நியூசிலாந்து பயணம்! - Day 14
07-Jan-2023: இன்று காலை எழுந்ததும் வழக்கம் போல, காலை உணவுக்குப் பிறகு, எங்கள் உடைமைகளை காரில் ஏற்றிக்கொண்டு, டிமாரு நகரில் இருந்த புனித இருதய பசிலிக்கா(Sacred Heart Basilica) சென்றோம்.
அதன் பின்னர் குயின்ஸ் டவுன் நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. Google Map ஆனது குயின்ஸ் டவுன் செல்ல இரண்டு வழிகளை காண்பித்தது. ஒரு வழியில் நான்கு மணி நேரமும் இன்னொரு வழியில் நான்கரை மணி நேரமும் ஆகும் என்று காட்டியது. நான்கரை மணி நேரம் எடுத்துக் கொள்ளும் வழியில் இரண்டு ஏரிகள் தென்பட்டன. அந்த இரண்டு ஏரிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று கூகுளில் தேடிய போது வந்த புகைப்படங்களில் அந்த ஏரிகள் மிகவும் அழகாக காட்சியளித்ததால் நாங்கள் நான்கரை மணி நேர வழியை தேர்ந்தெடுத்தோம்.
டீகாப்பு ஏரி(Lake Tekapu)
நாங்கள் இந்த நான்கரை மணி நேர வழியை தேர்ந்தெடுப்பதற்கு இன்னும் ஒரு காரணம், இது கிரைஸ்ட்சர்ச் நகரையும், குயின்ஸ் டவுன் நகரையும் இணைக்கும் சாலையின் பாதி தொலைவை நாமும் பயணிக்கலாம் என்பதுதான்.
டீகாப்பு ஏரி கூகுள் காட்டிய புகைப்படங்களில் இருந்ததை விடவும் நேரில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.
இந்த ஏரி க்ரைஸ் சர்ச் மற்றும் குயின் டவுன் நகரை இணைக்கும் சாலையின் ஓரத்திலேயே அமைந்திருப்பதால் அதை அடைவது மிகவும் எளிதாக இருந்தது. காரினை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு, சாலையை குறுக்காக கடந்து நாங்கள் அந்த ஏரியை அடைந்தோம். ஏரிக் கரையில் சற்று நேரம் காலாற நடந்து விட்டு, அந்த தெளிவான நீரில் துள்ளி விளையாடும் மீன்களைக் கண்டு ரசித்து விட்டு, அந்த ஏரியின் மற்றும் ஒரு ஓரத்தில் அமைந்திருந்த நல்ல மேய்ப்பனின் திருச்சபையை(Church of the good Sheperd) அடைந்தோம்.
1935 ஆம் ஆண்டு கற்களால் கட்டப்பட்ட இந்த சிறிய Anglican சர்ச், தொடக்க காலத்தில் இங்கு குடியேறிய மக்களின் நினைவாக இன்றும் உள்ளது. இது நியூசிலாந்து நாட்டில் அதிக புகைப்படங்கள் எடுக்கப்படும் கட்டிடங்களில் ஒன்றாகும். அதற்கு காரணமாக நான் நினைப்பது அந்த சர்ச் அமைந்துள்ள டிகாப்பு ஏரியாகும்.
புகாகி ஏரி(Lake Pukaki) & ஆரோக்கி(Aoraki)
டீகாப்பு ஏரியிலிருந்து 30 நிமிட பயண தொலைவில் அமைந்திருந்தது புகாகி ஏரி. இந்த இரண்டு ஏரிகளும் நீயா நானா என்று போட்டி போடும் அளவிற்கு ஒன்றை ஒன்று மிஞ்சும் அழகை கொண்டிருந்தன. புகாகி ஏரியின் ஒரு புறத்தில் மாநில நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது அந்த நெடுஞ்சாலை நம்மை ஆரோக்கி(Aoraki) மலைத்தொடரின் அடிவாரத்திற்கு கூட்டிச் செல்கின்றது. இந்த ஆரோக்கி மலைத்தொடர் Mount Cook என்றும் அழைக்கப்படுகிறது.
நியூசிலாந்து நாட்டிலேயே உயரமான மலை என்றும் அறியப்படுகிறது. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 3724 மீட்டர்கள் அதாவது 12,218 அடிகள். இது நியூசிலாந்து நாட்டில் கோடை காலம் என்றாலும், ஆரோக்கி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த ஏரிகளில் நன்றாக குளிரடிக்கவே செய்தது. வானிலை தெளிவாக இருக்கும் நாட்களில், அதாவது மேகங்கள் ஏதுமின்றி சூரியன் நன்றாக ஒளிரும் நாட்களில், புகாக்கி ஏரியின் கரையில் இருந்து, மறுபுறம் தொடங்கும் ஆரோக்கிய மலைத்தொடரினை தெளிவாகக் கண்டு களிக்கலாம். சுற்றுலா வாசிகளும், மலையேற்றத்தில் ஆர்வம் உடையவர்களும், கட்டாயம் தங்கள் வாழ்வில் ஒரு முறை வந்து பார்க்க வேண்டிய இடம் இந்த Aoraki மலைத்தொடர்.
