DreamLand

Monday, September 04, 2023

நியூசிலாந்து பயணம்! - Day 8

 01-Jan-2023:  வருடத்தின் முதல் நாளான இன்று நியூசிலாந்தின் தென் தீவில் உள்ள குயின்ஸ் டவுன் நகரை அடைவது எங்களது முதல் இலக்கு. குயின்ஸ்டன் செல்வதற்கு காலை 9:30 மணிக்கு, ஆக்லாந்து நகரத்தில் விமானம் ஏற வேண்டும். ஆக்லாந்து நகரம் நாங்கள் தங்கி இருக்கும் ஹேமில்டன் நகரத்திலிருந்து ஒன்றரை மணி நேர பயண தொலைவில் இருந்தது. அதற்கு முன்பாக எங்கள் வாடகை காரை அந்த நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். 

இது அனைத்தையும் கணக்கிட்டு காலை 6:30 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படுவது என்று முடிவாயிற்று. வீட்டின் உரிமையாளர் டெபி வீட்டின் சாவியை உள்புறம் மேசை மீது வைத்து விட்டு செல்லுமாறு கூறியிருந்தார். நாங்கள் எங்கள் பொருட்கள் அனைத்தையும் காரில் ஏற்றிவிட்டு அவசர அவசரமாக வீட்டை சற்று சுத்தப்படுத்திவிட்டு கிளம்பு ஆயத்தமானோம். 

ஆனால் கோமதிக்கோ வீட்டின் தூய்மை திருப்தியை தரவில்லை; அதனால் அவர் மேலும் குப்பைகளை அகற்றிக் கொண்டும், மேசையை துடைத்துக் கொண்டும் இருந்தார். நானும் ஆறு முப்பது மணி ஆகிவிட்டது,   மேலும் தாமதமானால், நாம் விமானத்தை தவற விட்டு விடுவோம் என்று அவரை சற்று விரட்டிக் கொண்டிருந்தேன்.  காரில் ஏறி அமர்ந்து கொண்டு அவரை விரைந்து வருமாறு சற்று சத்தமாகவே கூறினேன்.

நாங்கள் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் விமான நிலையத்திற்கு அருகில் வந்து சேர்ந்தோம். வாடகை காரனை திருப்பித் தரும் முன்பு பெட்ரோல் நிரப்ப வேண்டியிருந்ததால், அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று, பெட்ரோல் நிரப்பிவிட்டு, அந்தக் கடையில் இயற்கை உபாதைகளை கழித்துவிட்டு, வாடகை கார் கம்பெனியை சென்று அடைந்தோம். எந்த ஒரு பிரச்சனையும் இன்றி காரினை பத்திரமாக அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஷட்டில்(shuttle) வாகனத்தில் ஏறி விமான நிலையத்தை அடைந்தோம்.

 நாங்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த சற்று மிச்சம் மீது உணவுகளையும் உடன் ஏர்போர்ட்டில் கிடைத்த வேறு உணவுகளையும் சிறிது வாங்கிக் கொண்டு காலை சிற்றுண்டியை முடித்தோம். அதன்பின் விமானத்தில் ஏறுவதற்கு செக்கிங் செய்து கொண்டிருந்தபோது ஒரு நியூசிலாந்து எண்ணிலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, பேசியவர் நாங்கள் ஹேமில்டனில் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் டெபி. 

அவர் நாங்கள் வீட்டின் கழிவறையை பாழ்படுத்தி விட்டதாகவும் அது இப்போது ஃப்ளஷ் ஆகவில்லை என்றும் கூறினார். ஆனால் நானோ நாங்கள் இன்று காலை கூட பயன்படுத்திவிட்டுத்தான் வந்தோம் அது நன்றாகவே ஃப்ளஷ் ஆனது நன்றாக பணி செய்து கொண்டிருந்தது என்று கூறினோம். ஆனால் அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை. கழிவறை ஏதோ மிகவும் சத்தமிடுகிறது என்றும் நாங்கள் ஏதோ அந்த கழிவறையினுள் போடக்கூடாத பொருட்களை போட்டு விட்டதாகவும் குறை கூறினார். ஆனால் நான் ஒப்புக் கொள்ளவே இல்லை, நாங்கள் டிஷ்யூ பேப்பரை தவிர வேறு எதையும் அதன் நூல் போடவில்லை என்று உறுதியாக கூறினோம். 

ஆனால் அவரோ மீண்டும் மீண்டும் நீங்கள் கழிவறையை பாழ்படுத்தி விட்டீர்கள், நான் பிளம்பரை அழைத்து தான் அதை சரி செய்ய வேண்டும், அதற்கு ஆகும் செலவை நான் உங்களிடமிருந்து தான் எடுத்துக் கொள்வேன், இதை airbnb வழியாக வசூலித்துக் கொள்வேன் என்று கூறினார்.  நீங்கள் அவ்வாறு ஏதோ பாழ்படுத்தி விட்டதால்தான் இன்று காலை உங்கள் மனைவியிடம் விரைந்து வருமாறு சத்தமிட்டுக் கொண்டிருந்தீர்கள் என்று வேறு கூறினார். 

எனக்கு மிகவும் கடுப்பாகி விட்டது. நான் என் மனைவியிடம் சத்தமிடுவதற்கும் அவர் என்னிடம் சத்தமிடுவதற்கும் எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன; அதை உங்களுக்கு சொல்ல தேவையில்லை; ஆனால் நாங்கள் கழிவறையை பாழ்படுத்தவில்லை என்பதை மட்டும் நான் உறுதியாக கூறுகிறேன் என்றேன். வேறொரு தருணத்தில் அவ்வாறு அவர் பேசி இருந்தால் கூட நான் கண்டும் காணாமல் விட்டிருப்பேன் ஆனால் நானும் அவசரத்தில் விமானத்தில் செக்கிங் செய்து கொண்டிருக்கும் போது அவர் இவ்வாறு கூறியதால், நான் கொஞ்சம் கடுப்பாகி விட்டேன். குயின்ஸ் டவுன் சென்றடைந்ததும் airbnb நிறுவனத்தில் புகார் அளிப்பது என்று முடிவு செய்தேன்.

 சற்று நேரத்துக்கு Debbyயை மறந்து விட்டு விமான பயணத்தை என்ஜாய் செய்யலாம் என்று முடிவு செய்து விமானத்தில் ஏறினோம்.


 நியூசிலாந்தின் தெற்கு தீவில் இயற்கை பேரழகு கொட்டிக் கிடக்கின்றது என்று நண்பர்கள் கூறி கேட்டிருக்கிறோம். அந்தப் பேரழகினை கண்டு மகிழ்வுற, காற்றைக் கிழித்துக்கொண்டு எங்களை அழைத்துச் சென்று கொண்டிருந்தது ஏர் நியூசிலாந்து விமானம். 

குயின்ஸ் டவுன் சென்று இயற்கையை கண்டுகளிக்க போகிறோம் என்று எண்ணிக் கொண்டிருந்த எங்களுக்கு,  நீங்கள் குயின்ஸ்டௌன் சென்று அடையும் வரை காத்திருக்க வேண்டாம், இப்போதே, விமானத்தில் இருந்தே என்னை கண்டு களியுங்கள் என்று பெருங்காட்சியளித்தது இயற்கை. ஆம் நீங்கள் விமானத்தில் பறந்து கொண்டிருக்கையில் கீழே உற்று நோக்கினால் எரிமலை கூட அழகாக தெரிந்தது, மேலும் தெற்குத்தீவின் மலைச்சிகரங்களும் மலை உச்சியில் உறைந்திருந்த உறைந்திருந்த பனிக்கட்டிகளும் காண்பதற்கு கண்கொள்ளா காட்சிகளாக இருந்தன.

Mt Egmont(Volcano Taranaki)


 


காலை 11:20 மணிக்கு குயின் ஸ்டோன் விமான நிலையத்தை வந்தடைந்து, எங்கள் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு, எங்கள் வாடகை கார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஷட்டில் வாகனத்தில் ஏறி விமான நிலையத்திற்கு வெளியே அமைந்திருந்த வாடகை கார் நிறுவனத்தை அடைந்தோம். 

