DreamLand

Friday, May 05, 2023

நியூசிலாந்து பயணம்! - Day 5

29-Dec-2023:  இங்கே நியூசிலாந்து நாட்டின் பூர்வ குடியினரை பற்றிய ஒரு சிறு குறிப்பு தேவைப்படுகிறது. நியூசிலாந்து நாட்டின் பூர்வ குடியினரின் பெயர் 'மாவோரி'. ஆஸ்திரேலியாவிலும் பூர்வ குடியினர் இருக்கின்றனர் ஆனால் அவர்களுடைய மொழியோ கலாச்சாரமோ வழக்கமாக மக்கள் புழங்கும் இடங்களில் இருப்பதில்லை. ஆனால் நியூசிலாந்து நாட்டில் ஒவ்வொரு இடமும் மாவோரிகளின் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவோரி இனத்தவரின் கலைகளும் கைவினைப் பொருட்களும் எல்லாவிடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. மாவோரிகளின் மொழிக்கு எழுத்து வடிவம் உள்ளதா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் அவர்களின் மொழிக்கு ஆங்கிலத்தில் எழுத்து வடிவம் கொடுத்துள்ளனர். உதாரணத்திற்கு நியூசிலாந்து நாட்டிற்கு மாவோரிகளின் மொழியில் Aotearoa என்று பெயர்.

இன்று நாங்கள் முதலில் சென்ற இடம் டி புய்யா(Te Puia) வில் இருக்கும் புகுத்து கீசர்(Pohutu Geyser). முன்பே குறிப்பிட்டது போல நியூசிலாந்தின் வடக்கு தீவில் புவி வெப்பம்(Geothermal) சார்ந்த நிகழ்வுகள் அதிகம் தென்படுகின்றன. அவற்றுள் முக்கியமான ஒன்றுதான் இந்த புகுத்து கீசர்.  இந்த இடம் ஹேமில்டனில் இருந்து ஒன்றரை மணி நேர தொலைவில் இருப்பதால் நாங்கள் சற்று விரைவாக புறப்பட்டோம். காலையில் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு விட்டு அந்த அடுப்பை சுத்தம் செய்யக்கூட நேரமில்லாமல், மீதமிருந்த உணவையும் அப்படியே வைத்துவிட்டு சாயந்திரம் வந்து கிளீன் செய்து கொள்ளலாம் என்று புறப்பட்டுச் சென்றோம்.

நாங்கள் ஒரு வழி காட்டப்படும் சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்து இருந்தோம். அந்த சுற்றுலாவில் புகுத்து கீசர் உடன் சேர்த்து, மாவோரிகள் கைவினைப் பொருட்கள் செய்யும் தொழிற்சாலையும், அவர்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அரங்கமும், அவர்கள் கலாச்சாரம் குறித்த விரிவான விளக்கங்களும் அடங்கும்.













அந்தப் பள்ளத்தாக்கு முழுவதையும் மாவோரி சகோதரர் ஒருவர் சுற்றி காண்பித்தார். மேலே புகைப்படத்தில் அவர் சுட்டிக்காட்டும் பலகையில் உள்ளது மாவோரி மொழியில் ஒரே ஒரு வார்த்தையாகும்.  அந்த வார்த்தையை நான் சரியாக படித்தேன் என்பதற்காக அவர் என்னை பாராட்டினார் என்பது ஒரு கூடுதல் தகவல். மாவோரி கலாச்சார சுற்றுலா முடிந்த பிறகு அவர் எங்களை புகுத்து கீசர் அழைத்துச் சென்றார்.

டி புய்யா பள்ளத்தாக்கு முழுவதும் ஆங்காங்கே நிலத்தின் அடியிலிருந்து நீராவிகள் வெளியேறுகின்றன. அவற்றில் இந்த புகுத்து கீசர் என்ற இடத்திலிருந்து நீராவி மட்டுமல்லாது கொதிக்கும் சுடுநீரும் வெளியேறுகிறது. 










