நியூசிலாந்து பயணம்! - Day 6 & 7
30-Dec-2022: இன்று நாங்கள் செல்வதற்கு முன்பதிவு செய்து இருந்த ஒரே இடம் பூச்சிகளால் ஒளிரும் வைட்டமோ குகைகள்(Waitomo Glow Worm Caves). இந்த இடம் ஹேமில்டன் நகரில் இருந்து ஒன்றரை மணி நேர தொலைவில் உள்ளது. காலையில் இந்த இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு மதிய உணவிற்கு பிறகு, அங்குள்ள ஒரு சுடுநீர் ஊற்றுக்கு செல்லலாம் என்று திட்டமிட்டு இருந்தோம்.
கார்த்திக் இன்னும் முழுமையாக குணமடையாததால், அவனால் இந்த குகையை நன்கு என்ஜாய் செய்து சுற்ற முடியவில்லை; எங்கள் இருவரையும் கூட அவன் குகையை நன்கு சுற்றிப் பார்க்க விடவில்லை. உடன் வந்திருந்த வழிகாட்டி, ஒளிரும் பூச்சிகளைப் பற்றிய அறிவியலையும், இந்த குகை கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றையும் விவரித்து கூறியதையும் எங்களை முழுதாக கேட்கவிடவில்லை. இருந்தாலும் எங்களால் முடிந்த வரை சுற்றிப் பார்த்துவிட்டு குகையிலிருந்து வெளியேறினோம்.
நாங்கள் மதியத்திற்குள்ளாகவே களைப்படைந்து விட்டோம் மேலும் கார்த்திக் இன்னும் முழுமையாக குணமடையாததால், சுடுநீர் ஊற்றுக்கு செல்லும் திட்டத்தை கைவிட்டு விட்டு ஹேமில்டன் வந்தடைந்தோம். நகரில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் சென்று சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு எங்கள் வீட்டினை அடைந்து, நூடுல்ஸும் கோழி வறுவலும் சமைத்து நன்று என்ஜாய் செய்து சாப்பிட்டோம்.
31-Dec-2022: 2022 ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று எங்களுக்கு செல்வதற்கு சிறப்பான இடங்கள் என்று எதுவும் இருக்கவில்லை. அதனால் ஹேமில்டன் நகருக்குள் சிறியதாக ஒரு வட்டமடிப்பது என்றும், இரவில் எங்காவது புத்தாண்டுக்கான வானவேடிக்கைகள் நடைபெறும் அதை கண்டு களிப்பது என்றும் முடிவானது.
காலையில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் முன் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினோம். நாங்கள் முதலில் சென்ற இடம் நியூசிலாந்து டெம்பில்(New Zealand Temple) என்று அழைக்கப்பட்ட இடம்.
இது இயேசு கிறிஸ்து அமைந்துள்ள வழிபாட்டுத்தலம் என்றாலும் இதனை இவர்கள் கோயில் என்று அழைப்பது எனக்கு சற்றே வித்தியாசமாக இருந்தது. சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, அங்கிருந்து கிளம்பி நாங்கள் வந்தடைந்த இடம் வைகாட்டோ அருங்காட்சியகம்(Waikato Museum).
இந்த அருங்காட்சியகத்திலும் மாவோடிகளின் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர். அவர்கள் பயன்படுத்திய ஒரு படகு அவர்களின் கைவினை அலங்காரங்களுடன் அழகாக காட்சியளித்தது.
மற்றபடி வழக்கமாக அருங்காட்சியகத்தில் இருக்கும் சில அரிய புகைப்படங்கள் மட்டுமே அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது; விரைவாக அதனை சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறி மதிய உணவும் அருந்திவிட்டு, மதியத்திற்கு பிறகு என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தோம்.
எவ்வளவு யோசித்தாலும் என்ன செய்வது என்று ஒரு சரியாக ஐடியா இல்லாததால் மதியம் சென்று அனைவரும் உறங்கி விடுவது என்று முடிவெடுத்தோம். வீட்டுக்கு சென்று மதிய உணவு அருந்திவிட்டு சிறிது நேரம் இளைப்பாரி விட்டு, மாலையில் வாய்க்கட்டு ஆற்றினை ஒட்டியுள்ள நடைபாதையில் ஒரு இரண்டு மணி நேரம் காலாற நடை பயிற்சி மேற்கொண்டோம். வழியில் ஓர் இரண்டு பூங்காக்களை சுற்றிப் பார்த்தோம்.
அதன்பின் இரவு உணவிற்கு ஏதாவது ஒரு இந்திய உணவகத்திற்கு சென்று நன்கு வயிறார உண்டு இந்த ஆண்டினை இறுதி செய்வோம் என்று எண்ணி ஒரு மலையாளியின் உணவகத்தினை(Salt Mango Tree NZ - South Indian Restaurant) அடைந்தோம். நன்கு காரமாக தயாரிக்கப்பட்ட பீப் கொத்து புரோட்டாவும் சிக்கன் பிரைடு ரைஸும் ஆர்டர் செய்து உண்டோம். கார்த்திக்கு இலவசமாக ஒரு மெதுவடை கிடைத்தது.
அந்த உணவகத்தின் பங்குதாரர்களில் ஒருவர் நல்ல ஓவியரும் கூட அவர் தனது ஓவியங்களைக் கொண்டு அந்த உணவகத்தினை அலங்கரித்து இருந்தார்.
ஹேமில்டன் நகரில் இரவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எங்காவது நடைபெறுகிறதா என்று கேட்டபோது அவர்கள் பெரிய ஹோட்டல்களில் மட்டும் இரவு விருந்து நடைபெறும்; மற்றபடி அரசு சார்பில் வான வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள் போன்று எந்த ஏற்பாடும் இல்லை என்றும், நகருக்கு அருகில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்பது இரண்டரை மணி நேர தொலைவில் உள்ள டவுரங்கா(Tauranga) நகரில் மட்டுமே நடைபெறும் என்றும் கூறினர். அதனால் மீண்டும் வீட்டுக்கு சென்று தூங்கி விடுவது என்று முடிவானது. நியூசிலாந்து நாட்டின் தென் தீவினை அடைய மறுநாள் விமானம் ஏற வேண்டும் ஆதலால், காலை ஏழு மணிக்கு நாங்கள் வீட்டிலிருந்து புறப்பட வேண்டும்.