விமான நிலையத்தின் உள்ளேயே அமைந்திருக்கும் EuropeCar, Avis போன்ற வாடகை கார் நிறுவனங்களின் கார் வாடகை அதிகம் என்பதால் நாங்கள் விமான நிலையத்திற்கு வெளியில் அமைந்திருக்கும் சற்று வாடகை குறைவாக உள்ள காரினை முன் பதிவு செய்திருந்தோம். இதுவும் ஆக்லாந்து நகரத்தில் ஏற்பாடு செய்திருந்ததைப் போலவே நாங்கள் அந்த நிறுவனத்தை சென்றடைய ஷட்டில் வாகனத்தை அனுப்பி இருந்தனர்.

 என்னுடைய ஓட்டுனர் உரிமத்தை அடையாள அட்டையாக காண்பித்து விட்டு காரினை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் புதிய இடத்திற்கு வந்திருப்பதால், ஆக்லாந்திலும் சரி குயின் ஸ்டோனிலும் சரி கார் வாடகையை விபத்து காப்பீட்டுடன் சேர்த்து முன்பதிவு செய்து இருந்தோம். இல்லையென்றால் புதிய இடத்தில் ஏதாவது விபத்து நிகழ்ந்தாலோ அல்லது யாரேனும் நம் மீது லேசாக உரசி விட்டுச் சென்றாலோ அதற்கு நாம் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். அதற்கு பதிலாக நாம் காப்பீடு எடுத்து விட்டால், நாமே தவறு செய்து விபத்து நிகழ்ந்தாலும் அந்த வாகனத்தை பழுது பார்க்க ஆகும் செலவினை காப்பீட்டு நிறுவனம் பார்த்துக் கொள்ளும் என்பதால் நமக்கு அதில் ஒரு பெரிய மன நிம்மதி. காரினை திரும்ப ஒப்படைக்கும் போதும், அவர்கள் காரினை முழுவதும் பரிசோதிக்கும் வரை நாம் காத்திருக்க தேவையில்லை.

முதலில் அருகில் உள்ள ஷாப்பிங் சென்டருக்கு சென்று, கார்த்திக்கு உணவு ஏதாவது வாங்கிக் கொடுப்போம். ஏனென்றால் அவன் காலையில் சரியாக சாப்பிடவில்லை இப்போதும் சரியாக சாப்பிடாவிட்டால் அவன் பயணத்தை என்ஜாய் செய்ய மாட்டான், நம்மையும் என்ஜாய் செய்ய விட மாட்டான் அதனால், முதலில் அவனது வயிற்றை நிரப்புவோம் என்று முடிவு எடுத்து அவனுக்கு பிடித்த சூசி(sushi) உணவு வாங்கினோம். 

உணவு அருந்தி முடித்துவிட்டு, நாங்கள் முன்பதிவு செய்து இருந்த வீட்டிற்கு செல்லும் முன்பாகவே Glenarchy Drive சென்று சுற்றிப் பார்ப்பது என்று முடிவெடுத்து வாகனத்தை கிளப்பினோம்.


மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் குயின் ஸ்டோன் நகரில் இருந்து Glenorchy செல்லும் பாதை ஒருபுறம் மலையாலும் மறுபுறம் ஏரி கரையாலும் நிரம்பி இருந்தது. நிற்காமல் சென்றால் வெறும் 45 நிமிடங்களில் முடிய வேண்டிய பயணம், அந்த அழகினை ரசித்துக்கொண்டு ஆங்காங்கே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றதால் இரண்டு மடங்கு காலம் எடுத்துக் கொண்டது. 




ஆனால் கார்த்திக்கோ பயணத்தின் தொடக்கத்திலேயே தூங்கி விட்டான் அதனால் நாங்கள் இருவர் மட்டும் இருபுறமும் மலை சூழ்ந்த ஏரியின் அழகை ரசித்துக் கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டும் மிகவும் மெதுவாக டிரைவ் செய்துகொண்டு Glenorchy சென்றடைந்தோம்.



Glenorchy இல் பார்ப்பதற்கு என்று சிறப்பான இடங்கள் எதுவும் இல்லை ஆனால் குயின் ஸ்டோன் நகரில் இருந்து Glenorchy செல்லும் பாதை முழுவதும் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கின்றது. அந்த அழகினை அனுபவித்துக் கொண்டே டிரைவ் செய்வது மட்டுமே Glenorchy செல்வதன் பெருநோக்கமாகும்.

நாங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு நாங்கள் முன்பதிவு செய்து இருந்த வீட்டினை வந்தடைந்தோம். அந்த வீடு குயின்ஸ் டவுன் நகரினை தாண்டி வடக்கு புறமாக அமைந்திருந்தது. குயின் ஸ்டோன் நகரின் உட்புறமாக அப்பார்ட்மெண்ட் முன்பதிவு செய்யலாம் என்றால் அதன் வாடகை மிகவும் அதிகமாக இருந்ததால், நாங்கள் சற்று புறநகரில் வீடு முன் பதிவு செய்திருந்தோம். 

குயின்ஸ் டவுன் நகரம் முழுவதுமே சுற்றுலாவை நம்பி மட்டுமே இருந்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகை மட்டுமே அங்கு பிரதான வருமானமாக இருந்தது. அதனால் அங்கு வாடகை எல்லா இடங்களிலும் அதிகமாகவே இருந்தது.



நாங்கள் முன்பதிவு செய்திருந்த வீட்டினை பற்றி சொல்ல வேண்டும் என்றால், அது ஒரு வீடு அல்ல. ஷிப்பிங் கண்டைனர் ஒன்றினை, வீடாக மாற்றி இருந்தனர். ஆனால் அந்த படைப்பாற்றலை(Creativity) நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஏனென்றால் அந்த செவ்வக வடிவ சிறிய அறையினுள், மூன்று பேர் படுத்து உறங்கும் கட்டில் மெத்தை ஒரு புறத்திலும், அமர்ந்து கொள்வதற்கு சோபா ஒரு புறத்திலும், சமைப்பதற்கு சமையலறை ஒரு புறத்திலும், அந்த அறையின் மறு கோடியில் குளியல் மற்றும் கழிவறை ஆகியவையும் நேர்த்தியாக அமைத்திருந்தனர். 

மூன்று பேர் கொண்ட ஒரு சிறிய குடும்பம் சுற்றுலா வரும் பொழுது தங்குவதற்கு வேண்டிய அத்தனை வசதிகளும் அந்த சிறிய அறையினுள் இருந்தன. சுற்றுலாவின் போது மட்டுமல்லாமல் நாம் எப்பொழுதும் வசிப்பதற்கு கூட இது போன்ற சிறிய அறையினை பயன்படுத்த பழகிக் கொண்டால் நிறைய காசும் மிச்சம் பிடிக்கும், நாம் நமது இயற்கையையும் நீண்ட காலத்திற்கு போற்றி வளர்க்கலாம்.

இவ்வாறாக எங்கள் வருடத்தின் முதல் நாள் நான்கு நகரங்களை(Hamilton, Auckland, Queenstown, Glenorchy) சுற்றி வந்ததாக அமைந்தது; இத்துடன் இன்றைய நாள் இனிதே நிறைவுற்றது.

Monday, July 03, 2023

நியூசிலாந்து பயணம்! - Day 6 & 7

30-Dec-2022:   இன்று நாங்கள் செல்வதற்கு முன்பதிவு செய்து இருந்த ஒரே இடம் பூச்சிகளால் ஒளிரும் வைட்டமோ குகைகள்(Waitomo Glow Worm Caves). இந்த இடம் ஹேமில்டன் நகரில் இருந்து ஒன்றரை மணி நேர தொலைவில் உள்ளது. காலையில் இந்த இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு மதிய உணவிற்கு பிறகு, அங்குள்ள ஒரு சுடுநீர் ஊற்றுக்கு செல்லலாம் என்று திட்டமிட்டு இருந்தோம்.


