04-Jan-2023 : எங்களுடைய இன்றைய பயணத் திட்டத்தின் படி வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு இடத்திற்கு சென்றோம்.
கவாறு தொங்கு பாலம்
இந்த இடத்தின் பெயர் கவாறு தொங்கு பாலம்(Kawarau Suspension Bridge). அதாவது இந்த இடத்தில் தான் உலகிலேயே முதன் முதலாக பொதுமக்கள் பங்குபெறும் பஞ்சி ஜம்பிங்(Bunjee Jumping) விளையாட்டு தொடங்கப்பட்டது. AJ Hackett மற்றும் Henry van Asch இணைந்து இந்த பஞ்சி ஜம்பிங் விளையாட்டினை 1988 ஆம் ஆண்டு கவாறு தொங்கு பாலத்தில் தொடங்கினர்; அதனால் இந்த இடம் பஞ்சி ஜம்பிங்கின் பிறப்பிடம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் பாலம் கவரு ஆற்றின் மீது 43 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால், அந்த ஆற்றின் பெயரைக் கொண்டே அழைக்கப்படுகிறது. உலகிலேயே மிக உயரமான வர்த்தக பஞ்சி ஜம்பிங் வசதி சீனாவின் Zhangjiajie Glass Bridge ல் அமைந்துள்ளது, இது 370.25 மீட்டர் (1,214 அடி 8 அங்குலம்) உயரத்தில் உள்ளது.
இந்த இடம் நாங்கள் தங்கி இருக்கும் இடத்திலிருந்து வெறும் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கவாறு பாலத்திற்கு செல்லும் வழியில் ஒரு அழகான ஏரி(Lake Hayas) அமைந்திருந்தது அந்த ஏரியில் சிறிது நேரம் காலாற நடந்து விட்டு நாங்கள் கவறு பாலத்தை அடைந்தோம்.
பஞ்சி ஜம்பிங் என்பது, ரப்பரால் ஆன கயிற்றை காலில் கட்டிக் கொண்டு அந்த கயிற்றின் மறுமுனையை, நிலையான ஒரு கம்பத்தில் கட்டிவிட்டு, தலைகீழாக குதிப்பதாகும்.
கவாரு பாலத்தில் இரண்டு விதமாக குதிப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். ஒன்று, குதிக்கும் பொழுது கீழே ஓடும் ஆற்றின் நீர் பரப்பை சென்று அடையாமல் குதிப்பது; மற்றொன்று குதிக்கும் பொழுது கீழே ஓடும் ஆற்று நீரினுள் உங்கள் தலை மூழ்குமாறு குதிப்பது. நாங்கள் மூன்றாவதாக ஒருவிதத்தை கேட்டோம். அதாவது காலில் கயிறு கட்டாமல் குதிக்க முடியுமா என்று கேட்டோம். அவ்வாறெல்லாம் குதிக்க அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டதால் நாங்கள் குதிக்கவில்லை 😁😁
பஞ்சி ஜம்பிங் விளையாட்டு என்பது சில ஆபத்துகளை கொண்டிருக்கும். நாங்கள் நியூசிலாந்து பயணத்திற்கு ஆயத்தமாகி கொண்டிருக்கும் பொழுதே பஞ்சி ஜம்பிங் விளையாட்டு குறித்த சில காணொளிகளை கண்டோம். அதில் ஒரு காணொளியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண்மணி Zambia இல் பஞ்சி ஜம்பிங் செய்யும்பொழுது கயிறு அறுந்து ஆற்றினுள் விழுந்து விட்டார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியும் என்பதால் லேசான காயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தேறினார்.
