நியூசிலாந்து பயணம்! - Day 9
2023 ஆம் வருடத்தின் இரண்டாம் நாள், எங்கள் சுற்றுலாவின் ஒன்பதாவது நாள். இன்று நாங்கள் இரண்டு விளையாட்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு முன்பதிவு செய்து இருந்தோம். முதல் கட்டமாக ஸ்கை லைன் குயின்ஸ் டவுன்(Skyline Queenstown) என்ற இடத்தில் அமைந்துள்ள Luge என்று அழைக்கப்படும் வண்டியில் சவாரி செய்வது.
ஸ்கை லைன் குயின்ஸ் டவுன் மிகவும் உயரமாக அமைந்திருப்பதால் அதனை எளிதாக சென்றடைய கண்டோலா(Gondola) அமைத்திருக்கிறார்கள். உங்களுக்கு மலையேற்றத்தில் ஆர்வம் இருந்து, அதற்கான உடல் தகுதியும் இருந்து, மேலே ஏறுவதற்கு தேவையான 2 மணி நேரமும் இருந்தால், நீங்கள் நடந்தே மேலே ஏறி வரலாம். எங்களுக்கு மலையேற்றத்தில் ஆர்வமும் இருந்தது; அதற்கான உடல் தகுதியும் இருந்தது; ஆனால் மேலே ஏறுவதற்கு தேவையான 2 மணி நேரங்கள் இல்லை. அதனால் நாங்கள் கண்டோலாவை முன்பதிவு செய்திருந்தோம். அந்த கண்டோலா வழியாக, ஸ்கை லைன் குயின்ஸ் டவுன் சென்றடைந்தோம்.
லூஜ் என்பது அடிபக்கமாக சக்கரங்கள் பொருத்தப்பட்டு, மிதிவண்டியில் உள்ளது போல அந்த வண்டியை திருப்புவதற்கும் நிறுத்துவதற்கும் கைப்பிடியும், brake-ம் பொருத்தப்பட்டு இருக்கும். அந்த வண்டியை சற்று உயரமான இடத்தில் இருந்து இயக்க ஆரம்பித்தால் அது கீழ்நோக்கி மிகவும் வேகமாக வந்து சேரும்.
கீழே வரும் வழி வளைந்து நெளிந்து செல்வதோடு, சில இடங்களில் சற்றே நம்மை உயரத் தூக்கி வீசுவது போலவும் அமைந்திருக்கும். அந்த உயரமான இடத்திற்கு நாம் ஒவ்வொரு முறையும் நடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்கென தனியாக மின் தூக்கி நாற்காலிகளை(Chair Lift ) அமைத்திருக்கிறார்கள். கீழே இருந்து அந்த நாற்காலியில் நாம் அமர்ந்து கொண்டால் அது நம்முடன் சேர்த்து அந்த Luge கலையும் மேலே எடுத்துக் கொண்டு செல்கிறது.
நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொருவரும் மூன்று, ஐந்து, ஆறு, அல்லது பத்து என எத்தனை சவாரிகள் வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம். நாங்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு சவாரிகள் முன்பதிவு செய்து இருந்தோம்.
கோமதி மூன்று சவாரிகள் மட்டும் ஆடிவிட்டு மீதமுள்ள சவாரிகளை எங்களுக்கு கொடுத்து விட்டார். அனைவரும் ஆடி முடித்த பின்பு வீட்டிலிருந்து சமைத்து எடுத்து வந்திருந்த உணவை, அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டோம்.
மதிய உணவிற்குப் பிறகு ஜிப்லைன்(zipline) விளையாட்டினை முன் பதிவு செய்திருந்தோம். இந்த விளையாட்டில் சில படிநிலைகள் வைத்திருந்தார்கள். அதில் நாங்கள் முன்பதிவு செய்தது ஏழு வயது உள்ள குழந்தைகளும் ஈடுபடும் எளிமையான படிநிலை கொண்ட ஜிப் லைன்.
ஜிப் லைன் என்பது உயரமான இரண்டு இடங்களை இரும்பு கயிற்றினால் இணைத்து, ஒரு சக்கரம் அந்த இரும்பு கயிற்றின் மேல் சுழன்று கொண்டே அந்த இரண்டு உயரமான இடங்களுக்கு நடுவே பயணிப்பது போல் அமைத்திருக்கிறார்கள். அந்த சக்கரத்துடன் இணைக்கப்பட்ட தடிமனான கயிறு, நமது உடலில் கட்டப்பட்டுள்ள சேனத்துடன்(Harness) இணைக்கப்படுகிறது. நாம் அந்தக் கயிற்றைப் பிடித்துக் கொண்டோ, பிடிக்காமலோ தொங்கும்போது, நமது உடல் எடையின் காரணமாகவே அந்த சக்கரம் இழுத்துக் கொண்டு உயரமான இடங்களுக்கு நடுவே பயணிக்கிறது. இதனால் நாம் ஆகாயத்தில் பறப்பது போன்ற ஒரு சிலிர்ப்பூற்றும் அனுபவத்தை கொடுக்கின்றது.
0 Comments:
Post a Comment
<< Home