ஆனால் இந்த மலைத்தொடர் பற்றிய தகவல்கள் எங்களுக்கு முன்பு தெரிந்திருக்கவில்லை. அதனால் நாங்கள் இந்த மலைத்தொடருக்கு செல்வதற்கு திட்டமிட்டு இருக்கவில்லை. இந்த மலைத்தொடர் பற்றிய தகவல்கள் அனைத்தும், புகாகி ஏரியில் அமைந்திருந்த தகவல் மையத்திலிருந்து கிடைக்கப்பெற்றது. இந்த மலைத்தொடரை பார்ப்பதற்காகவே மீண்டும் ஒருமுறை நியூசிலாந்து வரவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு கிளம்பினோம்.
அதன் பின்னர் பல சிறிய மலைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டு இருந்த அழகான சாலையில் வழுக்கி கொண்டே நாங்கள் குயின் டவுன் நகரை நோக்கி கிளம்பினோம். கவரு தொங்கு பாலம் நாங்கள் செல்லும் வழியிலேயே அமைந்திருந்ததால், நாங்கள் மீண்டும் ஒருமுறை அங்கே சென்று பார்வையிட்டு விட்டு, ஒரு டீசர்ட் ஒன்றை நினைவு பரிசாக வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.
அன்று இரவு நாங்கள் தங்குவதற்கு முன்பதிவு செய்து இருந்த இடம் குடும்பங்கள் தங்குவதற்கு என்று அமைக்கப்பட்ட விடுதி அல்ல. சிறிய முதுகுப்பையுடன் பயணிக்கும், பயணிகளுக்கான தங்கும் விடுதி(Southern Laughter Backpackers). ஆனால் நாங்கள் இரவு தாமதமாகவே வருவோம், காலையிலும் விமானத்தை பிடிக்க சீக்கிரமாக கிளம்பி விடுவோம் என்பதாலும், அந்த குறிப்பிட்ட நாளுக்கான வாடகை மற்ற இடங்களில் மிகவும் அதிகமாக இருந்ததாலும், நான் அந்த இடத்தை தேர்வு செய்திருந்தேன்.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த தங்கும் விடுதியில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை. அதனால் மூன்று பெரியவர்கள் என்று குறிப்பிட்டு முன்பதிவு செய்திருந்தேன். ஆனால் கார்த்திக்கை, தங்கும் விடுதியில் வேலை செய்பவர்களோ, மேலாளரோ, பார்த்து விடாமல் உள்ளே கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதால், நாங்கள் காரினை நிறுத்திவிட்டு, வரவேற்பு அறைக்கு நான் மட்டும் தனியாக சென்று, அறைக்கான சாவியை வாங்கிக்கொண்டு, வந்து காரில் இருந்து அந்த ஒற்றை இரவுக்கு தேவையான ஆடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, அறையில் சென்று வைத்துவிட்டு, அந்த அறைக்கு செல்லும் வழிகளை ஆராய்ந்து பின்புறமாக இருந்த வழியாக கார்த்திகை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன்.
நாங்கள் சற்று புத்துணர்ச்சி ஏற்படுத்திக் கொண்டு இரவு உணவுக்காக உலக பிரசித்தி பெற்ற ஃபெக் பர்கர் கடையை நோக்கி சென்றோம். முன்பு பார்த்ததைவிட கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.
ஆளுக்கு ஒரு பர்கரை வாங்கிக்கொண்டு, வக்காடிப்பு ஏரிக்கரையில் அமர்ந்து பர்கரை ரசித்து உண்டோம். உலகப் பிரசித்தி பெற்ற பர்கர் என்ற பெயர் சோடை போகவில்லை; அந்த பர்கர் மிகவும் நன்றாகவே இருந்தது. பின்பு நகரை சுற்றி காலாற நடந்தோம்; நகரில் பல நாட்டைச் சேர்ந்த உணவகங்கள் அமைந்திருந்தன. நாங்கள் ஒரு கடைக்குச் சென்று நினைவு பரிசாக பல டீசர்ட்டுகளை வாங்கிக் கொண்டு டீ சர்ட்டுகளை தங்குமிடம் வந்து சேர்ந்தோம். நன்றாக உறங்கினோம். நாளை காலை நியூசிலாந்துக்கு டாட்டா காட்டிவிட்டு விமானம் ஏறி பிரிஸ்பேன் செல்ல வேண்டும்.
08-Jan-2023: இன்று காலை நியூசிலாந்துக்கு tata சொல்லி விட்டு கிளம்ப இருக்கிறோம். காலையில் எழுந்து குளித்து ஆயத்தமாகி, காலை உணவிற்கு அந்த தங்கும் விடுதியில் இருந்த சமையல் அறைக்குச் சென்றோம். அந்த சமையலறை அங்கு இருக்கும் அனைவருக்கும் பொதுவானது. அங்கிருக்கும் சமையல் பாத்திரங்களும் அனைவரும் பயன்படுத்தக் கூடியவை.