இது போன்ற விபத்துக்கள் ஒரு பக்கம் என்றால், காலில் கட்டப்பட்டுள்ள கயிறு, நீங்கள் தலைகீழாக குதிக்கும் பொழுது, உங்களை கீழ்நோக்கி இழுக்கும் என்பதால், உங்களுக்கு முதுகு தண்டுவடத்தில் முன்பே ஏதாவது பிரச்சனை இருந்தால் அது மேலும் தீவிரமடையலாம்; உங்களுக்கு ஏதாவது புதிதாக முதுகுத்தண்டுவடத்தில் பிரச்சனை வரவும் வாய்ப்பு இருக்கிறது என்று அங்கே எச்சரிக்கை பலகை வைத்திருந்தனர். இவை இரண்டின் காரணமாக நாங்கள் பஞ்சி ஜம்பிங் செய்வதில்லை என்று முடிவெடுத்தோம். அது மட்டும் இல்லை என்றால் நீங்கள் அதை அறுத்து தள்ளி இருப்பீர்கள் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
ஆனால் அதே இடத்தில் ஜிப்லைன் விளையாட்டையும் அமைத்திருந்தனர். அந்த விளையாட்டை விளையாடி பார்ப்பது என்று முடிவெடுத்தோம். ஜிப்லைன் விளையாட்டினை நானும் கோமதியும் இணைந்து விளையாடினோம். கோமதி சூப்பர் வுமன் போல குப்புற படுத்துக் கொண்டும், நான் வவ்வால் போல தலைகீழாக தொங்கிக் கொண்டும் அந்த விளையாட்டை விளையாடினோம்.
நாங்கள் இருவரும் சேர்ந்து விளையாடிய போது எடுத்த போட்டோ எங்கேயோ தவறிவிட்டது. அதிலும் நான் தலைகீழாக தூங்கிக் கொண்டு செல்லும் பொழுது எனது கைகளைக் கொண்டு தொங்கு கயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, என்பது தெரியாமல் அதனை பிடித்துக் கொண்டே சென்றேன். எனக்குப் பிறகு விளையாடிய ஒருவர், அவ்வாறு தலைகீழாகச் செல்லும் பொழுது கைகளை அகல விரித்துக் கொண்டு சென்றார். அப்பொழுதுதான் நான் தவறாக விளையாடியது எனக்கு தெரிந்தது. அதனால் அந்த விளையாட்டை நான் மீண்டும் விளையாடுவது என்று முடிவு செய்தேன். ஆனால் கோமதிக்கு மீண்டும் விளையாட விருப்பமில்லை.
Arrowtown Chinese Settlement
ஆனால் மீண்டும் விளையாடுவதற்கு முன்பு, நாம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏரோ டவுன் சீனர்கள் குடியிருப்புக்கு சென்றோம்.
🏮 வரலாற்றுப் பின்னணி:
- 1860களில், பெரும்பாலும் சீனாவின் குவாங்டாங் (Guangdong) மாகாணத்திலிருந்து வந்த சீன தங்க சுரங்கத் தொழிலாளர்கள், ஆஸ்திரேலியாவிலிருந்து பின்னர் நியூசிலாந்துக்கு அழைக்கப்பட்டனர்.
- அவர்கள் பெரும்பாலும் வெள்ளையர்களால் பாகுபாடு காட்டப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் நகரத்தின் எல்லைகளில் வாழ்ந்தனர்.
- கடுமையான சூழ்நிலைகளுக்கு மத்தியில், அவர்கள் சுயமாக எளிமையான குடியிருப்புகளை கட்டி சிறு சமூகமாக வாழ்ந்தனர்.
📍 இன்று காணக்கூடியவை:
- மீளமைக்கப்பட்ட கல் குடியிருப்புகள்: அக்கால சீனர்கள் வாழ்ந்த சில குடியிருப்புகள் இன்று வரை பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன.
- தகவல் பலகைகள்: அங்கு வாழ்ந்த சில நபர்களின் வாழ்க்கைச் சுருக்கங்களை விவரிக்கின்றன.
- அழகான இயற்கை சூழல்: இந்த குடியிருப்பு புஷ் கிரீக் (Bush Creek) என்ற நீரோடையின் கரையில் அமைந்துள்ளது. அமைதியான சூழ்நிலையில் நடைபயணிக்க இது சிறந்த இடம்.
🧭 ஏன் செல்ல வேண்டும்?
- இது பழைய சீன குடியாளர்கள் எதிர்கொண்ட கடுமையான சூழ்நிலைகளுக்கும் அனுபவங்களுக்குமான நினைவகம்.
- நியூசிலாந்தின் பன்முகமான சமூக வரலாற்றை புரிந்து கொள்ள உதவும்.
- இது இலவசம் மற்றும் திறந்த வெளி மியூசியமாகவும் செயல்படுகிறது; உங்கள் விருப்பப்படி சுற்றிப் பார்க்கலாம்.