நாங்கள் அந்த சகோதரரிடம் 'எவ்வாறு நீர் இப்படி கீழிருந்து மேல் எழுகிறது, அதுவும் சூடாக?' என்று கேட்டபோது அவர் குறிப்பிட்டது இந்த இடமும் ஒரு எரிமலை தான். இதன் அடியில் கொதித்துக் கொண்டிருக்கும் நீர் தான் அந்த கொதிநிலை அதிகமாகும் பொழுது இவ்வாறு வெளியேறுகிறது என்று சொன்னார். அவர் கூறியது எங்கள் அனைவர் உள்ளும் ஒரு அச்சத்தை கிளப்பியது; அதனால் நாங்கள் மீண்டும் அவரிடம் கேட்டோம், 'அப்படியானால் இந்த எரிமலையும் வெடித்து கிளம்ப வாய்ப்புள்ளதா?'. அதற்கு அவர் இது பத்தாயிரம் ஆண்டுகளாக இப்படியே தான் உள்ளது, இது வெடித்து கிளம்ப வாய்ப்பு இல்லை, நீங்கள் என்னுடன் இருக்கும் வரை பத்திரமாகவே இருப்பீர்கள் என்று கூறினார். இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்று மனதுக்குள் நினைத்தபோது, நம்புனா தான் உங்களை வெளியில கூட்டிட்டு போய் விடுவேன் என்று அவர் சொல்வது போல எனக்கு கேட்டது. அதனால் அவர் சொன்னதற்கு தலையாட்டியவாறு அவருடன் பேருந்தை நோக்கி  கிளம்பிச் சென்றோம்.

மதியம் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று நாங்கள் கொண்டு வந்திருந்த உணவை உண்டு முடித்து சிறிது ஓய்வு எடுத்தோம். அப்போது வீட்டு உரிமையாளர் டெபி இடமிருந்து airbnb வழியாக மெசேஜ் வந்திருந்தது. நாங்கள் மிகவும் அதிகமாக என்னை பயன்படுத்துவதாகவும், சாப்பிட்ட உணவுப் பொருட்களை அப்படியே மீசை மீது வைத்து விட்டு வந்து விட்டோம் என்றும் அவர் அந்த மெசேஜில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் இதைப்போல சமையல் தொடர முடியாது என்றும், வேண்டுமானால் கார் கராஜில் செட் செய்து தருகிறோம் அங்கே வைத்து சமைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார். நாங்களும் வேறு வழியில்லாமல் கராஜில் வைத்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டோம்.

புகுத்து கீசரைத் தொடர்ந்து நாங்கள் சென்ற இடம் Zorb Ball. இரண்டு அடுக்குகளாக செய்யப்பட்டு இருக்கும் பந்தின் உட்புறமாக நாம் அமர்ந்து கொள்ள, பந்தினை மேலிருந்து கீழே உருட்டி விடுகின்றனர். பந்து உருளும் பொழுது நாமும் பந்துடன் சற்று உருளச் செய்கிறோம் அல்லது வழுக்கச் செய்கிறோம். பந்தின் உட்புற சுவருக்கும் வெளிப்புற சுவருக்கும் இடையே உள்ள வெற்றிடமானது, பந்து உருளும்போது உள் அமர்ந்திருக்கும் நமக்கு அடிபடாமல் பார்த்துக் கொள்கிறது. மேலும் நாங்கள் சென்றிருந்தது கோடை காலம் என்பதால் உட்புறமாக நாங்கள் அமருமிடத்தில் சற்று தண்ணீர் நிரப்பி விடுகின்றனர். கோடையில் அந்தத் தண்ணீரில் நனைந்து கொண்டே மேலிருந்து கீழே உருண்டு வருவது ஒரு குதூகலமான விளையாட்டாகவே இருக்கிறது.









கார்த்திக்கு மட்டும் மாற்றுத் துணி இருந்தது. பந்தின் உட்புறம் தண்ணீர் நிரப்புவது எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை, அதனால் நாங்கள் மாற்றுத் துணி எதுவும் எடுத்து வந்திருக்கவில்லை. ஆனாலும் முன்பதிவு செய்து விட்டதால் அதை விளையாடி விடுவது என்று முடிவு செய்தோம். நான் துண்டு கட்டிக் கொண்டு உள்ளே செல்வது என்றும், கோமதிக்கு அங்கே டி ஷர்ட் மற்றும் பேண்ட் வாடகைக்கு எடுத்துக் கொள்வது என்றும் முடிவானது.

மூன்று பேரும் ஒருசேர பந்தில் நுழைந்தால் போட்டோ அல்லது வீடியோ எடுப்பதற்கு ஆள் இல்லாமல் போய்விடும் என்பதால் நானும் கார்த்தியும் ஒரு பந்தில் செல்வது என்றும் கோமதி தனியாக இன்னொரு பந்தில் வருவது என்றும் முடிவானது. இதில் முதலில் நானும் கார்த்திக்கும், அந்த விளையாட்டு நிறுவனத்தின் வாகனத்தில் அந்த மலை உச்சிக்கு சென்றோம். அருகே சென்றதும் கார்த்திக் பயந்து கொண்டு நான் உள்ளே வரமாட்டேன் என்று சொன்னான். அதனால் முதலில் நான் உள்ளே சென்று பார் இங்கே வசதியாக அமர்ந்து கொள்ளலாம் உனக்கு ஒன்றும் ஆகாது வா என்று சொல்லி அவனையும் உள்ளே அழைத்துக் கொண்டேன் ஆனாலும் அவன் முதலில் அழுது கொண்டே தான் உள்ளே அமர்ந்திருந்தான்.









