DreamLand

Friday, November 27, 2020

Karma is a boomerang

 1500களில் முகலாய பேரரசர் பாபர் அவர்களின் நினைவாக அவரது தளபதி மீர் பக்கி அவர்களால் அயோத்தியில் கட்டி எழுப்பப்பட்ட மிகப்பெரும் வரலாற்று சின்னம், பாபர் மசூதி. கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் கழித்து 1800 களின் தொடக்கத்தில், முதன்முதலில், அந்த இடம் ஒரு இந்து கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்திருக்கின்றது என்று பைசலாபாத் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 


இந்த அறிக்கைதான் சென்ற 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய சமய சர்ச்சைகளில் ஒன்றான பாபர் மசூதி vs ராமன் பிறப்பிடம், என்ற சர்ச்சைக்கு வித்திட்டது. தொல்லியல் துறையின் ஆய்வின்படி, சர்ச்சைக்கு உரிய அந்த இடத்தில், ஒரு இந்து மற்றும் புத்த மத கோயில்கள் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டாலும், அந்த இடம்தான் ராமன் பிறந்த இடம் என்பதற்கான வரலாற்று ஆவணங்களோ, அல்லது அந்த இடத்தில் ராமன் கோயில் இருந்ததற்கான அடையாளங்களோ கிடைக்கப் பெறவில்லை.


ஆனாலும் இந்த அறிக்கையை சுட்டிக்காட்டித்தான் நிர்மோகி அகரா என்னும் இந்து அமைப்பு முதன்முதலில் இந்த இடம் ராமனின் பிறப்பிடம் என்ற உரிமைகோரலை தொடங்கியது. இதனை தொடர்ந்து 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்து மகா சபை, விசுவ இந்து பரிசத் மற்றும் அதனுடைய அரசியல் பிரிவு பாரதிய ஜனதா கட்சி ஆகியோரால், பலவித உரிமைகோரல்கள் தொடரப்பட்டு, ரத யாத்திரை என்ற பெயரில் மத ரீதியான கலவரங்கள் நடத்தப்பட்டு, இறுதியாக 6-Dec-1992ம் ஆண்டு 150000கும் மேற்பட்ட நபர்களை கொண்டு கர சேவை என்ற பெயரில் திட்டமிட்டு, அன்றைய அரசில் இருந்த சங் பரிவாளர்களின் ஆதரவுடன் தகர்த்து வீழ்த்தப்பட்டது. அதை தொடர்ந்து நாடு முழுவதும் இந்துக்களுக்கும், முசுலீம்களுக்கும் மத ரீதியான மோதல்கள் தொடர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே.


சிறுபான்மை மதத்தினரை போல, இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் இந்துக்களுக்கும் தங்களது மத கோட்பாடுகளை பின்பற்றவும், வளர்க்கவும், தங்களது கோட்பாட்டின்படி மத வழிபாட்டு தளங்களை கட்டி எழுப்பி வழிபடவும் இந்த கர சேவை போன்ற முன்னெடுப்புகள் கட்டாயமாக தேவை, அதற்காக தமிழ்நாட்டில் இருந்து ஆட்களை அனுப்புவதை பெருமையாக கருதுகிறேன் என்று கூறி, தமது அதிமுக ஆட்களை அனுப்பி வைத்தவர்தான், செல்வி ஜெயலலிதா.


எந்த நாளில் ஜெயலலிதா அவர்கள் கர சேவைக்கு அனுப்பிய ஆட்கள் பாபர் மசூதியை தகர்த்தனரோ, நான்கு ஆண்டுகள் கழித்து அதே நாளில் அவர் ஊழல் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அவருடைய முதல் கைது இறுதி செய்யப்பட்டு, அதற்கு அடுத்த நாளில்(07-Dec-1996) அவர் முதன்முதலாக கைது செய்யப் பட்டார். 


அதேபோல, எந்த நாளில் ஜெயலலிதா அவர்கள் கர சேவைக்கு அனுப்பிய ஆட்கள் பாபர் மசூதியை தகர்த்தனரோ, 28 ஆண்டுகள் கழித்து, அதற்கு ஒருநாள் முன்பாக 05-Dec-2016 ம் அவரது மரணமும் அறிவிக்கப் பட்டது. எனக்கு இந்த மதம் மட்டுமல்ல எந்த மதத்திலும், எந்த கடவுளிடமும் நம்பிக்கை இல்லை. ஆனால் நடந்த நினைவுகளை தொடர்பு படுத்திப் பார்க்கும்போது, நம்பிக்கை கொண்டவர்களுக்கு karma is a boomerang என்பது உண்மைதானோ என்று தோன்றுகிறது.

Wednesday, November 11, 2020

மாநிலங்களவை

 அமெரிக்கா


மாநிலங்களின் எண்ணிக்கை  - 50

செனட் உறுப்பினர்களின் எண்ணிக்கை (50 X  2) - 100


ஆஸ்திரேலியா :


மாநிலங்களின் எண்ணிக்கை  - 6

பிரதேசங்கள் - 2

செனட் உறுப்பினர்களின் எண்ணிக்கை (6 X 12 + 2 X  2) = 76


இந்த இரண்டு நாடுகளிலும், செனட் சபை என்பது, நம் நாட்டிலுள்ள ராஜ்யசபை அல்லது மாநிலங்களவை போன்றது. நம் நாட்டை போலவே, எந்த ஒரு புதிய சட்டம் மற்றும் தீர்மானங்கள், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால்தான், நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.


ஒரு இந்த இரண்டு நாடுகளிலும், செனட் உறுப்பினர்கள், தேர்தல்கள் மூலம், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்; அதனால் ஒரு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப் படும் நபர், அந்த மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படவே வாய்ப்புகள் அதிகம். 


ஆனால் நம் நாட்டில், மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். இதன்மூலம், ஒரு அரசியல் கட்சி நினைத்தால், ஒரு மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, வேறு எந்தவொரு மாநிலத்தை பிறப்பிடம் மற்றும் உறைவிடமாகக் கொண்ட ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுக்க முடியும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் படும் உறுப்பினர், தனது சொந்த மாநிலத்தின் நலத்தை கருத்தில் கொண்டு செயல்படுவாரா, அல்லது தான் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநிலத்தின் உரிமையை கருத்தில் கொண்டு செயல்படுவாரா? மேலும் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் படாத ஒருவர், மக்கள் நலனைத்தான் கருத்தில் கொண்டு செயல்படுவாரா?


மேலே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையில் இருந்து கிடைக்கும் இன்னுமொரு செய்தி, மாநிலங்களின் நலனை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரே எண்ணிக்கையிலான உறுப்பினர்கள், அனுமதிக்கப் படுகின்றனர். இதில் அந்த மாநிலத்தின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. இதனால் அதிக மக்கள் தொகை கொண்ட, அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களின் நலன் மட்டுமே முன்னிலை படுத்தப்படும் போக்கு பெருமளவில் தடுக்கப் படுகிறது.


ஆனால் நம் நாட்டிலோ, மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொருத்தே அமைவதால், அதிக மக்கள் தொகை கொண்ட வடக்கை சேர்ந்த சில மாநிலங்கள், அவர்களின் நலன் சார்ந்த திட்டங்களை, தெற்கு அடையவிருக்கும் தீமைகளை கருத்தில் கொள்ளாமல், ஆதரிக்கும் போக்கு தொடர்கிறது.


இதனால்தான் அறிஞர் அண்ணா அன்றே கூறினார். மாநிலங்களவையில், பெயருகேற்றது போல, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சம அளவிலான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்; மேலும் அவர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் படவும் வேண்டும்.