கார்த்திக் இன்னும் முழுமையாக குணமடையாததால், அவனால் இந்த குகையை நன்கு என்ஜாய் செய்து சுற்ற முடியவில்லை; எங்கள் இருவரையும் கூட அவன் குகையை நன்கு சுற்றிப் பார்க்க விடவில்லை. உடன் வந்திருந்த வழிகாட்டி, ஒளிரும் பூச்சிகளைப் பற்றிய அறிவியலையும், இந்த குகை கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றையும் விவரித்து கூறியதையும் எங்களை முழுதாக கேட்கவிடவில்லை. இருந்தாலும் எங்களால் முடிந்த வரை சுற்றிப் பார்த்துவிட்டு குகையிலிருந்து வெளியேறினோம்.


நாங்கள் மதியத்திற்குள்ளாகவே களைப்படைந்து விட்டோம் மேலும் கார்த்திக் இன்னும் முழுமையாக குணமடையாததால், சுடுநீர் ஊற்றுக்கு செல்லும் திட்டத்தை கைவிட்டு விட்டு ஹேமில்டன் வந்தடைந்தோம். நகரில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் சென்று சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு எங்கள் வீட்டினை அடைந்து, நூடுல்ஸும் கோழி வறுவலும் சமைத்து நன்று என்ஜாய் செய்து சாப்பிட்டோம். 



31-Dec-2022:  2022 ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று எங்களுக்கு செல்வதற்கு சிறப்பான இடங்கள் என்று எதுவும் இருக்கவில்லை. அதனால் ஹேமில்டன் நகருக்குள் சிறியதாக ஒரு வட்டமடிப்பது என்றும், இரவில் எங்காவது புத்தாண்டுக்கான வானவேடிக்கைகள் நடைபெறும் அதை கண்டு களிப்பது என்றும் முடிவானது.


காலையில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் முன் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினோம். நாங்கள் முதலில் சென்ற இடம் நியூசிலாந்து டெம்பில்(New Zealand Temple) என்று அழைக்கப்பட்ட இடம். 



இது இயேசு கிறிஸ்து அமைந்துள்ள வழிபாட்டுத்தலம் என்றாலும் இதனை இவர்கள் கோயில் என்று அழைப்பது எனக்கு சற்றே வித்தியாசமாக இருந்தது. சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, அங்கிருந்து கிளம்பி நாங்கள் வந்தடைந்த இடம் வைகாட்டோ அருங்காட்சியகம்(Waikato Museum).

இந்த அருங்காட்சியகத்திலும் மாவோடிகளின் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர். அவர்கள் பயன்படுத்திய ஒரு படகு அவர்களின் கைவினை அலங்காரங்களுடன் அழகாக காட்சியளித்தது. 



மற்றபடி வழக்கமாக அருங்காட்சியகத்தில் இருக்கும் சில அரிய புகைப்படங்கள் மட்டுமே அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது; விரைவாக அதனை சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறி மதிய உணவும் அருந்திவிட்டு, மதியத்திற்கு பிறகு என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தோம்.

எவ்வளவு யோசித்தாலும் என்ன செய்வது என்று ஒரு சரியாக ஐடியா இல்லாததால் மதியம் சென்று அனைவரும் உறங்கி விடுவது என்று முடிவெடுத்தோம். வீட்டுக்கு சென்று மதிய உணவு அருந்திவிட்டு சிறிது நேரம் இளைப்பாரி விட்டு, மாலையில் வாய்க்கட்டு ஆற்றினை ஒட்டியுள்ள நடைபாதையில் ஒரு இரண்டு மணி நேரம் காலாற நடை பயிற்சி மேற்கொண்டோம். வழியில் ஓர் இரண்டு பூங்காக்களை சுற்றிப் பார்த்தோம். 

அதன்பின் இரவு உணவிற்கு ஏதாவது ஒரு இந்திய உணவகத்திற்கு சென்று நன்கு வயிறார உண்டு இந்த ஆண்டினை இறுதி செய்வோம் என்று எண்ணி ஒரு மலையாளியின் உணவகத்தினை(Salt Mango Tree NZ - South Indian Restaurant) அடைந்தோம். நன்கு காரமாக தயாரிக்கப்பட்ட பீப் கொத்து புரோட்டாவும் சிக்கன் பிரைடு ரைஸும் ஆர்டர் செய்து உண்டோம். கார்த்திக்கு இலவசமாக ஒரு மெதுவடை கிடைத்தது. 



அந்த உணவகத்தின் பங்குதாரர்களில் ஒருவர் நல்ல ஓவியரும் கூட அவர் தனது ஓவியங்களைக் கொண்டு அந்த உணவகத்தினை அலங்கரித்து இருந்தார். 

ஹேமில்டன் நகரில் இரவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எங்காவது நடைபெறுகிறதா என்று கேட்டபோது அவர்கள் பெரிய ஹோட்டல்களில் மட்டும் இரவு விருந்து நடைபெறும்; மற்றபடி அரசு சார்பில் வான வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள் போன்று எந்த ஏற்பாடும் இல்லை என்றும், நகருக்கு அருகில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்பது இரண்டரை மணி நேர தொலைவில் உள்ள டவுரங்கா(Tauranga) நகரில் மட்டுமே நடைபெறும் என்றும் கூறினர். அதனால் மீண்டும் வீட்டுக்கு சென்று தூங்கி விடுவது என்று முடிவானது. நியூசிலாந்து நாட்டின் தென் தீவினை அடைய மறுநாள் விமானம் ஏற வேண்டும் ஆதலால், காலை ஏழு மணிக்கு நாங்கள் வீட்டிலிருந்து புறப்பட வேண்டும்.

Friday, May 05, 2023

நியூசிலாந்து பயணம்! - Day 5

29-Dec-2023:  இங்கே நியூசிலாந்து நாட்டின் பூர்வ குடியினரை பற்றிய ஒரு சிறு குறிப்பு தேவைப்படுகிறது. நியூசிலாந்து நாட்டின் பூர்வ குடியினரின் பெயர் 'மாவோரி'. ஆஸ்திரேலியாவிலும் பூர்வ குடியினர் இருக்கின்றனர் ஆனால் அவர்களுடைய மொழியோ கலாச்சாரமோ வழக்கமாக மக்கள் புழங்கும் இடங்களில் இருப்பதில்லை. ஆனால் நியூசிலாந்து நாட்டில் ஒவ்வொரு இடமும் மாவோரிகளின் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவோரி இனத்தவரின் கலைகளும் கைவினைப் பொருட்களும் எல்லாவிடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. மாவோரிகளின் மொழிக்கு எழுத்து வடிவம் உள்ளதா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் அவர்களின் மொழிக்கு ஆங்கிலத்தில் எழுத்து வடிவம் கொடுத்துள்ளனர். உதாரணத்திற்கு நியூசிலாந்து நாட்டிற்கு மாவோரிகளின் மொழியில் Aotearoa என்று பெயர்.

இன்று நாங்கள் முதலில் சென்ற இடம் டி புய்யா(Te Puia) வில் இருக்கும் புகுத்து கீசர்(Pohutu Geyser). முன்பே குறிப்பிட்டது போல நியூசிலாந்தின் வடக்கு தீவில் புவி வெப்பம்(Geothermal) சார்ந்த நிகழ்வுகள் அதிகம் தென்படுகின்றன. அவற்றுள் முக்கியமான ஒன்றுதான் இந்த புகுத்து கீசர்.  இந்த இடம் ஹேமில்டனில் இருந்து ஒன்றரை மணி நேர தொலைவில் இருப்பதால் நாங்கள் சற்று விரைவாக புறப்பட்டோம். காலையில் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு விட்டு அந்த அடுப்பை சுத்தம் செய்யக்கூட நேரமில்லாமல், மீதமிருந்த உணவையும் அப்படியே வைத்துவிட்டு சாயந்திரம் வந்து கிளீன் செய்து கொள்ளலாம் என்று புறப்பட்டுச் சென்றோம்.

நாங்கள் ஒரு வழி காட்டப்படும் சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்து இருந்தோம். அந்த சுற்றுலாவில் புகுத்து கீசர் உடன் சேர்த்து, மாவோரிகள் கைவினைப் பொருட்கள் செய்யும் தொழிற்சாலையும், அவர்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அரங்கமும், அவர்கள் கலாச்சாரம் குறித்த விரிவான விளக்கங்களும் அடங்கும்.













