DreamLand

Monday, May 05, 2025

நியூசிலாந்து பயணம்! - Day 10

03-Jan-2023: இன்று நாங்கள் ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் சென்றுவர திட்டமிட்டு இருந்தோம். அந்த ஒரு இடம் மட்டுமே நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து நான்கு மணி நேர பயணத் தொலைவில் இருந்தது. அது நாங்கள் எங்கேயும் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ச்சியாக செலுத்தினால் சென்றடைய ஆகும் காலம் இதுவே உணவு இடைவேளை, இயற்கை பாதைகளுக்கான இடைவேளை என்று வாகனத்தை நிறுத்தினால் இன்னும் கூடுதலான நேரம் ஆகும்.  அந்த இடத்தின் பெயர் மில் போர்டு சவுண்ட் (Milford Sound).


Glenorchy-ல் இருந்து குறுக்காக ஒரு வழி அமைத்திருந்தால், பயண நேரம் வெகுவாக குறைந்திருக்கும். ஆனால் நாங்கள் வட்டன் சுத்தி வழியிலேயே சென்றடைய வேண்டி இருந்ததாலும், உணவு இடைவேளைக்கும், மற்ற இடைவேளைகளுக்கும் நேரம் எடுத்துக் கொண்டதாலும் மொத்த பயண நேரம் ஐந்தரை மணி நேரம் ஆனது.

பயணத்தின் தொடக்கத்தில் சிறிது நேரத்திற்கு, Glenorchy செல்லும் வழியில் இருக்கும் வக்கட்டிப்பு(Lake Wakatipu) ஏரியின் அருகிலேயே பயணிப்பதால், அந்த ஏரியின் அழகை மீண்டும் ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மலைகளின் ஊடே பயணித்து, மீண்டும் ஒரு ஏரியின் அழகை காணும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஏரியின் பெயர் லேக் அனவு(Lake Anau)

இறுதியாக Milford Sound சென்றடைந்தபோது மதியம் ஒன்றரை மணி. நாங்கள் இரண்டு மணிக்கு, படகு சவாரி ஒன்றை முன் பதிவு செய்திருந்தோம். அவசர அவசரமாக, இயற்கை உபாதைகளை முடித்துவிட்டு, மதிய உணவையும் உண்டு முடித்துவிட்டு படகில் சென்று அமர்ந்தோம். அது ஒரு 90 நிமிட படகு சவாரி. படகில் செல்லும்போது இயற்கை காட்சிகளை கண்டு ரசித்துக்கொண்டே செல்லலாம் என்றனர். 

ஆனால் அங்கு அமைந்திருந்த காட்சிகள் ஒன்றும் அபாரமாக இருக்கவில்லை. ஒரு சாதாரண அழகையே கொண்டிருந்தன. படகு சவாரி முடிந்து திரும்பியதும் கார்த்திக் கேட்டது, இந்தப் படகு சவாரிக்காக நாம் இவ்வளவு தொலைவு காரில் பயணம் செய்து வந்தோம்? இதற்கு வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்றான்.



படகு சவாரியில் சிற்றுண்டி வாங்கி சாப்பிட்டோம். சவாரியை முடித்துக் கொண்டு மீண்டும் 5 மணி நேரம் காரில் பயணம் செய்து வீட்டினை அடைந்தோம். வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் பயணக் களைப்பு தீர, ஜக்கூசியில் சுடுநீர் குளியல் எடுத்துக் கொண்டோம். 


இந்த நாள் நிறைவடைந்தது, ஆனால் ஒன்றும் நிறைய இனிமையாக இருக்கவில்லை.

0 Comments:

Post a Comment

<< Home