டும் காணாமல் விட்டிருப்பேன் ஆனால் நானும் அவசரத்தில் விமானத்தில் செக்கிங் செய்து கொண்டிருக்கும் போது அவர் இவ்வாறு கூறியதால், நான் கொஞ்சம் கடுப்பாகி விட்டேன். குயின்ஸ் டவுன் சென்றடைந்ததும் airbnb நிறுவனத்தில் புகார் அளிப்பது என்று முடிவு செய்தேன்.

 சற்று நேரத்துக்கு Debbyயை மறந்து விட்டு விமான பயணத்தை என்ஜாய் செய்யலாம் என்று முடிவு செய்து விமானத்தில் ஏறினோம்.


 நியூசிலாந்தின் தெற்கு தீவில் இயற்கை பேரழகு கொட்டிக் கிடக்கின்றது என்று நண்பர்கள் கூறி கேட்டிருக்கிறோம். அந்தப் பேரழகினை கண்டு மகிழ்வுற, காற்றைக் கிழித்துக்கொண்டு எங்களை அழைத்துச் சென்று கொண்டிருந்தது ஏர் நியூசிலாந்து விமானம். 

குயின்ஸ் டவுன் சென்று இயற்கையை கண்டுகளிக்க போகிறோம் என்று எண்ணிக் கொண்டிருந்த எங்களுக்கு,  நீங்கள் குயின்ஸ்டௌன் சென்று அடையும் வரை காத்திருக்க வேண்டாம், இப்போதே, விமானத்தில் இருந்தே என்னை கண்டு களியுங்கள் என்று பெருங்காட்சியளித்தது இயற்கை. ஆம் நீங்கள் விமானத்தில் பறந்து கொண்டிருக்கையில் கீழே உற்று நோக்கினால் எரிமலை கூட அழகாக தெரிந்தது, மேலும் தெற்குத்தீவின் மலைச்சிகரங்களும் மலை உச்சியில் உறைந்திருந்த உறைந்திருந்த பனிக்கட்டிகளும் காண்பதற்கு கண்கொள்ளா காட்சிகளாக இருந்தன.

Mt Egmont(Volcano Taranaki)


 


காலை 11:20 மணிக்கு குயின் ஸ்டோன் விமான நிலையத்தை வந்தடைந்து, எங்கள் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு, எங்கள் வாடகை கார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஷட்டில் வாகனத்தில் ஏறி விமான நிலையத்திற்கு வெளியே அமைந்திருந்த வாடகை கார் நிறுவனத்தை அடைந்தோம். 

விமான நிலையத்தின் உள்ளேயே அமைந்திருக்கும் EuropeCar, Avis போன்ற வாடகை கார் நிறுவனங்களின் கார் வாடகை அதிகம் என்பதால் நாங்கள் விமான நிலையத்திற்கு வெளியில் அமைந்திருக்கும் சற்று வாடகை குறைவாக உள்ள காரினை முன் பதிவு செய்திருந்தோம். இதுவும் ஆக்லாந்து நகரத்தில் ஏற்பாடு செய்திருந்ததைப் போலவே நாங்கள் அந்த நிறுவனத்தை சென்றடைய ஷட்டில் வாகனத்தை அனுப்பி இருந்தனர்.

 என்னுடைய ஓட்டுனர் உரிமத்தை அடையாள அட்டையாக காண்பித்து விட்டு காரினை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் புதிய இடத்திற்கு வந்திருப்பதால், ஆக்லாந்திலும் சரி குயின் ஸ்டோனிலும் சரி கார் வாடகையை விபத்து காப்பீட்டுடன் சேர்த்து முன்பதிவு செய்து இருந்தோம். இல்லையென்றால் புதிய இடத்தில் ஏதாவது விபத்து நிகழ்ந்தாலோ அல்லது யாரேனும் நம் மீது லேசாக உரசி விட்டுச் சென்றாலோ அதற்கு நாம் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். அதற்கு பதிலாக நாம் காப்பீடு எடுத்து விட்டால், நாமே தவறு செய்து விபத்து நிகழ்ந்தாலும் அந்த வாகனத்தை பழுது பார்க்க ஆகும் செலவினை காப்பீட்டு நிறுவனம் பார்த்துக் கொள்ளும் என்பதால் நமக்கு அதில் ஒரு பெரிய மன நிம்மதி. காரினை திரும்ப ஒப்படைக்கும் போதும், அவர்கள் காரினை முழுவதும் பரிசோதிக்கும் வரை நாம் காத்திருக்க தேவையில்லை.

முதலில் அருகில் உள்ள ஷாப்பிங் சென்டருக்கு சென்று, கார்த்திக்கு உணவு ஏதாவது வாங்கிக் கொடுப்போம். ஏனென்றால் அவன் காலையில் சரியாக சாப்பிடவில்லை இப்போதும் சரியாக சாப்பிடாவிட்டால் அவன் பயணத்தை என்ஜாய் செய்ய மாட்டான், நம்மையும் என்ஜாய் செய்ய விட மாட்டான் அதனால், முதலில் அவனது வயிற்றை நிரப்புவோம் என்று முடிவு எடுத்து அவனுக்கு பிடித்த சூசி(sushi) உணவு வாங்கினோம். 