அந்தப் பள்ளத்தாக்கு முழுவதையும் மாவோரி சகோதரர் ஒருவர் சுற்றி காண்பித்தார். மேலே புகைப்படத்தில் அவர் சுட்டிக்காட்டும் பலகையில் உள்ளது மாவோரி மொழியில் ஒரே ஒரு வார்த்தையாகும்.  அந்த வார்த்தையை நான் சரியாக படித்தேன் என்பதற்காக அவர் என்னை பாராட்டினார் என்பது ஒரு கூடுதல் தகவல். மாவோரி கலாச்சார சுற்றுலா முடிந்த பிறகு அவர் எங்களை புகுத்து கீசர் அழைத்துச் சென்றார்.

டி புய்யா பள்ளத்தாக்கு முழுவதும் ஆங்காங்கே நிலத்தின் அடியிலிருந்து நீராவிகள் வெளியேறுகின்றன. அவற்றில் இந்த புகுத்து கீசர் என்ற இடத்திலிருந்து நீராவி மட்டுமல்லாது கொதிக்கும் சுடுநீரும் வெளியேறுகிறது. 










நாங்கள் அந்த சகோதரரிடம் 'எவ்வாறு நீர் இப்படி கீழிருந்து மேல் எழுகிறது, அதுவும் சூடாக?' என்று கேட்டபோது அவர் குறிப்பிட்டது இந்த இடமும் ஒரு எரிமலை தான். இதன் அடியில் கொதித்துக் கொண்டிருக்கும் நீர் தான் அந்த கொதிநிலை அதிகமாகும் பொழுது இவ்வாறு வெளியேறுகிறது என்று சொன்னார். அவர் கூறியது எங்கள் அனைவர் உள்ளும் ஒரு அச்சத்தை கிளப்பியது; அதனால் நாங்கள் மீண்டும் அவரிடம் கேட்டோம், 'அப்படியானால் இந்த எரிமலையும் வெடித்து கிளம்ப வாய்ப்புள்ளதா?'. அதற்கு அவர் இது பத்தாயிரம் ஆண்டுகளாக இப்படியே தான் உள்ளது, இது வெடித்து கிளம்ப வாய்ப்பு இல்லை, நீங்கள் என்னுடன் இருக்கும் வரை பத்திரமாகவே இருப்பீர்கள் என்று கூறினார். இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்று மனதுக்குள் நினைத்தபோது, நம்புனா தான் உங்களை வெளியில கூட்டிட்டு போய் விடுவேன் என்று அவர் சொல்வது போல எனக்கு கேட்டது. அதனால் அவர் சொன்னதற்கு தலையாட்டியவாறு அவருடன் பேருந்தை நோக்கி  கிளம்பிச் சென்றோம்.

மதியம் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று நாங்கள் கொண்டு வந்திருந்த உணவை உண்டு முடித்து சிறிது ஓய்வு எடுத்தோம். அப்போது வீட்டு உரிமையாளர் டெபி இடமிருந்து airbnb வழியாக மெசேஜ் வந்திருந்தது. நாங்கள் மிகவும் அதிகமாக என்னை பயன்படுத்துவதாகவும், சாப்பிட்ட உணவுப் பொருட்களை அப்படியே மீசை மீது வைத்து விட்டு வந்து விட்டோம் என்றும் அவர் அந்த மெசேஜில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் இதைப்போல சமையல் தொடர முடியாது என்றும், வேண்டுமானால் கார் கராஜில் செட் செய்து தருகிறோம் அங்கே வைத்து சமைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார். நாங்களும் வேறு வழியில்லாமல் கராஜில் வைத்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டோம்.

புகுத்து கீசரைத் தொடர்ந்து நாங்கள் சென்ற இடம் Zorb Ball. இரண்டு அடுக்குகளாக செய்யப்பட்டு இருக்கும் பந்தின் உட்புறமாக நாம் அமர்ந்து கொள்ள, பந்தினை மேலிருந்து கீழே உருட்டி விடுகின்றனர். பந்து உருளும் பொழுது நாமும் பந்துடன் சற்று உருளச் செய்கிறோம் அல்லது வழுக்கச் செய்கிறோம். பந்தின் உட்புற சுவருக்கும் வெளிப்புற சுவருக்கும் இடையே உள்ள வெற்றிடமானது, பந்து உருளும்போது உள் அமர்ந்திருக்கும் நமக்கு அடிபடாமல் பார்த்துக் கொள்கிறது. மேலும் நாங்கள் சென்றிருந்தது கோடை காலம் என்பதால் உட்புறமாக நாங்கள் அமருமிடத்தில் சற்று தண்ணீர் நிரப்பி விடுகின்றனர். கோடையில் அந்தத் தண்ணீரில் நனைந்து கொண்டே மேலிருந்து கீழே உருண்டு வருவது ஒரு குதூகலமான விளையாட்டாகவே இருக்கிறது.









கார்த்திக்கு மட்டும் மாற்றுத் துணி இருந்தது. பந்தின் உட்புறம் தண்ணீர் நிரப்புவது எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை, அதனால் நாங்கள் மாற்றுத் துணி எதுவும் எடுத்து வந்திருக்கவில்லை. ஆனாலும் முன்பதிவு செய்து விட்டதால் அதை விளையாடி விடுவது என்று முடிவு செய்தோம். நான் துண்டு கட்டிக் கொண்டு உள்ளே செல்வது என்றும், கோமதிக்கு அங்கே டி ஷர்ட் மற்றும் பேண்ட் வாடகைக்கு எடுத்துக் கொள்வது என்றும் முடிவானது.

மூன்று பேரும் ஒருசேர பந்தில் நுழைந்தால் போட்டோ அல்லது வீடியோ எடுப்பதற்கு ஆள் இல்லாமல் போய்விடும் என்பதால் நானும் கார்த்தியும் ஒரு பந்தில் செல்வது என்றும் கோமதி தனியாக இன்னொரு பந்தில் வருவது என்றும் முடிவானது. இதில் முதலில் நானும் கார்த்திக்கும், அந்த விளையாட்டு நிறுவனத்தின் வாகனத்தில் அந்த மலை உச்சிக்கு சென்றோம். அருகே சென்றதும் கார்த்திக் பயந்து கொண்டு நான் உள்ளே வரமாட்டேன் என்று சொன்னான். அதனால் முதலில் நான் உள்ளே சென்று பார் இங்கே வசதியாக அமர்ந்து கொள்ளலாம் உனக்கு ஒன்றும் ஆகாது வா என்று சொல்லி அவனையும் உள்ளே அழைத்துக் கொண்டேன் ஆனாலும் அவன் முதலில் அழுது கொண்டே தான் உள்ளே அமர்ந்திருந்தான்.









நமக்கு முன் விளையாடிய நபர்கள் பயன்படுத்திய நீரை அவர்கள் நம் கண் முன்னேயே மாற்றி விடுகின்றனர், அதன் பிறகு உள்ளே அமர்ந்ததும் நாம் அமர்ந்திருக்கும் பகுதியை முற்றிலுமாக மூடி விடுகின்றனர். மறு வினாடியே அவர்கள் நம்மை மேலிருந்து கீழே உருட்டி விடுகின்றனர். வந்து உருளும் பொழுது நாம் தலைகீழாகவெல்லாம் செல்வதில்லை; சற்றே நாம் மேலே வரும் பொழுது வழுக்கிக் கொண்டு மீண்டும் கீழே வந்து விடுகிறோம் அவ்வாறு வர ஆரம்பித்ததும் தான் கார்த்திக்குக்கு பயம் போனது; அவன் என்ஜாய் செய்ய துவங்கினான். 









ஆனால் ஒரு அரை நிமிடத்தில் எல்லாம் நாம் கீழே வந்து சேர்ந்து விடுகிறோம்; அப்படி நாங்கள் சேர்ந்த பிறகு, கோமதி, அவர்களின் வாகனத்தில் ஏறி மேலே சென்றார். அவர் சிறிதும் பயப்படாமல் நன்றாக என்ஜாய் செய்து விளையாடி விட்டு வந்தார். Zorb Ball விளையாடி முடித்துவிட்டு கீழே வந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த சுடுநீர் தொட்டியில் சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்தோம்.