- மதிய உணவு உட்கொள்ள அங்கு, பல உணவகங்கள் உள்ளன. ஆனால் விலை சற்று அதிகம் தான்
மீண்டும் கவாரு வேண்டும் கவாரு:
மீண்டும் ஜிப்லைன் விளையாட்டை விளையாடுவதற்கு என்று கவரு தொங்கு பாலத்தை அடைந்தோம். அங்கு நான் மட்டும் அந்த ஜிப்லைன் விளையாட்டை விளையாடினேன். இம்முறை தலைகீழாக தொங்கும் பொழுது, கைகளை எதையும் பிடித்துக் கொண்டிருக்காமல், அகல விரித்தபடி விளையாடியதால் உற்சாகம் அதிகமாக இருந்தது
நான் விளையாடிய போது எடுத்த வீடியோவில் இருந்து ஒரு பிரேமை எடுத்து போட்டோவாக கொடுத்துள்ளேன். கீழே உள்ளது விளையாடி முடித்த பிறகு எடுத்த போட்டோ.
கவரு ஆறு இரண்டு மலைகளுக்கு இடையேயான பள்ளத்தாக்கின் ஊடே செல்லும் அழகு, அந்த ஆற்றின் பச்சை நிறத்தால் மேலும் மெருகேறியது என்று கூறினால் தவறில்லை. அதனால் மதியம் வரை அங்கே நிறைய நேரம் செலவழித்தோம். நிறைய பேர் பஞ்சி ஜம்பிங் சாகச விளையாட்டு விளையாடியதை பார்த்து ரசித்தோம்.
Queenstown Garden
அதற்குப் பிறகு எந்த ஒரு விளையாட்டுக்கோ, சாகசங்களுக்கோ நாங்கள் முன்பதிவு செய்து இருக்கவில்லை. அதனால் நாங்கள் குயின்ஸ் டவுன் தோட்டத்தில்(Queenstown Garden) காலாற நடந்தோம், கார்த்திக் அங்கிருந்த பூங்காவில் விளையாடினான். தோட்டத்தின் ஒரு புறத்தில் அமைந்திருந்த ஏரியில் கால் நனைத்தோம்.
அதற்குள் மாலையாகி விட்டது; நாங்கள் குயின்ஸ் டவுன் நகரத்திற்குச் சென்று, அங்கே அமைந்திருந்த கடைகள், உணவகங்கள், நினைவுப் பரிசு வாங்கும் இடம் ஆகியவற்றை சுற்றிப் பார்த்தோம். நகரத்தினுள் உலகப் பிரசித்தி பெற்ற பர்கர் கடை ஒன்று இருக்கிறது; அதன் பெயர் பெர்க் பர்கர்
(Ferg Burger).
அந்த சுவையான பர்கர்க்காக, மக்கள் எப்பொழுதும் அந்த கடையின் முன் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். இன்றும் அங்கே கூட்டம் அதிகமாக இருந்ததால், நாம் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று நாங்கள் அன்று அங்கு வாங்கி உண்ணவில்லை.
அதன் பின்னர் வீட்டுக்குச் சென்று நாங்கள் எங்கள் உடமைகளை பேக் செய்தோம். ஏனென்றால் நாளை காலை குயின் டவுனில் இருந்து புறப்பட இருக்கிறோம். அடுத்த மூன்று நாட்கள், டியூனீடின்(Dunedin) மற்றும் டீமாரு(Timaru) நகரங்களை சுற்றி விட்டு மீண்டும் குயின்ஸ் டவுன் வந்து சேருவோம். டியூனீடின்நகரத்தில் ஒருநாளும், டீமாரு நகரத்தில் ஒருநாளும் தங்குவதற்கு ஹோட்டல்கள் ஏற்கனவே முன் பதிவு செய்து வைத்திருந்தோம். மூன்று நாளைக் காண இந்த பயணம் ஒரு வட்டன் சுற்றிப் பாதையாக அமையும்.
இந்த மூன்று நாள் பயணத்தின் நோக்கம் என்பது நியூசிலாந்தின் தென் தீவில் உள்ள நகரங்களை சுற்றி வருவது மட்டுமே. மற்றபடி அங்கே பார்ப்பதற்கு ஆகச் சிறந்த இடங்கள் என்று ஒன்றும் இல்லை. வாருங்கள் என்னுடன் தொடர்ந்து பயணிப்போம்.
0 Comments:
Post a Comment
<< Home