06-Jan-2023: இன்று காலை மீண்டும் தங்கி இருந்த அறையை காலி செய்துவிட்டு, உடமைகள் அனைத்தையும் காரில் ஏற்றிக்கொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். Dunedin நகரத்தில் மூன்று முக்கியமான இடங்களை பார்க்கத் திட்டமிட்டு இருந்தோம்.
Dunedin Chinese Garden
அதில் முதலாவது ஆக டியுனிடின் சைனீஸ் தோட்டம். சுற்றுலா வழிகாட்டி என்று யாரும் இல்லாமல் வெறுமனே சுற்றிப் பார்த்தால், பெரிதாக ஒன்றும் புரிவதில்லை. அங்கே சுற்றுலா வழிகாட்டி என்று யாரும் இருக்கவும் இல்லை. ஆனால் அந்த தோட்டத்தை மிகவும் அழகாக அமைத்திருந்தனர். தோட்டத்தின் நடுவே நீரோட்டத்திற்கான வழியும், அந்த நீரினுள் வாத்துகளும், சில மீன்களும் இருந்தன.
First Church of Otago
சைனீஸ் தோட்டத்திலிருந்து வெளியில் வந்ததும், அடுத்ததாக நாங்கள் சென்ற இடம், ஒட்டகோ மாகாணத்தின் முதல் சர்ச். ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து முதலில் நியூசிலாந்துக்கு குடியேறிய நபர்களால், செப்டம்பர் 1848 ஆம் ஆண்டு முதலில் இந்த சர்ச் மரப்பலகைகளைக் கொண்டு கட்டி எழுப்பப்பட்டது.
அதன்பின்னர் இரண்டு முறை உருமாற்றம் அடைந்த இந்த சர்ச், தற்போது இருக்கும் பிரம்மாண்டமான கட்டிடமாக 1873 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
இதற்குள் மதிய உணவு நேரம் ஆகிவிட்டது, பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. அதனால் அருகில் உள்ள பூங்காவில் அமர்ந்து, நாங்கள் காலையிலேயே சமைத்து எடுத்துக் கொண்டு வந்திருந்த சாதம் மற்றும் இறால் குழம்பை நன்றாக ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.
Steepest Street in the World
இதற்கு அடுத்து நாங்கள் சென்ற இடம் உண்மையிலேயே ஒரு விசித்திரமான இடம். அந்த விசித்திரம் என்னவென்றால் உலகிலேயே அதிக செங்குத்தான தெரு என்றால் அது டியூனீடின் நகரத்தில் உள்ள பால்டுவின் தெரு(Baldwin Street) ஆகும்.
தெருவின் சரிவுத்தன்மை திட்டமிடப்படாததாக இருந்தது. ஆரம்ப கால டியூனீடின் பல பகுதிகளிலும், நியூசிலாந்தின் பல இடங்களிலும் போல, ஒரு கட்டவிழை வடிவத்தில்(Grid Pattern) திட்டமிடப்பட்டன; பெரும்பாலும் லண்டனில் உள்ள திட்டமிடுபவர்கள் இதைச் செய்தனர். இந்த தெரு, ஓடாகோ மாகாண சபை உறுப்பினரும், செய்தித்தாள் நிறுவனருமான வில்லியம் பால்ட்வின் என்பவரின் பெயரில் பெயரிடப்பட்டது. அவர் இந்த பகுதிகளை உட்பிரிவு செய்து அளித்தவர் என கூறப்படுகிறது.
1987 ஆம் ஆண்டு இந்தத் தெரு கின்னஸ் சாதனை புத்தகத்தில் உலகில் மிகவும் செங்குத்தான தெருவாக இடம் பெற்றது. ஆனால் 2019 ஆம் ஆண்டு, Wales நகரத்தில் உள்ள Ffordd Pen Llech தெரு அந்தப் பெருமையை தட்டிச் சென்றது. ஆனாலும் கின்னஸ் சாதனை அமைப்பாளர்கள், தெருவின் சரிவை அளந்த முறை தவறு என்று டியூனிடின் நகரத்தில் வசிக்கும் மக்கள் முறையிட்டதின் காரணமாக, அந்த முறை மீண்டும் சரிபார்க்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டு உலகின் செங்குத்தான தெருவாக மீண்டும் பால்டுவின் தெரு அறிவிக்கப்பட்டது.
இத்துடன் டியூனிடின் நகரத்தில் பார்க்க வேண்டிய இடங்களை முடித்துக் கொண்டு, ஓமாரு நகரத்தின் வழியாக நாங்கள் தங்குவதற்கு முன் பதிவு செய்திருந்த டிமாரு நகரத்தை அடைவதற்கான பயணத்தை தொடங்கினோம்.
டீமாரு நகரம்
டீமாரு ஊரில் ஒரு மோட்டலில்(Anchor Motel, 42 Evans Street, Timaru, 7910, New Zealand) தங்குவதற்காக முன் பதிவு செய்திருந்தோம். அந்த மோட்டலைச் சென்றடைந்து, ஒரு இரவு தங்குவதற்கு வேண்டிய பொருட்களை மட்டும் காரிலிருந்து எடுத்துக்கொண்டு, எங்களுக்கென்று ஒதுக்கப்பட்டு இருந்த அறையை அடைந்தோம்.
அது மோட்டலாக இருந்தாலும், சற்று பழைய மோட்டலாகவே இருந்தாலும், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை, ஒரு படுக்கையறை வசதி கொண்ட ஒரு வீடு போலவே பெரியதாக இருந்தது. நாங்கள் நிறைய இடம் சுற்றுவதால், விலை மிக அதிகமாக இருக்கும் உயர்தர தங்கும் விடுதிகளை தேர்ந்தெடுப்பதில்லை. ஏனென்றால் நாங்கள் நிறைய இடங்கள் சுற்றிப் பார்த்துவிட்டு இரவு உறங்குவதற்கு மட்டுமே தங்குமிடத்திற்கு வருவதால், முடிந்த அளவு தங்குமிடத்திற்கு செலவு செய்யும் பணத்தை குறைவாகவே செலவிடுவோம்.
அனைவரும் ஒரு முறை குளித்து, புத்துணர்ச்சியான பிறகு, எங்கு செல்லலாம் என்று யோசித்தால் அந்த ஊரில் பார்ப்பதற்கு ஆகச் சிறந்த இடங்கள் என்று எதுவும் இருக்கவில்லை.
கடற்கரை மிகவும் அருகில் இருந்ததால், கால்நடையாக கடற்கரைக்குச் சென்று சிறிது நேரம் உலாவினோம். கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்த பொழுது, சற்றே தொலைவில் பொருட்காட்சி அமைத்திருப்பது தெரிந்தது. சரி பொழுது போக்க பொருட்காட்சி செல்லலாம் என்று மோட்டலுக்குச் சென்று எங்கள் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினோம். அங்கே சென்று, கார்த்திக்கும் கோமதியும் சில தூரிகள் விளையாடினர்.
அதுமட்டுமா பொருட்காட்சி என்றால் சாப்பாடு இல்லாமல் இருக்குமா அதுவும் இங்கே கிடைக்கும் பர்கர், சூடான நாய்( அதாங்க Hot Dog) போன்ற உணவுகளை பார்த்து விட்டால் கார்த்திக் கண்டிப்பாக ஒன்று கேட்பான். அவன் கேட்டதை வாங்கி கொடுத்து அவன் சாப்பிட்ட பிறகு, எங்கள் மோட்டலைச் சென்றடைந்தோம். அன்று இரவு நன்றாக உறங்கி ஓய்வெடுத்தோம்.