பின்பு அங்கிருந்து பயணப்பட்டு ரோட்டோரோ ஏரிக்கரையோரம் அமைந்துள்ள பூங்காவிற்கு சென்று சிறிது நேரம் விளையாடிவிட்டு பின்பு காலாற ஒரு நடை பயிற்சியும் செய்துவிட்டு,  கரையோரம் நின்று ஏரிக்கரை பூங்காற்றே நீ போற வழி தென்கிழக்கோ என்று பாடலும் பாடிவிட்டு ரோட்டோரோவை விட்டு கிளம்பி ஹேமில்டன் வீட்டை அடைந்தோம். 

வீட்டில் நாங்கள் பயன்படுத்திய மின்சார அடுப்பு, பாத்திரம், மசாலா பொருட்கள், எண்ணெய் ஆகியவற்றை வீட்டு உரிமையாளர் டிபி அவருடைய கார் கரேஜில் எடுத்து வைத்திருந்தார். நாங்கள் இரவு உணவை கார் கரேஜில் வைத்தே சமைத்து முடித்தோம்.

Thursday, May 04, 2023

நியூசிலாந்து பயணம்! - Day 4

28-Dec-2023:  முன்பே குறிப்பிட்டது போல முன்பதிவு செய்யப்பட்ட சுற்றுலா தளங்கள் எதற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால் காலையில் தாமதமாக எழுந்து, காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு, வீட்டை காலி செய்து, எங்கள் மூட்டை முடிச்சுகள் அனைத்தையும் கட்டி காரில் ஏற்றி , வைத்துவிட்டு வீட்டு உரிமையாளருக்கும் ஒரு பை பை சொல்லி விட்டு கிளம்பினோம்.







இன்று ரங்கிடாட்டோ  தீவுகளுக்கு தான் செல்ல முடியவில்லை அந்த தீவினை தொலைவில் இருந்தாவது படம் பிடித்துக் கொள்ளலாம் என்று செயின்ட் ஹெலியஸ்(St Heliers) கடற்கரையில் நின்று தொலைவில் தெரியும் ரங்கிடாட்டோ தீவின் முன்பு நின்று படம் பிடித்தோம்.








ஆக்லாந்து நகரத்தில் இருந்து ஹேமில்டன்(Hamilton) செல்லும் வழியில் இருக்கும் ஆக்லாந்து தாவரவியல் பூங்கா(Botanical Garden) சென்றடைந்தோம். மதியத்திற்காக நாங்கள் சமைத்து எடுத்து வைத்திருந்த உணவை அங்கு புல்வெளியில் வைத்துவிட்டு, பூங்காவை சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோம். புல்வெளியில் அமர்ந்து மதிய உணவை உண்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். 

அதன் பின் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்து,  மாலை 4 மணிக்கு, ஹேமல்டன் நகரில் நாங்கள் முன்பே புக் செய்திருந்த வீட்டினை அடைந்தோம். வீட்டின் உரிமையாளர் டிபி எங்களை மிகவும் கனிவுடன் வரவேற்றார். அதை வீடு என்று சொல்வதை விட ஒரு சிறு அறை என்று சொல்ல வேண்டும் ஏனென்றால் ஒரே ஒரு அறையில் கட்டில் மெத்தை ஒரு புறமிட்டு அதன் மறுபுறத்தில் சமையல் கட்டு அமைத்திருந்தனர். அவர் அந்த அறையை சுற்றிக் காண்பித்ததோடு அந்த அறையில் இருந்த டாய்லெட்டின் சிறப்பு அம்சங்களை எங்களுக்கு விவரித்துக் கூறினார். 

அந்த டாய்லெட்டுக்கு தண்ணீர் ஒரு மோட்டார் மூலம் பம்ப் செய்யப்படுவதாகவும், அந்த டாய்லெட்டில் டிஷ்யூ பேப்பர் தவிர வேறு எதையும் போடக்கூடாது என்றும், அவ்வாறு போட்டால் டாய்லெட் அடைத்துக்கொள்ளும், மோட்டார் பம்ப் வேலை செய்யாது. நாங்கள் பிளம்பரை கூப்பிட்டு தான் சரி செய்ய வேண்டும், சரி செய்வதற்கான செலவீனம் எங்களிடமிருந்தே பெற்றுக் கொள்ளப்படும் என்றும் விவரித்துக் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் உணவு சமைக்கும்பொழுது அதிகமாக எண்ணெய் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதிகமாக மசாலா பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அப்படி பயன்படுத்தினால் அது வீடு முழுவதும் ஒரு துர்நாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அதனால் எங்களுக்கு அடுத்து அங்கு தங்க வருபவர்களுக்கு மீண்டும் சுத்தம் செய்து கொடுப்பது சிரமம் ஆகிவிடும் என்றும் கூறினார். அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லை என்று சரி என்று ஒப்புக்கொண்டோம்.

மறுநாள் இரண்டு இடங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து இருந்ததால் இரவு சீக்கிரம் உறங்கி விடலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனாலும் இரவு ஆவதற்கு இன்னும் வெகு நேரம் இருந்ததால் நகரில் இருக்கும் ஏரியை சுற்றிப் பார்த்து விட்டு வரலாம் என்று மூவரும் கிளம்பினோம்.










பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி எதுவும் ஹேமில்டன் நகரில் இருக்கவில்லை; ஆனாலும் ஏரியின் அருகில் சிறுவர் விளையாட்டு திடல் அமைந்திருந்தது அங்கு நிறைய இந்திய சிறுவர்கள் வேறு விளையாடிக் கொண்டிருந்தனர். கார்த்திக்கும் அந்த விளையாட்டு திடலில் சிறிது நேரம் விளையாடினான். அதன் பின்னர் மூவரும் வீட்டினை அடைந்து இரவு உணவு அருந்திவிட்டு, கார்த்திக்கிட்டு பேராசிட்டமால் கொடுத்துவிட்டு உறங்கச் சென்றோம். 

ஆனால் கோமதியோ 15 நிமிடங்களுக்கு ஒரு முறை கார்த்திக்கை எழுப்பி விட்டு எலுமிச்சை சாறு குடி, அரிசி கஞ்சி, குடி திரவ உணவுகள் ஏதாவது குடித்தே ஆக வேண்டும்; வேறு ஏதாவது பழச்சாறு குடி என்று படுத்தி எடுத்துக் கொண்டிருந்தார். உறக்கம் வேறு வந்து கொண்டிருந்ததாலும் சற்று உடல் சோர்வடைந்து இருந்ததாலும் எனக்கு எதுவும் வேண்டாம் என்று அழுது கொண்டிருந்தான். 

நான் எப்பொழுதும் படுத்ததும் உறங்கிவிடும் பழக்கம் உடையவன்; ஆதலால் நன்றாக உறங்கி விட்டேன். சிறிது நேரம் கழித்து இவர்களின் சத்தத்தை கேட்டு நான் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தேன். கட்டிலின் கீழே படுத்துக் கொண்டிருந்த நான் கோமதியை அங்கே படுக்குமாறு சொல்லிவிட்டு கார்த்திக்கின் அருகினில் சென்று அவனை சற்று அரவணைத்துக் கொண்டு உறங்க வைத்தேன்; அவன் சிறிது நேரத்திற்கெல்லாம் நன்றாக உறங்கி விட்டான்; இரவில் அதன் பின்பு அவன் எழுந்திருக்கவே இல்லை காலையில் எழும்பொழுது அவன் காய்ச்சல் நன்றாக குணமாகி இருந்தது.