அதனால் அனைவருக்கும் பொதுவான விதிமுறைகளை எழுதி ஒட்டி வைத்திருந்தனர். அதாவது அவரவர் பயன்படுத்தும் பாத்திரங்களை அவர்கள் அப்பப்போது சுத்தம் செய்து வைத்து விட வேண்டும் என்றும், சமையலுக்கு பயன்படுத்தும் மூலப் பொருட்களை, குளிர் பதன பெட்டியில் வைப்பதாக இருந்தால் உங்கள் பெயர் எழுதி வைத்து விட வேண்டும் என்றும், மற்றவர்களுடைய மூலப் பொருட்களை நீங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும், நீங்கள் பயன்படுத்தும் பொழுது பொருட்கள் தரையில் சிந்தி விட்டாலோ உலகின் மீது சிந்திவிட்டாலோ, நீங்களே சுத்தப்படுத்தி வைக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் அங்கே எழுதி வைத்திருந்தது மட்டுமில்லாமல், அதை அனைவரும் கடைப்பிடித்தனர். அதனால் அந்த சமையலறை மிகவும் தூய்மையானதாகவே இருந்தது. நாங்கள் மிக சீக்கிரமாகவே காலை உணவை முடித்துவிட்டு, தங்கி இருந்த அறையையும் காலி செய்து விட்டு கிளம்பினோம்.
முதல் வேலையாக எங்களது காரினை திரும்ப ஒப்படைப்பதற்காக கார் வாடகைக்கு விடும் நிறுவனத்தை அடைந்தோம். நாங்கள் காருக்கு முழுமையான காப்பீடு எடுத்திருந்ததால், எங்களது தவறால் ஏதேனும் விபத்து ஏற்பட்டு காருக்கு சேதம் அடைந்தாலும், நாங்கள் கையில் இருந்து ஒரு பைசா கூட கொடுக்கத் தேவையில்லை.
அதனால் காரினை திருப்பி ஒப்படைக்கும் போது அவர்கள், சாவியை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு நன்றி சொல்லி அனுப்பி விடுகின்றனர். நாம் முழுமையான காப்பீடு எடுத்து இருக்காவிட்டால், அவர்கள் நமது காரினை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து, சிறிய கீறல் இருந்தால் கூட அதற்கு நம்மிடம் பணம் வசூலித்து விடுவர்.
காரினை ஒப்படைத்ததும் அவர்களுடைய வாகனத்திலேயே நம்மை விமான நிலையத்தின் உள்ளே இறக்கி விட்டனர். நாம் டிக்கெட் பரிசோதனை அனைத்தையும் முடித்துவிட்டு, 11:15 மணிக்கு தான் விமானம் என்பதால் அதுவரை சற்று ஓய்வெடுத்தோம். 10:45 மணிக்கு விமானத்தில் ஏறுவதற்கு அழைப்பு வந்தது. நாங்கள் மீண்டும் குயின்ஸ்டவுனுக்கு டாட்டா சொல்லிவிட்டு விமானத்தில் ஏறினோம்.
இப்போது விமானம் நியூசிலாந்து நாட்டின் தலைநகரமான வெல்லிங்டன் நகரை நோக்கி பயணித்தது. மீண்டும் ஒருமுறை விமானத்திலிருந்து குயின் டவுன் நகரத்தையும், நகரில் இருக்கும், மற்றும் நகரத்தைச் சுற்றி இருக்கும் ஏரிகளின் அழகையும், ஏரிகளுக்கு நீரினை வழங்கிக் கொண்டிருக்கும் மலைகளின் அழகையும், ரசித்துக்கொண்டே வெல்லிங்டன் நகரை அடைந்தோம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம், வானகா ஏரி மற்றும் ஹவியா ஏரி இரண்டும் இணையும் இடம். அதன் கூகுள் மேப் படமும் உங்களுக்காக இணைத்துள்ளேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம், நியூசிலாந்து நாட்டின் வட தீவுக்கும் தென் தீவுக்கும் இடையில் அமைந்துள்ள Tasman கடல் பகுதி ஆகும்
வெலிங்டன் நகரின் விமான நிலையத்தை அடையும் போது, மதிய உணவு நேரம் ஆகி இருந்ததால் நன்றாக பசி எடுத்தது. கார்த்திக் சப்வேயில் மதிய உணவு வேண்டும் என்று கேட்டதால், சரி அனைவரும் அங்கேயே மதிய உணவை வாங்கிக் கொள்ளலாம் என்று, வாங்கி உண்டோம். எனக்கும் கோமதிக்கும் அந்த உணவு அவ்வளவாக பிடிக்கவில்லை, ஆனால் கார்த்திக் அதை ரசித்து உண்டான். மதியம் மூன்றரை மணிக்கு வெல்லிங்டன் நகரில் இருந்து விமானம் ஏறி பிரிஸ்பேண் சென்றடைந்தோம். இத்துடன் எங்களின் நியூசிலாந்து முதல் பயணம் முடிவுக்கு வந்தது, நீங்கள் அனைவரும் எங்களுடன் தொடர்ந்து பயணித்ததற்கு நன்றி.
0 Comments:
Post a Comment
<< Home