Importance of Education
எங்க ஊரு ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சை புளியம்பட்டி. உள்ளாட்சி அமைப்பின்படி பேரூராட்சியாக இருந்து, சமீபத்தில் நகராட்சியாக மாறிய ஒரு சிறிய நகரம். அதே ஊரில் அமைந்துள்ள அரசாங்க ஆண்கள் பள்ளியில்தான் நான் படித்தேன். அங்கு ஒரு ஆசிரியர் இருந்தார், இப்போது பணி ஓய்வு பெற்றுவிட்டார். எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக் கூடிய நல்ல ஆசிரியர்;
காலை மற்றும் மாலை நேரங்களில் டியூசன் தனியாக எடுப்பார். அதே ஊரில் உள்ள பெண்கள் படிக்கும் பள்ளியில் இருந்தும் இவரிடம் டியூசன் படிக்க வருவார்கள். டியூசன் co-ed முறையில் நடக்கும். அவரிடம் டியூசன் படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், ஒரே வருடத்தை சேர்ந்தவர்களை கூட, இரண்டு குழுக்களாக பிரித்து, காலை மற்றும் மாலை என்று மாற்றி மாற்றி டியூசன் எடுப்பார்.
அவர் டியூசன் எடுக்க ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்து இருந்தார். அந்த இடத்தில் முன்புறம், தென்னை ஓலை கொண்டு பந்தல் அமைக்கும் கடையும், பின்புறம் இவரது டியூசன் எடுக்கும் இடமும் அமைந்திருந்தது. அதனால் மனிதருக்கு தனியாக பிரம்பு வாங்க வேண்டிய செலவு மிச்சம். மேலும் சமயத்தில் மனிதருக்கு, நல்ல பச்சை மட்டையாக கிடைத்துவிடும்.
அவர் கொடுத்த வீட்டு பாடத்தை செய்யவில்லை என்றால் மனிதர் buttockல் ரத்தம் பார்க்கும் வரை அடித்த சமயங்களும் உண்டு. மாணவிகள் என்றால் உள்ளங்கை தடிக்கும் அளவிற்கு அடி விழும். நாள்பட, மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்யாத நாளன்று, மூன்று அரைக்கால் சட்டை அணிந்து வந்த நாட்களெல்லாம் உண்டு. மாணவர்கள் மூன்று layer அணிந்திருப்பது தெரிந்தால், அதை கழட்ட சொல்லியும் அடி விழும்.
அவரிடம் டியூசன் படிக்க, எங்கள் ஊரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்து எங்கள் பள்ளியில் படிக்கும் நிறைய மாணவர்கள் செல்வது வழக்கம். அந்த மாணவர்களை அவரிடம் கொண்டு வந்து சேர்க்கும் பெற்றோரின் ஒரே எதிர்பார்ப்பு கூட, அவர்கள் பிள்ளைகள் அந்த வருட தேர்வில் பாஸ் ஆவதாக மட்டுமே இருக்கும்.
அந்த ஆசிரியரிடம்,பெற்றோர் கண்ணீருடன் வைக்கும் ஒரு வேண்டுகோள், 'சார்! அடிக்கும் போது கண்ணுல பட்டுடாம அடிங்க சார்'. ஆனால் யாருமே அடிக்காதீங்க என்று கூறியதில்லை.
அதற்கு காரணம், அவர் அப்படி அடித்தாவது நம்ம பையன பெண்ணை, படிக்க வைத்துவிடுவார் என்ற நம்பிக்கை; நாமதான் படிக்கல, நம்ம பசங்களாவது எப்படியாவது படிச்சிரட்டும் என்ற தவிப்பு மற்றும் படிப்பு மட்டுமே நம் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்ற ஒரு எளிய பொது அறிவு.
அப்படி பல இன்னல்களை தாண்டி படிக்க வரும் எளிய எளிய பின்புலம் கொண்ட மாணவர்களை, இரு கரம் கொடுத்து தூக்கி விடுவதே ஒரு அரசின் கடமையாக இருக்க வேண்டும். அத விட்டுட்டு, உனக்கு பொது தேர்வு வைக்கிறேன், NEET தேர்வு வைக்கிறேன் என்று மேலும் சாவடிக்காதீங்க!
0 Comments:
Post a Comment
<< Home