DreamLand

Thursday, May 15, 2025

நியூசிலாந்து பயணம்! - Day 12

05-Jan-2023: காலை 9 மணிக்கு எல்லாம் நாங்கள் தங்கி இருந்த வீட்டை காலி செய்துவிட்டு, Dunedin நோக்கி புறப்பட்டோம். Dunedin சென்றடைய மூன்றரை மணி நேரம் பயணம் மட்டுமே. அதனால் வழியில் Cromwell நகரத்திற்கு சற்று முன்பாக அமைந்துள்ள, Highlands Motor Park, செல்ல திட்டமிட்டு இருந்தோம். 

இந்த மோட்டார் பார்க்கில் உள்ள அருங்காட்சியகத்தில், கார் பந்தயத்தில் பயன்படுத்தப்பட்ட கார்களும், சில பழைய கார்களும்(Classic Cars), சில அதி உயர்நிலை கார்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 




மேலும் இந்த இடத்தின் சிறப்பம்சம் என்பது, கார் பந்தயத்தில் பயன்படுத்தப்படும் கார்களில் நீங்கள் ஒரு சவாரி மேற்கொள்ளலாம். அந்தக் கார்களை கையாளத் தெரிந்த ஒரு டிரைவர்,  உங்களை முன் சீட்டில் அமர வைத்து, உங்களுக்காக, அந்த கார்களை அதிவேகமாக இயக்கி காட்டுவார்.  அதிவேகம் என்றால் எவ்வளவு என்று கேட்பவர்களுக்கு, அது 225 KMPH. அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க விடுவதற்கு நீங்கள் தயாரானால், கண்டிப்பாக நீங்கள் அந்தக் கார்களில் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும்.  இந்த சவாரிக்கு கட்டணமாக 200 நியூசிலாந்து டாலர்கள் வசூலிக்கின்றனர்.

அந்தக் கார் அருங்காட்சியகத்தின் ஒரு ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த வீடியோ கேமை கார்த்திக்கும் கோமதியும் விளையாடினர்.  அதற்குப் பிறகு Go-Karting செல்வது என்று முடிவு செய்தோம்.  ஒரு சுற்று மட்டும் முன்பதிவு செய்தால் 54 நியூசிலாந்து டாலர்கள் என்றும் இரண்டு சுற்றுகளை சேர்த்து முன்பதிவு செய்தால் மொத்தம் 79 நியூசிலாந்து டாலர்கள் என்றும் அவர்கள் விலை நிர்ணயித்து இருந்தார்கள். ஒரு சுற்றில் நான் கார்த்திக் உடன் செல்வது என்றும் இரண்டாவது சுற்றில் கோமதி கார்த்திக் உடன் செல்வது என்றும் முடிவு செய்து, நாங்கள் இரண்டு சுற்றுக்களுக்கு முன்பதிவு செய்தோம். 

Go-Karting காரில் ஏழு வயது சிறுவர்களை அனுமதித்தாலும், அவர்களுக்கு வாகனத்தை இயக்குவதற்கான டிரைவர் இருக்கையில் அமர அனுமதிப்பதில்லை. ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக் இரண்டும் டிரைவரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்தாலும், அருகே அமர்ந்து வரும் நபருக்கு Steering Wheel கட்டுப்பாடு உண்டு. நாங்கள் இருவரும் தலைக்கவசத்தை அணிந்து கொண்டு Go-Karting காரில் புறப்பட தயாரானோம்.


முதல் சுற்று வாகனங்கள் வரிசையாக கிளம்பின. நான் நன்றாகவே காரை செலுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் ஸ்டியரிங் வீல் கண்ட்ரோல் கார்த்திக் இடம் இருந்ததால், அவன் விசுக் விசுக்கென்று திருப்பினான். அவன் திருப்பிய திருப்பலில் என் வயிற்றை திருகி வாந்தி வரும் நிலை ஆகிவிட்டது.  காரினை திருப்பியதால் வாந்தி வரும் நிலை ஏற்பட்டது ஒருபுறம் என்றால், காரில் இருந்து வரும் பெட்ரோல் வாசத்தில், தலை வலிக்கவும் சுற்றவும் ஆரம்பித்துவிட்டது

இதனால் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் சென்று கொண்டு இருந்த எனது வண்டி தொடர்ந்து பின் தங்கி 11வது இடத்தை அடைந்தது. இதில் எனக்கு ஆறுதலான விசயம் என்னவென்றால் எனக்கும் அடுத்தபடியாக 12 வது இடத்திலும் ஒரு கார் வந்திருந்தது. 


