இயற்கை பேரழிவு
நிலம் நடுங்கியது,
கட்டிடங்கள் குலுங்கியது,
கோபுரங்கள் சாய்ந்தன,
மனிதரின் உதிரம் கடலாகப் பாய்ந்தது!
வயிற்றுப் பசிக்காக அழுகின்றதா,
தாயின் முகம் காண அழுகின்றதா,
என்று தெரியாத மழலையின் கண்ணீர்!
பெற்றதன் குழந்தையின் முகம் தேடி ஒரு விழி,
உற்றதன் கணவனின் கரம் தேடி மறுவிழி என,
இரு விழிகளிலும் கரைபுரண்டு ஓடிடும் பெண்டிரின் கண்ணீர்!
அன்பின் வடிவம், கருணையின் உருவம்,
அழுகுரல் கேட்டால் ஓடோடி வருவான் என்றனர்!
ஆனால் இன்று என்ன கண்ணீர் கடலில் திளைத்துக் சுகம் காண்கிறானா!
தூணிலும் இருப்பான்,
துரும்பிலும் இருப்பான் என்றனர்
அந்த தூணும் துரும்பும் சாய்ந்து,
என் மக்களை கொன்று சாய்த்த போது,
அவன் எங்கே இருக்கிறான்!
அவன் இருப்பு உண்மையெனில் பேரழிவு ஏன்?
உலகைப் படைத்தது அவனில்,
பேரழிவுகளுக்கு மட்டும் பெயர் ஏன், இயற்கை பேரழிவு?