Wednesday, April 26, 2023

நியூசிலாந்து பயணம்! - Day 3

27-Dec-2022:   முந்தைய நாள் இரவில் கார்த்திக்கிற்கு காய்ச்சல் அதிகமாக அடித்து இருந்ததால் நாங்கள் பாராசிட்டமால் கொடுத்து தூங்க வைத்திருந்தோம். ஆனால் காலை எழுந்த பொழுதும் கார்த்திக்கிற்கு காய்ச்சல் தொடர்ந்தது. அதனால் ரெயின்போஸ் சாகச விளையாட்டு திடலுக்கு செல்வதால் வேண்டாமா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனாலும் முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து விட்டதால் அதை வீண் செய்ய வேண்டாம் என்று எண்ணி அங்கு சென்று வேடிக்கை மட்டுமாவது பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்து, காலை உணவு அருந்தியதும் கார்த்திக்கிற்கு மீண்டும் பாராசிட்டமால் கொடுத்து, ரெயின்போஸ் திடலுக்கு புறப்பட்டோம். 

காலையில் சீக்கிரமாக வந்து அனைத்து விளையாட்டுகளையும் ஓர் இரண்டு முறையாவது விளையாடினால்தான் கொடுத்த காசிக்கு பலன் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் ரெயின்போஸ் திடலை வந்தடைந்த பொழுது மணி மதியம் 12 ஆயிருந்தது. திடலினுள் அவர்கள் வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்களை அனுமதிப்பதில்லையாதலால் வெறும் தண்ணீர் பாட்டில்களை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றோம். 











முதலில் கிட்ஸ் கிங்டம் என்றழைக்கப்படும் சிறுவர்கள் விளையாடும் இடத்தை சென்றடைந்து, கார்த்திக்கை அங்கு சில ரைடுகள் விளையாட விட்டோம். அவனும் அங்கே குஷியாக விளையாடினான்; அப்போது அவனுக்கு காய்ச்சல் எங்கு சென்றிருந்தது என்றே எங்களுக்கு தெரியவில்லை. 


கிட்ஸ் கிங்டம் விளையாடி முடித்ததும் சிறிது மதிய உணவு அருந்திவிட்டு,  மூவரும் சேர்ந்து விளையாடுமாறு அமைந்திருந்த LOG FLUME மற்றும் DODGEMS ஆகிய இரண்டு விளையாட்டுகளை விளையாடி முடித்தோம். இதில் LOG FLUME என்பது தண்ணீரில் படகினில் மிதந்து சென்று, இறுதியில் உயரமான இடத்திலிருந்து சறுக்கிக் கொண்டு தண்ணீரினுள் விழுவது போல அமைந்திருந்தது. இறுதியாக தண்ணீரில் விழும் இடம் மிகவும் சரிவாக அமைந்திருந்ததால் திரில்லிங் ஆகவும், அப்போது தண்ணீர் நம் மீது தெறிப்பது உற்சாகமாகவும் இருந்தது.










DODGEMS என்பது பொம்மை கார் ஓட்டிச் சென்று மற்றவர்களின் மேல் இடிப்பது போல் அமைந்திருக்கும் Dashing Car விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டினை எத்தனை முறை விளையாடினாலும் கார்த்திக்கிற்கு போர் அடிப்பது இல்லை. 

பெரியவர்கள் விளையாடும் சில அட்வென்ச்சர் ரைடுகள் விளையாடலாம் என்று அந்த இடத்திற்குச் சென்றால், ஒவ்வொரு விளையாட்டிற்கும் நிறைய பேர் காத்துக் கொண்டு வரிசையில் நின்றிருந்தனர். ஒரு மணி நேரமாவது வரிசையில் நின்றால் தான் நமக்கு ஒருமுறையாவது வாய்ப்பு கிடைக்கும். சரி ஒரு ரைடாவது அப்படி விளையாடி விடலாம் என்று நீ வரிசையில் காத்துக் கொண்டிருந்தபோது கார்த்திக் மிகவும் சோர்வடைந்து இருந்தான்; அவனுக்கு காய்ச்சல் மீண்டும் எட்டிப் பார்த்தது. வெயிலும் சற்று அதிகமாகவே அடித்ததால் நாங்கள் சரி போதும் என்று எண்ணி வீட்டுக்கு செல்ல தயாரானோம்.

நாங்கள் தங்கியிருக்கும் வீட்டை அடைந்ததும் கோமதி கார்த்திக்கிற்கு அரிசி கஞ்சி தயார் செய்து கொடுத்தார். நான் அவர்கள் இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு அருகில் இருக்கும் St Heliers கடற்கரை வரை சென்று காலரா நடந்து விட்டு வந்தேன்.  நான் திரும்பி வந்ததும் இரவு உணவு அருந்திவிட்டு கார்த்திக்கு பேராசிட்டமால் மருந்தும் கொடுத்தோம். மறுநாள் காலை ரங்கிடாடோ தீவுகளுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம்; ரங்கிடாட்டோ தீவில் மலை உச்சி வரை நடந்து மேலேற திட்டமிட்டு இருந்ததாலும், கார்த்திக்கு அது இயலாத காரியம் ஆகிவிடும் மேலும் உடல் சோர்வடைந்து விடும் என்பதாலும், அந்த பயணத்தை தவிர்த்து விடலாம் என்று முடிவு செய்து இருந்தோம்.

மறுநாள் ஹேமில்டன் நகரில் நாங்கள் தங்குமிடத்திற்கு சென்று சேர வேண்டும் என்ற ஒன்று மட்டுமே திட்டமிட்ட நிகழ்வாகும். மற்றபடி மிகவும் தாமதமாக எழுந்து புறப்பட்டு வழியில் விருப்பம் போல சில இடங்களுக்கு செல்லலாம் என்றும், கார்த்திக்கை அதிக உடல் சோர்வு அடையாமல் பார்த்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்திருந்தோம். மறுநாள் திட்டமிட்ட சுற்றுலா இடங்கள் ஏதும் இல்லாததால், இரவு ஆக்லாந்து பாலத்தின் வழியாக சென்று ஆக்லாந்து நகரத்தின் அழகை ரசிப்பது என்று முடிவு செய்து இரவு உணவுக்குப் பிறகு அனைவரும் புறப்பட்டோம்.











ஆக்லாந்து பாலத்தின் வழியாக பயணித்து ஆக்லாந்து நகரத்தின் அழகை ரசித்துக்கொண்டு சல்பர் பீச் எனும் இடத்தை அடைந்தோம்.  ஆக்லாந்து பாலம் சிட்னி பாலத்தைப் போல மிகவும் பிரம்மாண்டமானது அல்ல; அது ஒரு மிகவும் சிறிய அளவிலான பாலம். ஆனாலும் அந்தப் பாலத்தின் வழியாக பயணிப்பது எங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. சல்பர் பீச்சில் நின்று கொண்டும் ஆக்கிலாந்து நகரின் அழகை சிறிது ரசித்தவாறு சில புகைப்படங்களும் எடுத்துக்கொண்ட பிறகு மீண்டும் நாங்கள் தங்கியிருந்த வீட்டினை வந்தடைந்தோம்.

 இன்றைய நாள் இத்துடன் முடிந்தது

Wednesday, April 19, 2023

நியூசிலாந்து பயணம்! - Day 2

26-Dec-2022:  ஆக்லாந்து சுற்றுப்பயணத்தின் முதல் நாளாக, ரங்கிடாட்டோ தீவுகளுக்கு சென்று அதன் மலை உச்சி வரை ஏறி விட்டு இறங்குவது என்று முடிவு செய்து அந்த தீவுக்கு செல்லும் பெரிக்கு டிக்கெட் வாங்க சென்றோம். ஆனால் அன்றைய நாளுக்கான டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்து விட்டதாகவும், வேண்டுமானால் நாளை அல்லது நாளை மறுநாளுக்கு இப்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறினர். அடுத்த நாள் ரெயின்போஸ் எண்டு என்று அழைக்கப்படும் சாகச விளையாட்டு திடலுக்கு முன்பதிவு செய்திருந்ததால், நாங்கள் அதற்கு மறுநாள் ரங்கிடாட்டோ தீவுகளுக்கு செல்ல டிக்கெட் புக் செய்தோம். 