உணவு அருந்தி முடித்துவிட்டு, நாங்கள் முன்பதிவு செய்து இருந்த வீட்டிற்கு செல்லும் முன்பாகவே Glenarchy Drive சென்று சுற்றிப் பார்ப்பது என்று முடிவெடுத்து வாகனத்தை கிளப்பினோம்.


மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் குயின் ஸ்டோன் நகரில் இருந்து Glenorchy செல்லும் பாதை ஒருபுறம் மலையாலும் மறுபுறம் ஏரி கரையாலும் நிரம்பி இருந்தது. நிற்காமல் சென்றால் வெறும் 45 நிமிடங்களில் முடிய வேண்டிய பயணம், அந்த அழகினை ரசித்துக்கொண்டு ஆங்காங்கே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றதால் இரண்டு மடங்கு காலம் எடுத்துக் கொண்டது. 




ஆனால் கார்த்திக்கோ பயணத்தின் தொடக்கத்திலேயே தூங்கி விட்டான் அதனால் நாங்கள் இருவர் மட்டும் இருபுறமும் மலை சூழ்ந்த ஏரியின் அழகை ரசித்துக் கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டும் மிகவும் மெதுவாக டிரைவ் செய்துகொண்டு Glenorchy சென்றடைந்தோம்.



Glenorchy இல் பார்ப்பதற்கு என்று சிறப்பான இடங்கள் எதுவும் இல்லை ஆனால் குயின் ஸ்டோன் நகரில் இருந்து Glenorchy செல்லும் பாதை முழுவதும் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கின்றது. அந்த அழகினை அனுபவித்துக் கொண்டே டிரைவ் செய்வது மட்டுமே Glenorchy செல்வதன் பெருநோக்கமாகும்.

நாங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு நாங்கள் முன்பதிவு செய்து இருந்த வீட்டினை வந்தடைந்தோம். அந்த வீடு குயின்ஸ் டவுன் நகரினை தாண்டி வடக்கு புறமாக அமைந்திருந்தது. குயின் ஸ்டோன் நகரின் உட்புறமாக அப்பார்ட்மெண்ட் முன்பதிவு செய்யலாம் என்றால் அதன் வாடகை மிகவும் அதிகமாக இருந்ததால், நாங்கள் சற்று புறநகரில் வீடு முன் பதிவு செய்திருந்தோம். 

குயின்ஸ் டவுன் நகரம் முழுவதுமே சுற்றுலாவை நம்பி மட்டுமே இருந்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகை மட்டுமே அங்கு பிரதான வருமானமாக இருந்தது. அதனால் அங்கு வாடகை எல்லா இடங்களிலும் அதிகமாகவே இருந்தது.



நாங்கள் முன்பதிவு செய்திருந்த வீட்டினை பற்றி சொல்ல வேண்டும் என்றால், அது ஒரு வீடு அல்ல. ஷிப்பிங் கண்டைனர் ஒன்றினை, வீடாக மாற்றி இருந்தனர். ஆனால் அந்த படைப்பாற்றலை(Creativity) நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஏனென்றால் அந்த செவ்வக வடிவ சிறிய அறையினுள், மூன்று பேர் படுத்து உறங்கும் கட்டில் மெத்தை ஒரு புறத்திலும், அமர்ந்து கொள்வதற்கு சோபா ஒரு புறத்திலும், சமைப்பதற்கு சமையலறை ஒரு புறத்திலும், அந்த அறையின் மறு கோடியில் குளியல் மற்றும் கழிவறை ஆகியவையும் நேர்த்தியாக அமைத்திருந்தனர். 

மூன்று பேர் கொண்ட ஒரு சிறிய குடும்பம் சுற்றுலா வரும் பொழுது தங்குவதற்கு வேண்டிய அத்தனை வசதிகளும் அந்த சிறிய அறையினுள் இருந்தன. சுற்றுலாவின் போது மட்டுமல்லாமல் நாம் எப்பொழுதும் வசிப்பதற்கு கூட இது போன்ற சிறிய அறையினை பயன்படுத்த பழகிக் கொண்டால் நிறைய காசும் மிச்சம் பிடிக்கும், நாம் நமது இயற்கையையும் நீண்ட காலத்திற்கு போற்றி வளர்க்கலாம்.

இவ்வாறாக எங்கள் வருடத்தின் முதல் நாள் நான்கு நகரங்களை(Hamilton, Auckland, Queenstown, Glenorchy) சுற்றி வந்ததாக அமைந்தது; இத்துடன் இன்றைய நாள் இனிதே நிறைவுற்றது.

0 Comments:

Post a Comment

<< Home