இவ்வாறு முதல் சுற்றில் பதினோராவது இடத்துடன் விட்டால் போதுமடா சாமி என்று ஓடிவந்த எனக்கு மேலும் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அது கோமதி கார் ஓட்ட விருப்பமில்லை என்றும், இரண்டாவது சுற்றுக்கும் என்னையே போ என்றும் அனுப்பிவிட்டார். கார்த்திக்கோ இரண்டாவது சுற்று கண்டிப்பாக போயே ஆக வேண்டும் என்று கூறிவிட்டான். அதனால் வேறு வழி இல்லாமல் இரண்டாவது சுற்றுக்கும் அவனை அழைத்துக் கொண்டு சென்றேன்.

இரண்டாவது சுற்றில் தொடக்கம் முதலே காரினை மெதுவாகவே செலுத்தினேன். கார்த்தி வேகமாக போ வேகமாக போ என்கிறான்; ஆனால் வேகமாக போனால் என்னுள் இருக்கும் வாந்தி வேகமாக வெளியில் வந்து விடும் போல் இருந்ததால், நான் ஆக்ஸிலரேட்டரை மிகவும் மெதுவாகவே செலுத்தினேன். நான் வண்டியை மிகவும் வெகுதுவாக செலுத்தியதால் வெறுப்படைந்த கார்த்திக்கின் முகபாவனை மற்றும் உடல் பாகனை ஏண்டா இவனுடன் காரில் வந்தோம் என்று சொல்லாமல் சொல்வதாக அமைந்தது.

இந்த சுற்றில் நான் பதினோராவது இடத்தில் இருந்து முன்னேறி பத்தாவது இடத்தை வந்தடைந்தேன்.  ஆனால் அந்த சுற்றில் பங்கேற்ற மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 10 என்பதால் எனக்கு பத்தாவது இடம் கிடைத்தது. இல்லை என்றால் இன்னும் பெரிய இலக்கத்தில் இடம் கிடைத்திருக்கும். 


இவ்வாறு எங்கள் Go-Karting சவாரி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது எனக்கு பெருத்த நிம்மதி.  சவாரி முடிந்ததும் இயற்கை அன்னையின் அழைப்புக்கு செவிசாய்க்க கழிவறை நோக்கி ஓடினோம். அங்கே ஓர் வினோதம் எங்களுக்கு காத்திருந்தது. அங்கிருந்த அனைத்து கழிப்பறைகளும் கண்ணாடி சுவற்றினால் செய்யப்பட்டிருந்தது. 

அதில் என்ன வினோதம் என்றால் உள்ளிருந்து பார்த்தால் வெளியில் இருக்கும் யாவையும் தெளிவாகத் தெரிவது போலவும், வெளியில் இருந்து பார்த்தால் உள்புறம் ஏதும் தெரியாதது போலவும் அமைக்கப்பட்டு இருந்தது.  இது போன்ற அமைப்பை வீட்டு கண்ணாடி சுவற்றில் முன்பே பார்த்திருந்தாலும், கழிவறையில் காண்பது இதுவே முதல் முறை.


என்னதான் வெளியில் இருந்து பார்த்தால் உள்ளே தெரியாது என்றாலும் அவ்வாறான ஒரு அமைப்பில் நமக்கு இயற்கை உபாதைகளை கழிக்க கொஞ்சம் வெட்கமாகவும் அருவருப்பாகவுமே இருந்தது. 

அதை முடித்துவிட்டு வெளியில் வரும்போது பார்த்தால், இசைக்கருவிகளை கழிப்பறையின் சுவற்றில் மாட்டி வைத்திருந்தார்கள். ஆனால் அருகில் சென்று பார்க்கும் பொழுது தான் தெரிந்தது அது இசைக்கருவிகள் அல்ல ஆண்கள் பயன்படுத்தும் Urinals என்பது. 
 



ஆனால் இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது நீங்கள் கழிக்கும் சிறுநீரின் வேகத்திற்கு ஏற்ப அந்த கருவிகளில் இருந்து இசையும் உங்களுக்கு கேட்கிறது. அடக்கிய சிறுநீரை வெளியேற்றுவதே இன்பம் என்றால், அதனை இசையுடன் வெளியேற்றுவது பேரின்பம் தான். 