அதற்குப் பிறகு எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டே காலார நடந்து ஆக்லாந்து நகரின் கடற்கரையை சிறிது சுற்றிப் பார்த்தோம். அப்பொழுது மிக வேகமாக மழை பொழிய ஆரம்பித்தது. மழையில் நனைவதில் இருந்து எங்களை காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த நியூசிலாந்து மேரி டைம் மியூசியம் சென்றடைந்தோம்.

மியூசியம் உள்ளே உணவு அருந்துவதற்கு என்று இருந்த இடத்தில் இருந்து கடலின் மேல் மழை பொழிவதை ரசித்துக்கொண்டே, வீட்டிலிருந்து சமைத்து எடுத்து வந்த உணவை வயிறார உண்டோம். எங்கள் பயணத்திட்டத்திலேயே இல்லாத நியூசிலாந்து மேரீட் டைம் மியூசியம் மிகவும் சிறப்பாக இருந்ததால் அதை மட்டுமே நாங்கள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சுற்றிப் பார்த்தோம். 

பழங்கால முதல் தற்காலம் வரை பலவித கப்பல்களின் மாதிரிகள் அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி நியூசிலாந்து நாட்டினர் பாய்மரக்கப்பல் செலுத்தும் போட்டிகளில் தங்க மெடல் வாங்கியதைப் பற்றிய நிகழ்வுகளும் அவர்கள் பயன்படுத்திய பாய்மரக் கப்பல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 




நான் பணியில் இருக்கும் Oracle நிறுவனமும் இந்த பாய்மரக்கப்பல் செலுத்தும் போட்டியில் பங்கு பெற்ற பரிசில் பெற்ற நிகழ்வுகளை குறிப்பிட்டு இருந்தனர். நான்கு மணி அளவில் மியூசியம் சுத்தி பார்ப்பதை முடித்துவிட்டு வெளியில் வந்து அப்படியே காலாற நடந்து ஸ்கை டவர் என்று அழைக்கப்படும் உயரமான கட்டிடத்தை அடைந்தோம்.

கட்டிடத்தின் உச்சிக்குச் செல்ல முன்பே முன்பதிவு செய்து வைத்திருந்ததால் எங்கள் டிக்கெட்டுகளை காண்பித்து உச்சிக்கு செல்வதற்கான லிப்ட்டை அடைந்தோம். கார்த்திக் சற்று பயத்துடனே லிப்டில் ஏறினான். நாங்கள் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டே உச்சியை அடையுமாறு லிப்டை வடிவமைத்திருந்தனர். அது அச்சத்தை மேலும் கூட்டுவதாக அமைந்திருந்தது.



கட்டிடத்தின் உச்சியில் கண்ணாடியால் ஆன தளம் ஓரிடத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. சுற்றுலா வாசிகள் சிலர் அதன்மேல் நடந்தும் இன்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர் ஆனால் எங்களுக்கோ திடீரென கண்ணாடி உடைந்து நாங்கள் கீழே விழுந்து விட்டால் என்ன ஆவது என்றும் மிகவும் அச்சமாக இருந்தது. அதனால் அங்கிருந்த உதவியாளரிடம் அந்த கண்ணாடி தளத்தைப் பற்றி கேட்டபோது, அவர் அருகே இருந்த குறிப்புகளை சுட்டிக்காட்டினார். அந்த குறிப்பை நாங்கள் படித்த போது அந்த கண்ணாடி தளம் கான்கிரீட் தளத்தைப் போன்றே உறுதியானது என்றும் அது உடைந்து நீங்கள் கீழே விழுந்து விட மாட்டீர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை படித்த பிறகு சற்றே தெம்புடன் நாங்கள் அந்த கண்ணாடி தளத்தின் மேல் நடக்க தயாரானோம். ஆனாலும் கார்த்திக் மிகவும் அச்சத்துடன் அந்த கண்ணாடி தளத்தின் மேல் நடக்க வரவே இல்லை சிறிது நேரம் கழித்து நாங்கள் அங்கு நின்றும், குதித்தும் காட்டிய பிறகு ஒரு வழியாக அவனும் கண்ணாடி தளத்திற்கு வந்து எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.



அதேபோல கட்டிடத்தின் உச்சியில் இருந்து விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் நீங்கள் மேலிருந்து கீழே வழுக்கி கொண்டு செல்வது போல அமைக்கப்பட்டிருந்தது. அதற்கென நாம் உட்காரும் தளம் வேறு அங்கே வழுக்கி கொண்டு செல்வது போலவே சற்று உங்களையும் ஆட்டி வைக்கின்றது.  ஆனால் நாங்கள் டிக்கெட் புக்கிங் சென்று சேரும் நேரத்தில் அன்றைய நாளுக்கான விர்ச்சுவல் ரியாலிட்டி ஸ்லைடு புக்கிங் முடிந்து விட்டதாக கூறினர். ஆனால் நான் கார்த்திக்கை அருகே நிற்க வைத்து முகத்தை மிகவும் பாவமாக வைத்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தேன். அதனைப் பார்த்த அந்தப் பெண்மணியும் சற்றே மனம் இளகி எங்களுக்கு ஒரு டிக்கெட் கொடுத்தார். நான் காத்திக்கையும் கோமதியையும் அந்த விளையாட்டை விளையாட செல்லுமாறு அனுப்பி வைத்தேன். 

Sky Slideன் அதிநவீன தொழில்நுட்பமானது உங்களை 100 கிலோமீட்டர் மெய் நிகர்(Virtual Reality) வேகத்தில் கட்டிடத்தின் உச்சியில் இருந்து ஒரு கண்ணாடி ஸ்லைடின் வழியாக கீழ் தளம் வரை அழைத்துக் கொண்டு செல்லும். நீங்கள் ஸ்லைடில் செல்லும் போது ஆக்லாந்து நகரத்தின் அழகை  திரில்லிங் உடன் கண்டு செல்லலாம்.  நீங்கள் VR ஸ்லைடில் செல்லும் பொழுது நீங்கள் அமர்ந்திருக்கும் தளம் அதற்கேற்றவாறு மேலும் கீழும் பக்கவாட்டிலும் உங்களை ஆட்டி வைப்பதால் நீங்கள் உண்மையாகவே அங்கே வழுக்கிக் கொண்டு செல்வது போல உணர்வீர்கள். கோமதிக்கும் கார்த்திக்கிற்கும் இது ஒரு திரில்லிங்கான அனுபவமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 



கட்டிடத்தின் உச்சியிலிருந்து ஆக்லாண்டு நகரம் மிகவும் அழகாக காட்சியளித்தது. சாகச விளையாட்டு விரும்பிகள் சிலர் ஸ்கை ஜம்ப் என்று அழைக்கப்படும் இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு கட்டிடத்தின் உச்சியில் இருந்து குதிக்கும் விளையாட்டுகளை மேற்கொண்டிருந்தனர். AJ Hacket என்று அழைக்கப்படும் நிறுவனம் இந்த சாகச விளையாட்டினை அங்கே நிறுவி, விளையாட்டு விரும்பிகள் உற்சாகமாகவும் பாதுகாப்பாகவும் குதிப்பதற்கான பணியை மேற்கொண்டிருந்தது.

மாலை 6:30 மணிக்கு Sky Tower விட்டு வெளியே வந்தோம். அடுத்த நாள் ரெயின்போஸ் எண்டு சாகச விளையாட்டு திடலுக்கு புக் செய்திருந்ததால், இன்று சென்று நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி நாங்கள் வீட்டினை அடைந்தோம். இரவு மிதமான உணவு சமைத்து உண்டு விட்டு உறங்கச் சென்றோம். அப்பொழுது தான் தெரிந்தது கார்த்திக்கு லேசாக காய்ச்சல் அடித்தது.

