நியூசிலாந்து பயணம்! - Day 3
27-Dec-2022: முந்தைய நாள் இரவில் கார்த்திக்கிற்கு காய்ச்சல் அதிகமாக அடித்து இருந்ததால் நாங்கள் பாராசிட்டமால் கொடுத்து தூங்க வைத்திருந்தோம். ஆனால் காலை எழுந்த பொழுதும் கார்த்திக்கிற்கு காய்ச்சல் தொடர்ந்தது. அதனால் ரெயின்போஸ் சாகச விளையாட்டு திடலுக்கு செல்வதால் வேண்டாமா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனாலும் முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து விட்டதால் அதை வீண் செய்ய வேண்டாம் என்று எண்ணி அங்கு சென்று வேடிக்கை மட்டுமாவது பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்து, காலை உணவு அருந்தியதும் கார்த்திக்கிற்கு மீண்டும் பாராசிட்டமால் கொடுத்து, ரெயின்போஸ் திடலுக்கு புறப்பட்டோம்.
காலையில் சீக்கிரமாக வந்து அனைத்து விளையாட்டுகளையும் ஓர் இரண்டு முறையாவது விளையாடினால்தான் கொடுத்த காசிக்கு பலன் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் ரெயின்போஸ் திடலை வந்தடைந்த பொழுது மணி மதியம் 12 ஆயிருந்தது. திடலினுள் அவர்கள் வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்களை அனுமதிப்பதில்லையாதலால் வெறும் தண்ணீர் பாட்டில்களை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றோம்.
முதலில் கிட்ஸ் கிங்டம் என்றழைக்கப்படும் சிறுவர்கள் விளையாடும் இடத்தை சென்றடைந்து, கார்த்திக்கை அங்கு சில ரைடுகள் விளையாட விட்டோம். அவனும் அங்கே குஷியாக விளையாடினான்; அப்போது அவனுக்கு காய்ச்சல் எங்கு சென்றிருந்தது என்றே எங்களுக்கு தெரியவில்லை.
DODGEMS என்பது பொம்மை கார் ஓட்டிச் சென்று மற்றவர்களின் மேல் இடிப்பது போல் அமைந்திருக்கும் Dashing Car விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டினை எத்தனை முறை விளையாடினாலும் கார்த்திக்கிற்கு போர் அடிப்பது இல்லை.
பெரியவர்கள் விளையாடும் சில அட்வென்ச்சர் ரைடுகள் விளையாடலாம் என்று அந்த இடத்திற்குச் சென்றால், ஒவ்வொரு விளையாட்டிற்கும் நிறைய பேர் காத்துக் கொண்டு வரிசையில் நின்றிருந்தனர். ஒரு மணி நேரமாவது வரிசையில் நின்றால் தான் நமக்கு ஒருமுறையாவது வாய்ப்பு கிடைக்கும். சரி ஒரு ரைடாவது அப்படி விளையாடி விடலாம் என்று நீ வரிசையில் காத்துக் கொண்டிருந்தபோது கார்த்திக் மிகவும் சோர்வடைந்து இருந்தான்; அவனுக்கு காய்ச்சல் மீண்டும் எட்டிப் பார்த்தது. வெயிலும் சற்று அதிகமாகவே அடித்ததால் நாங்கள் சரி போதும் என்று எண்ணி வீட்டுக்கு செல்ல தயாரானோம்.
நாங்கள் தங்கியிருக்கும் வீட்டை அடைந்ததும் கோமதி கார்த்திக்கிற்கு அரிசி கஞ்சி தயார் செய்து கொடுத்தார். நான் அவர்கள் இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு அருகில் இருக்கும் St Heliers கடற்கரை வரை சென்று காலரா நடந்து விட்டு வந்தேன். நான் திரும்பி வந்ததும் இரவு உணவு அருந்திவிட்டு கார்த்திக்கு பேராசிட்டமால் மருந்தும் கொடுத்தோம். மறுநாள் காலை ரங்கிடாடோ தீவுகளுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம்; ரங்கிடாட்டோ தீவில் மலை உச்சி வரை நடந்து மேலேற திட்டமிட்டு இருந்ததாலும், கார்த்திக்கு அது இயலாத காரியம் ஆகிவிடும் மேலும் உடல் சோர்வடைந்து விடும் என்பதாலும், அந்த பயணத்தை தவிர்த்து விடலாம் என்று முடிவு செய்து இருந்தோம்.
மறுநாள் ஹேமில்டன் நகரில் நாங்கள் தங்குமிடத்திற்கு சென்று சேர வேண்டும் என்ற ஒன்று மட்டுமே திட்டமிட்ட நிகழ்வாகும். மற்றபடி மிகவும் தாமதமாக எழுந்து புறப்பட்டு வழியில் விருப்பம் போல சில இடங்களுக்கு செல்லலாம் என்றும், கார்த்திக்கை அதிக உடல் சோர்வு அடையாமல் பார்த்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்திருந்தோம். மறுநாள் திட்டமிட்ட சுற்றுலா இடங்கள் ஏதும் இல்லாததால், இரவு ஆக்லாந்து பாலத்தின் வழியாக சென்று ஆக்லாந்து நகரத்தின் அழகை ரசிப்பது என்று முடிவு செய்து இரவு உணவுக்குப் பிறகு அனைவரும் புறப்பட்டோம்.
ஆக்லாந்து பாலத்தின் வழியாக பயணித்து ஆக்லாந்து நகரத்தின் அழகை ரசித்துக்கொண்டு சல்பர் பீச் எனும் இடத்தை அடைந்தோம். ஆக்லாந்து பாலம் சிட்னி பாலத்தைப் போல மிகவும் பிரம்மாண்டமானது அல்ல; அது ஒரு மிகவும் சிறிய அளவிலான பாலம். ஆனாலும் அந்தப் பாலத்தின் வழியாக பயணிப்பது எங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. சல்பர் பீச்சில் நின்று கொண்டும் ஆக்கிலாந்து நகரின் அழகை சிறிது ரசித்தவாறு சில புகைப்படங்களும் எடுத்துக்கொண்ட பிறகு மீண்டும் நாங்கள் தங்கியிருந்த வீட்டினை வந்தடைந்தோம்.
இன்றைய நாள் இத்துடன் முடிந்தது