உங்களுக்கு சிறுநீர் வரவில்லையா? ஆனாலும் இசையை கேட்டு ரசிக்க ஆர்வமாக உள்ளீர்களா? கவலை வேண்டாம்! உங்களுக்காகவே சிறிய பாட்டில்கள் வைத்துள்ளார்கள். அதில் தண்ணீர் நிரப்பி, நீங்கள் அந்த யூரினல்ஸ் மீது பீச்சியடித்து, அந்த இசையை கேட்டு ரசிக்கலாம் 😂😂.

இவ்வாறு Highlands Motor Park இடத்தில் எங்கள் பயண அனுபவம் புதுமையாகவும் சிறப்பாகவும் அமைந்தது. மேலதிக தகவல்களுக்கு இந்த இணைய தளத்தை பார்க்கவும், https://www.highlands.co.nz/ 

வழியில் Clyde Dam என்ற அணைக்கட்டை பார்த்துவிட்டு, மாலை நெருங்கும் நேரம் Dunedin நகரத்தில் நாங்கள் முன்பதிவு செய்திருந்த தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த இடத்தின் பெயர் Dunedin Village. அந்த இடம் அங்குள்ள  ஓடாகோ பல்கலைக்கழகத்தில்(University of  Otago) பயிலும் மாணவர்கள் தங்குவதற்கென்று வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம். நாங்கள் சென்றது வருட இறுதி என்பதால், மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டோ, அல்லது விடுமுறையிலோ சென்றிருந்ததால், அந்த கட்டிடத்தின் அறைகளை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டிருந்தனர்.


எங்கள் அறைக்குச் சென்று குளித்து தயாரான பிறகு, Otago Peninsula விற்கு செல்வது என்று முடிவெடுத்தோம். செல்லும் வழியில் Larnach Castle சென்று விட்டு செல்வது என்றும் முடிவானது.

Peninsula செல்லும் வழி மிகவும் அழகாக இருந்தது. ஒருபுறத்தில் கடலும், ஒரு புறத்தில் மலையும், என நடுவில் வாகனத்தை செலுத்துவதற்கு நன்றாக இருந்தது. நாம் மெல்போனில் பலமுறை Great Ocean Road சென்றிருக்கிறோம். அங்கே Lorne முதல் Apollo Bay வரை உள்ள சாலை, இந்த ஒட்டகோ பினின்சுலாவை போலவே, ஒரு புறத்தில் பசிபிக் பெருங்கடலும், மறுபுறத்தில் Otway National Park மலைத்தொடரும் அமைந்திருக்கும். ஆனால் Great Ocean Road உடன் ஒப்பிட்டால், இந்த பெனின்சுலா சாலை அத்துணை சிறப்பாக இல்லாவிட்டாலும், நிச்சயம் ஒரு புது அனுபவமாகவே இருக்கும்.

Larnarch Castle சென்றடைந்தபோது, மாலை ஐந்தரை மணிக்கு மேல் ஆகிவிட்டதால் அவர்கள், அதனை மூடிவிட்டு இருந்தனர். அதனால் ஏமாற்றத்துடன் பெண்ணின் சுலாவில் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

45 நிமிட பயணத்திற்கு பிறகு நாங்கள் சென்றடைந்த இடம் Albatross என்ற பறவைகளுக்கென்று அமைந்திருக்கும் ஆராய்ச்சி நிலையமான, Royal Albatross Centre. அவர்கள் அந்தப் பெனின்சுலாவில் சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர், அந்த நிலையத்தில் albatross பறவைகள் குறித்து காணொளி காட்சிகளும் திரையிடுகின்றனர்.  

ஆனால் நாங்கள் அதற்கு முன்பதிவு செய்திருக்கவில்லை; அதனால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த நிலையத்தைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள albatross பறவைகளைப் பார்த்து ரசித்தோம், அங்குள்ள கடற்கரையில் சீல் விலங்குகள் விளையாடிக் கொண்டிருந்ததையும் பார்த்து ரசித்தோம்.




இவ்வாறாக எங்களின் Otago Peninsula பயணத்தை முடித்துக் கொண்டு எங்களின் தங்கும் அறைக்கு வந்து சேர்ந்தோம். இன்றைய பொழுது இனிதே முடிந்தது நாளை Dunedinல் உள்ள சில இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு தொடர்ந்து பயணிக்கவிருக்கிறோம்.

0 Comments:

Post a Comment

<< Home