நமக்கு முன் விளையாடிய நபர்கள் பயன்படுத்திய நீரை அவர்கள் நம் கண் முன்னேயே மாற்றி விடுகின்றனர், அதன் பிறகு உள்ளே அமர்ந்ததும் நாம் அமர்ந்திருக்கும் பகுதியை முற்றிலுமாக மூடி விடுகின்றனர். மறு வினாடியே அவர்கள் நம்மை மேலிருந்து கீழே உருட்டி விடுகின்றனர். வந்து உருளும் பொழுது நாம் தலைகீழாகவெல்லாம் செல்வதில்லை; சற்றே நாம் மேலே வரும் பொழுது வழுக்கிக் கொண்டு மீண்டும் கீழே வந்து விடுகிறோம் அவ்வாறு வர ஆரம்பித்ததும் தான் கார்த்திக்குக்கு பயம் போனது; அவன் என்ஜாய் செய்ய துவங்கினான். 









ஆனால் ஒரு அரை நிமிடத்தில் எல்லாம் நாம் கீழே வந்து சேர்ந்து விடுகிறோம்; அப்படி நாங்கள் சேர்ந்த பிறகு, கோமதி, அவர்களின் வாகனத்தில் ஏறி மேலே சென்றார். அவர் சிறிதும் பயப்படாமல் நன்றாக என்ஜாய் செய்து விளையாடி விட்டு வந்தார். Zorb Ball விளையாடி முடித்துவிட்டு கீழே வந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த சுடுநீர் தொட்டியில் சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்தோம்.








பின்பு அங்கிருந்து பயணப்பட்டு ரோட்டோரோ ஏரிக்கரையோரம் அமைந்துள்ள பூங்காவிற்கு சென்று சிறிது நேரம் விளையாடிவிட்டு பின்பு காலாற ஒரு நடை பயிற்சியும் செய்துவிட்டு,  கரையோரம் நின்று ஏரிக்கரை பூங்காற்றே நீ போற வழி தென்கிழக்கோ என்று பாடலும் பாடிவிட்டு ரோட்டோரோவை விட்டு கிளம்பி ஹேமில்டன் வீட்டை அடைந்தோம். 

வீட்டில் நாங்கள் பயன்படுத்திய மின்சார அடுப்பு, பாத்திரம், மசாலா பொருட்கள், எண்ணெய் ஆகியவற்றை வீட்டு உரிமையாளர் டிபி அவருடைய கார் கரேஜில் எடுத்து வைத்திருந்தார். நாங்கள் இரவு உணவை கார் கரேஜில் வைத்தே சமைத்து முடித்தோம்.

Thursday, May 04, 2023

நியூசிலாந்து பயணம்! - Day 4

28-Dec-2023:  முன்பே குறிப்பிட்டது போல முன்பதிவு செய்யப்பட்ட சுற்றுலா தளங்கள் எதற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால் காலையில் தாமதமாக எழுந்து, காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு, வீட்டை காலி செய்து, எங்கள் மூட்டை முடிச்சுகள் அனைத்தையும் கட்டி காரில் ஏற்றி , வைத்துவிட்டு வீட்டு உரிமையாளருக்கும் ஒரு பை பை சொல்லி விட்டு கிளம்பினோம்.







இன்று ரங்கிடாட்டோ  தீவுகளுக்கு தான் செல்ல முடியவில்லை அந்த தீவினை தொலைவில் இருந்தாவது படம் பிடித்துக் கொள்ளலாம் என்று செயின்ட் ஹெலியஸ்(St Heliers) கடற்கரையில் நின்று தொலைவில் தெரியும் ரங்கிடாட்டோ தீவின் முன்பு நின்று படம் பிடித்தோம்.








ஆக்லாந்து நகரத்தில் இருந்து ஹேமில்டன்(Hamilton) செல்லும் வழியில் இருக்கும் ஆக்லாந்து தாவரவியல் பூங்கா(Botanical Garden) சென்றடைந்தோம். மதியத்திற்காக நாங்கள் சமைத்து எடுத்து வைத்திருந்த உணவை அங்கு புல்வெளியில் வைத்துவிட்டு, பூங்காவை சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோம். புல்வெளியில் அமர்ந்து மதிய உணவை உண்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். 