நியூசிலாந்து பயணம்! - 1st day

 25-Dec-2022: நியூசிலாந்து மற்றும் குயின்ஸ்லாந்து செல்ல மூட்டை முடிச்சுகள் அனைத்தையும் கட்டி தயாரான பிறகு உறவினர் சௌந்தர் அவர்கள் எங்களை விமான நிலையத்தில் டிராப் செய்ய வந்தார். நியூசிலாந்தில் செலவழிப்பதற்கு Forex Card வாங்கிக் கொண்டு சென்றிருந்தோம். இருந்தாலும் ஒரு 200 டாலர்கள் கையில் கேஷ் ஆக வைத்துக் கொள்ளலாம் என்று, பணத்தை மாற்றிக்கொள்ள விமான நிலையத்தில் இருக்கும் கரன்சி எக்ஸ்சேஞ்ச் ஆபீசுக்கு சென்றோம். ஆனால் அங்கு எக்ஸ்சேஞ்ச் ரேட் மிகவும் அதிகமாக இருந்தது; அதாவது 200 ஆஸ்திரேலியா டாலர்கள் கொடுக்கும் பொழுது வெறும் 175 நியூசிலாந்து டாலர்கள் மட்டுமே கிடைத்தது.  ஆனால் இதுவே பாரக்ஸ் கார்டு மூலம் ஒரு ஆஸ்திரேலியா டாலருக்கு ஒரு நியூசிலாந்து டாலர் என்ற அளவில் கிடைத்தது.

விமானம் செக்கின் செக்யூரிட்டி செக்கிங் மற்றும் குடியேற்ற செக்கிங் அனைத்தையும் முடித்து எங்களது விமானத்திற்கான நுழைவாயில் காத்திருப்பு அறையை அடைந்தோம். காத்திருப்பு அறையில் இருந்தபோது நாங்கள் கட்டி எடுத்துக்கொண்டு சென்றிருந்த பிரியாணியையும் நன்றாக சாப்பிட்டுவிட்டு விமானம் போர்டிங் அழைப்பு வருவதற்காக காத்துக் கொண்டிருந்தோம்.



4:40 மணி விமானத்திற்கான அழைப்பு எங்களுக்கு 4 மணிக்கு வந்தது அனைவரும் ஆர்வமுடன் விமானம் ஏற தயாரானோம். சிறுவர்கள் உடன் இருந்தால் விமானம் போர்டிங் செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டதால் நாங்கள் முதலாகவே சென்று விமானம் ஏறி விட்டோம். முதலில் ஏறிய கார்த்திக் அவனுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்ததும் முன்னிருந்த தொடுதிரையில் என்ன என்ன வசதிகள் உள்ளன, எந்த கார்ட்டூன் திரைப்படங்கள் உள்ளன, எவ்வாறு மற்ற இருக்கையில் உள்ள பயணிகளுடன் அந்த தொடுதிரையின் வழியாகவே தொடர்பு கொள்வது என்று அனைத்தையும் ஆராய்ந்து கண்டுபிடித்து முடித்தார்.

அதுமட்டுமின்றி நமக்கு வேண்டிய உணவை நாம் தொடுகிறேன் வழியாகவே ஆர்டர் செய்ய வசதி இருந்தது. நாங்கள் இதற்கு முன்பு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த போது கூட மேலே பொத்தானை அழுத்தி, விமான பணிப்பெண் ஒருவரை இருக்கைக்கு வர வைத்து அவரிடம் தான் என்ன உணவு இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டு எங்களுக்கு இந்த உணவை வழங்குங்கள் என்று ஆர்டர் செய்ய முடியும். ஆனால் ஏர் நியூசிலாந்து விமானத்தில் எங்களுக்கு முன்பிருந்த தொடுதிரையின் வழியாக விமானத்தில் உள்ள உணவு, குடிநீர், குளிர்பானங்கள், மது வகைகள் என்று அனைத்தையும் கண்டறிந்து நமக்கு தேவையான உணவை நாமே தேர்வு செய்து ஆர்டர் செய்ய முடியும்.

விமானத்தில் வழங்கப்பட்ட உணவை உண்டு முடித்த பின்பு சிறிது நேரம் ஒவ்வொருவரும் திரைப்படம் பார்த்தோம். ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகருக்கும் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கும் இடையிலான பயண நேரம் வெறும் மூன்றரை மணி நேரங்கள் என்பதால், எங்களுக்கு முழு திரைப்படம் பார்க்க கூட நேரம் போதவில்லை அதற்குள்ளாக விமானம் இரவு 10 மணியளவில் ஆக்லாந்து நகரை வந்தடைந்திருந்தது.



விமானம் தரை இறங்கியதும் குடியேற்ற சோதனை முடித்து எல்லை பாதுகாப்பு சோதனையை அடைந்தோம். நியூசிலாந்து நாட்டின் பயோ செக்யூரிட்டி சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையானவை! ஆஸ்திரேலியாவை போலவே! உணவுப் பொருட்கள், தாவரங்கள், விலங்குகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், ஏரி குளம் ஆறுகள் போன்று நல்ல நீரில் பயன்படுத்திய காலணிகள் ஆகியவற்றை அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் கொடுக்கும் படிவத்தில் நாம் கொண்டு வந்திருக்கும் பொருட்களை பட்டியலிட வேண்டும். நாம் படிவத்தில் பட்டியலிட்ட பொருட்களை பயோ செக்யூரிட்டி அலுவலர்கள் கண்டறிந்து எடுத்து குப்பையில் வீசி விடுவார்கள். நாட்டிற்குள் அனுமதிக்கப்படாத பொருட்கள் எதையாவது நாம் எடுத்துக் கொண்டு வந்திருந்து, அதை அவர்களின் விண்ணப்பத்தில் நாம் பட்டியலிடாமல் விட்டுவிட்டால்,  அதை அவர்கள் கண்டறிந்து எடுத்தால், அபராதம் மற்றும்/அல்லது சிறை தண்டனை இரண்டும் கிடைக்கும். அதனால் நல்ல பிள்ளையாக கொண்டு வந்த பொருட்களை நாங்கள் பட்டியலிட்டு விட்டோம்; ஏனென்றால் நாங்கள் வீட்டில் உணவு சமைக்க தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துச் சென்றிருந்தோம்.

அனைத்து சோதனைகளும் முடித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் முன்பாகவே நியூசிலாந்தில் பயன்படுத்துவதற்காக தொலைபேசி சேவைக்கான சிம் கார்டை வாங்கினோம். சிம்கார்டை என்னுடைய செல்போனில் மாற்றிவிட்டு, நாங்கள் வடக்கு தீவில் பயன்படுத்துவதற்காக புக் செய்திருந்த பட்ஜெட் கார் ரெண்டல்(www.bargainrentalcars.co.nz) சர்வீஸ் அவர்களை தொடர்பு கொண்டோம். நாங்கள் தாமதமாக வந்து சேர்வதால் அவர்கள் ஃபிளையவே(flyaway) என்ற வேறு ஒரு நிறுவனத்துடன் இணைந்து எங்களுக்கு இரவு நேரங்களில் காரை வாடகைக்கு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். எங்களை ஏர்போர்ட்டில் இருந்து பிக்கப் செய்ய அந்த ஃப்ளையவை நிறுவனம் காத்துக் கொண்டிருந்தது.

 அந்த இரவு 11:30 மணி அளவில் எங்களுக்கு எந்த தொந்தரவும் இன்றி வாடகை கார் வழங்கிய அந்த நிறுவனத்தை பாராட்டியே ஆக வேண்டும். காரை எடுத்துக்கொண்டு நாங்கள் ஆக்லாந்து தங்குவதற்கு airbnb வழியாக புக் செய்திருந்த அப்பார்ட்மெண்ட்டை வந்தடைந்தோம். புதிய இடம் என்பதாலும் இரவு நேரம் என்பதாலும் அந்த தெருவை வந்தடைந்த பிறகும், அந்த வீட்டை கண்டுபிடிப்பதில் எங்களுக்கு சற்று சிரமம் இருந்தது. ஒரு 20 நிமிட தேடலுக்குப் பிறகு airbnb செயலியின் வழியாக போட்டோக்களை சரிபார்த்து இந்த வீடு தான் என்று முடிவு செய்து வீட்டினை சென்று அடைந்தோம். மிகவும் சிறிய இடத்தை அனைத்து வசதிகளையும் கொண்டு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த வீடு அது; எங்கள் மூன்று பேருக்கு தங்குவதற்கு மிகவும் கச்சிதமாக இருந்தது.  அனைவரும் ஒரு குளியலை போட்டுவிட்டு உறங்குவதற்கு தயாரானோம்.