அதன் பின் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்து,  மாலை 4 மணிக்கு, ஹேமல்டன் நகரில் நாங்கள் முன்பே புக் செய்திருந்த வீட்டினை அடைந்தோம். வீட்டின் உரிமையாளர் டிபி எங்களை மிகவும் கனிவுடன் வரவேற்றார். அதை வீடு என்று சொல்வதை விட ஒரு சிறு அறை என்று சொல்ல வேண்டும் ஏனென்றால் ஒரே ஒரு அறையில் கட்டில் மெத்தை ஒரு புறமிட்டு அதன் மறுபுறத்தில் சமையல் கட்டு அமைத்திருந்தனர். அவர் அந்த அறையை சுற்றிக் காண்பித்ததோடு அந்த அறையில் இருந்த டாய்லெட்டின் சிறப்பு அம்சங்களை எங்களுக்கு விவரித்துக் கூறினார். 

அந்த டாய்லெட்டுக்கு தண்ணீர் ஒரு மோட்டார் மூலம் பம்ப் செய்யப்படுவதாகவும், அந்த டாய்லெட்டில் டிஷ்யூ பேப்பர் தவிர வேறு எதையும் போடக்கூடாது என்றும், அவ்வாறு போட்டால் டாய்லெட் அடைத்துக்கொள்ளும், மோட்டார் பம்ப் வேலை செய்யாது. நாங்கள் பிளம்பரை கூப்பிட்டு தான் சரி செய்ய வேண்டும், சரி செய்வதற்கான செலவீனம் எங்களிடமிருந்தே பெற்றுக் கொள்ளப்படும் என்றும் விவரித்துக் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் உணவு சமைக்கும்பொழுது அதிகமாக எண்ணெய் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதிகமாக மசாலா பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அப்படி பயன்படுத்தினால் அது வீடு முழுவதும் ஒரு துர்நாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அதனால் எங்களுக்கு அடுத்து அங்கு தங்க வருபவர்களுக்கு மீண்டும் சுத்தம் செய்து கொடுப்பது சிரமம் ஆகிவிடும் என்றும் கூறினார். அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லை என்று சரி என்று ஒப்புக்கொண்டோம்.

மறுநாள் இரண்டு இடங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து இருந்ததால் இரவு சீக்கிரம் உறங்கி விடலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனாலும் இரவு ஆவதற்கு இன்னும் வெகு நேரம் இருந்ததால் நகரில் இருக்கும் ஏரியை சுற்றிப் பார்த்து விட்டு வரலாம் என்று மூவரும் கிளம்பினோம்.










பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி எதுவும் ஹேமில்டன் நகரில் இருக்கவில்லை; ஆனாலும் ஏரியின் அருகில் சிறுவர் விளையாட்டு திடல் அமைந்திருந்தது அங்கு நிறைய இந்திய சிறுவர்கள் வேறு விளையாடிக் கொண்டிருந்தனர். கார்த்திக்கும் அந்த விளையாட்டு திடலில் சிறிது நேரம் விளையாடினான். அதன் பின்னர் மூவரும் வீட்டினை அடைந்து இரவு உணவு அருந்திவிட்டு, கார்த்திக்கிட்டு பேராசிட்டமால் கொடுத்துவிட்டு உறங்கச் சென்றோம். 

ஆனால் கோமதியோ 15 நிமிடங்களுக்கு ஒரு முறை கார்த்திக்கை எழுப்பி விட்டு எலுமிச்சை சாறு குடி, அரிசி கஞ்சி, குடி திரவ உணவுகள் ஏதாவது குடித்தே ஆக வேண்டும்; வேறு ஏதாவது பழச்சாறு குடி என்று படுத்தி எடுத்துக் கொண்டிருந்தார். உறக்கம் வேறு வந்து கொண்டிருந்ததாலும் சற்று உடல் சோர்வடைந்து இருந்ததாலும் எனக்கு எதுவும் வேண்டாம் என்று அழுது கொண்டிருந்தான். 

நான் எப்பொழுதும் படுத்ததும் உறங்கிவிடும் பழக்கம் உடையவன்; ஆதலால் நன்றாக உறங்கி விட்டேன். சிறிது நேரம் கழித்து இவர்களின் சத்தத்தை கேட்டு நான் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தேன். கட்டிலின் கீழே படுத்துக் கொண்டிருந்த நான் கோமதியை அங்கே படுக்குமாறு சொல்லிவிட்டு கார்த்திக்கின் அருகினில் சென்று அவனை சற்று அரவணைத்துக் கொண்டு உறங்க வைத்தேன்; அவன் சிறிது நேரத்திற்கெல்லாம் நன்றாக உறங்கி விட்டான்; இரவில் அதன் பின்பு அவன் எழுந்திருக்கவே இல்லை காலையில் எழும்பொழுது அவன் காய்ச்சல் நன்றாக குணமாகி இருந்தது.